Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சியின் பாதாள சாக்கடை திட்டப்பணி செலவு ரூ. 23 கோடியாக உயர்ந்தது

Print PDF

தினமணி 01.12.2009

நகராட்சியின் பாதாள சாக்கடை திட்டப்பணி செலவு ரூ. 23 கோடியாக உயர்ந்தது

நாமக்கல், நவ. 30: நாமக்கல் நகராட்சியின் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கான மதிப்பீட்டு தொகை ரூ. 23 கோடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, திட்டத்துக்காக பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் மதாந்திர கட்டணம், வைப்புத் தொகையை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. கூட்டம் துவங்கியவுடன் திமுக உறுப்பினர் மா.மு.பாண்டியன் எழுந்து பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக திருத்திய மதிப்பீட்டின் கீழ் வசூலிக்கப்படும் மாதாந்திர கட்டணத்தை அனைத்து வீடுகளுக்கும் சமமாக வசூலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதிமுக உறுப்பினரும், முன்னாள் தலைவருமான கே.பி.பி. பாஸ்கர் பேசுகையில், பாதாள சாக்கடை திட்டத்துக்கான கட்டணம், வைப்புத் தொகைகளில் வணிக நிறுவனங்களுக்கு அதிகளவு உயர்த்தப்பட்டிருப்பதாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து நகர்மன்றத் தலைவர் இரா. செல்வராஜ் பேசியது:

நாமக்கல் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த கடந்த 7.10.2005-ல் நிர்வாக அனுமதி பெறப்பட்டு ரூ. 18.84 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத் திட்டத்துக்கு குடிநீர் வாரியத்தால் ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டபோது உள்ள மதிப்பீடு, துறையினரால் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டை விட கூடுதலாக உள்ளது. மேலும், கழிவுநீரேற்று நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அமைக்கப்படும் இடங்களில் மாற்றம் ஏற்பட்டதாலும், கழிவநீர் பாதிக்கும் குழாய் பணிகள் துவங்கி இரு ஆண்டுகள் கழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்வதாலும் திருத்திய மதிப்பீடு தொகையானது ரூ. 22.95 கோடியாக உயர்ந்துள்ளது.

திருத்திய மதிப்பீட்டின்படி நகராட்சிக்கு கூடுதலாக ரூ. 4.11 கோடி செலவிட நிதி திரட்ட வேண்டும்.

இந்த நிதியை நகராட்சி நிதியிலிருந்தோ, கடன் பெற்றோ செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

எனவே, திருத்திய மதிப்பீடு தொகைக்கு ஏற்ப பொதுமக்களிடமிருந்து பாதாள சாக்கடை இணைப்புக்கான மாதாந்திர கட்டணம், வைப்புத் தொகை உயர்த்தப்படுகிறது.

இதனடிப்படையிலேயே மானிய உதவி பெற வேண்டியுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.

திமுக உறுப்பினர்கள் ஆறுமுகம், இம்ரான், அமுதா, அதிமுக உறுப்பினர்கள் மூர்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

இதற்கு பதில் அளித்து தலைவர் பேசுகையில், மார்ச் மாதத்துக்குள் நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் புதிய சாலை, புதிய குடிநீர்த் திட்டப் பணி, தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைளும் நிறைவேற்றப்படும்.

ஒரு மாத காலத்தில் அனைத்து தெருக்களிலும் பெயர்ப்பலகைகள் வைக்கப்படும் என்றார் அவர்.