Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செம்மொழி மாநாடுக்கு ரூ.112 கோடியில் பணிகள் : கோவை மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமலர் 30.12.2009

செம்மொழி மாநாடுக்கு ரூ.112 கோடியில் பணிகள் : கோவை மாநகராட்சி திட்டம்

கோவை : உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, ரூ.112 கோடியில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

கோவை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் பலரும், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை நகரில் செய்ய வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்படும் பணிகள் பற்றி, விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர். முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடக்கும் கூட்டத்துக்குப் பின்பே, விளக்கம் தர முடியும் என்று மேயர் வெங்கடாசலம் பதிலளித்தார். ஆனால், நேற்று மாலையில் கவுன்சில் கூட்டம் முடிவதற்கு முன், அந்த கூட்டத்தின் கடைசி தீர்மானமாக செம்மொழி மாநாட்டுப் பணிகள் தொடர்பான தீர்மானத்தை கவுன்சிலர்களுக்குத் தரப்பட்டு, அதற்கு அனுமதியும் பெறப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ள பணிகள் விபரம்: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை மாநகராட்சி மூலமாக 112 கோடியே 85 லட்ச ரூபாய் மதிப்பில் பணிகள் செய்யப்படவுள்ளது. பள்ளி கட்டடங்கள், நிர்வாக கட்டடங்கள், மத்திய, நகர பஸ் ஸ்டாண்ட்களை மேம்படுத்துதல், புதிய பூங்காக்கள் அமைத்தல், புதிய தெரு விளக்கு கம்பங்கள் அமைத்தல், உயர் மட்ட கோபுர விளக்குகள் அமைத்தல், மாநாடு மற்றும் ஊர்வலம் நடக்கும் பகுதிகளில் குடிநீர் வசதிகள் செய்ய, மாநகராட்சி பொது நிதியில் 23 கோடியே 60 லட்ச ரூபாய் செலவிடப்படவுள்ளது.சாலைகள் புதுப்பிப்பு: பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்கள், மாநகராட்சி திருமண மண்டபங்களை மேம்படுத்துதல், தற்காலிக துப்புரவுப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தல், புதிதாக நடமாடும் கழிவறை வாகனங்கள் வாங்குதல், பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்துதல், பிரதான ரோடுகளில் இருந்து மாநாடு நடக்கும் இடத்துக்கு செல்லும் இணைப்பு மற்றும் அணுகு சாலைகளைப் புதுப்பிக்க 33 கோடியே 17 லட்ச ரூபாய் செலவிடப்படும்.இந்த பணிகள் அனைத்தும் அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும்.

தனியார் பங்களிப்பு: போக்குவரத்து திடல்கள் அமைத்தல், புதுப்பித்தல், மேட்டுப்பாளையம் ரோடு, அவினாசி ரோடு, திருச்சி ரோடு மற்றும் சத்தி ரோடுகளில் பாதசாரி நடைபாதைகள் அமைத்தல், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் மற்றும் கட்டண முறைக் கழிப்பிட மேம்பாட்டுப் பணிகள், 56கோடியே 6 லட்ச ரூபாய் செலவில், பொது மக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.அவினாசி ரோட்டில் தனியார் பங்களிப்புடன் 30 கோடியே 65லட்ச ரூபாய் மதிப்பில் நடைபாதை அமைக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. கால அவகாசம் குறைவாக இருப்பதால், தனியார் பங்களிப்பைத் தவிர்த்து மாநகராட்சி பொது நிதியில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அத்துடன், ரேஸ்கோர்ஸ்சில் நடைபாதை பூங்காவுடன் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணிக்கு உத்தேசமாக 2 கோடி ரூபாய் மதிப்பில் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தவும் மன்றத்தின் ஒப்புதல் கேட்கப்பட்டது. இந்த பணிகளை மாநகராட்சி பொது நிதியிலிருந்து மேற்கொண்டு, அதன்பின், அரசிடமிருந்து மானியமாக கேட்டுப் பெறலாம் என்று கவுன்சில் ஒப்புதல் வழங்கியது.