Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பரந்து விரிகிறது கோவை மாநகராட்சி எல்லை!

Print PDF

தினமணி 23.12.2009

பரந்து விரிகிறது கோவை மாநகராட்சி எல்லை!

கோவை, டிச.22: கோவை மாநகராட்சி எல்லை 100 .கி.மீ. பரப்பில் இருந்து 500 .கி.மீ.ஆக உயருகிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்ட்ராக பெயர் பெற்ற கோவை, மருத்துவம், கல்வி, தொழில் உள்ளிட்ட துறைகளில் முத்திரை பதித்துள்ளது. இந்தியாவில் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் முதல் 20 நகரங்களில் கோவையும் ஒன்று.

கோவை நகரில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றியுள்ள நகரங்கள், ஊராட்சிகளில் தொழில்நிறுவனங்கள் துவக்கப்பட்டு வருகின்றன. புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களும் அங்கு துவக்கப்படுகின்றன. இதனால், அப்பகுதிகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. இருப்பினும் உள்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அவற்றை பூர்த்தி செய்யும் அளவுக்கு நிதி ஆதாரமும் இல்லை.

எனவே, இவற்றை கருத்தில்கொண்டு கோவை மாநகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை விரைந்து முடிக்கும்படி மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சியில் அடுத்து வரும் மாமன்றக் கூட்டத்தில் மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இத்தீர்மானத்தை அரசுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ள உள்ளாட்சி அமைப்புகள்:

கவுண்டம்பாளையம், குனியமுத்தூர், குறிச்சி, வீரகேரளம், துடியலூர், குருடம்பாளையம், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி, வெள்ளானைப்பட்டி, வடவள்ளி, பேரூர் செட்டிப்பாளையம், வெள்ளலூர், பேரூர், வடவள்ளி, மதுக்கரை, மலுமிச்சம்பட்டி, சீரபாளையம், இருகூர், ஒட்டர்பாளையம், பட்டணம், மைலாம்பட்டி, நீலம்பூர், சின்னியம்பாளையம்.

இதில் குனியமுத்தூர் நகராட்சி, இருகூர் பேரூராட்சி ஆகியவற்றில் ஏற்கெனவே ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள உள்ளாட்சி அமைப்புகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும். அதன்பின்பு மாநகராட்சி எல்லை விரிவாக்கம் தொடர்பான அதிகார பூர்வ அறிவிப்பை மாநில அரசு வெளியிடும்.

இது தொடர்பாக பிற உள்ளாட்சி அமைப்புகளும் தீர்மானம் அனுப்பியப்பின் மக்களிடம் கருத்து கேட்கப்படும். மாநகராட்சி எல்லை விரிவடைந்தால் மாநகராட்சியை ஒட்டிய நகரங்கள், கிராமங்கள் மிகப்பெரிய வளர்ச்சி பெறும் என்கிறார் மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா.

கோவையை சுற்றியுள்ள உள்ளாட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதால் அப்பகுதிகள் வளர்ச்சி பெறுவதுடன், மக்களின் வாழ்க்கை நிலையும் மேம்படுத்த முடியும் என அரசு கருதுகிறது.

மாநகராட்சியில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடியில் ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பாதாள சாக்கடை திட்டம், பில்லூர் 2-வது கூட்டுக்குடிநீர்த் திட்டம், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம், உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பிற உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் இணைக்கும்போது அப்பகுதிகளிலும் இத் திட்டத்தை செயல்படுத்த முடியும். இதனால், அப்பகுதி மக்கள் கூடுதல் வசதி பெற முடியும் என்கிறார் கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம்.

மாநகராட்சியுடன் இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளை ஒப்பிடும்போது கோவை மாநகராட்சியில் சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், குப்பை கட்டணம் உள்ளிட்டவை அதிகம். புதிதாக இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த மக்களுக்கும் இதே போல வரிகளை விதித்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இது குறித்தும் அரசு யோசிப்பது அவசியம்.

Last Updated on Wednesday, 23 December 2009 09:25