Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் 3 ஆண்டுகளில் ரூ.2,524 கோடியில் பணிகள்

Print PDF

தினமணி 3.11.2009

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் 3 ஆண்டுகளில் ரூ.2,524 கோடியில் பணிகள்

சேலம், நவ. 2: அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,524 கோடியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் அண்ணா நூற்றாண்டு நினைவு மன்ற கூட்ட அரங்கு, தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு ரூ.86.30 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட திட்டப் பணிகளைத் திறந்து வைத்தும், ரூ.1.55 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும் அமைச்சர் பேசியது:

தமிழகத்தில் உள்ள 12,620 ஊராட்சிகள், 561 பேரூராட்சிகளில் கிடைக்கும் நிதியைக் கொண்டு அவற்றிற்கான அடிப்படை வசதிகளை செய்ய முடியவில்லை. எனவே அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,524 கோடியில் தார்சாலை, சிமென்ட் சாலை, நூலகம், வடிகால் வசதி, சுகாதாரப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பேரூராட்சிக்கும் ரூ.50 லட்சம் செலவு செய்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கன்னங்குறிச்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2.40 கோடியில் 104 திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இப்போது ரூ.31 லட்சத்தில் 15 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

கன்னங்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள சாலை பழுதடைந்துள்ளது. இதை பேரூராட்சி நிதியில் இருந்து செலவிட்டு சரி செய்து கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.

உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இரா.ஞானசேகரன், செயற்பொறியாளர் மோகன்ராஜ், பேரூராட்சித் தலைவர் அ.பூபதி, துணைத் தலைவர் தம்பித்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 03 November 2009 07:08