Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மாநகராட்சியின் பணிகளை துரிதப்படுத்த சிறப்புக் கூட்டம்

Print PDF

தினமணி 31.12.2009

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மாநகராட்சியின் பணிகளை துரிதப்படுத்த சிறப்புக் கூட்டம்

கோவை, டிச.29: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, மாநகராட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் துரிதப்படுத்த சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மன்றக் கூட்டத்தில் இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் குழுத் தலைவர்கள் பேசியது:

வெ..உதயகுமார்: மாநகரப் பகுதியில் இருக்கும் இணைப்புச் சாலைகளை மேம்படுத்த வேண்டும். மாநாடு நடைபெறும் நாள்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். காந்திபுரத்தில் இருந்து கணபதி வரையிலும், பூ மார்க்கெட்டில் இருந்து தடாகம் சாலையில் மாநகர எல்லை வரையும் சாலையின் இருபகுதியிலும் நடைபாதை அமைக்க வேண்டும்.

மாநகராட்சியின் சார்பில் ஏராளமான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் பணியின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். மாநகராட்சியின் பணிகளைக் கண்காணிப்பதற்குத் தனிக் குழுவை ஏற்படுத்த வேண்டும்.

பி.ராஜ்குமார் (அதிமுக): தெற்கு மண்டல அலுவலகத்தில் நடந்த பிரச்னையில் மன்ற உறுப்பினர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட கட்சியின் பிரச்னையாக இருந்தாலும், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்துள்ளதால் அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டத்தை கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்தி சாலையில் கணபதி பஸ் நிலையம் முதல் சரவணம்பட்டி காவல் நிலையம் வரை விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக மாறி வருகிறது. சாலை ஓரங்களில் தேங்கும் மணலை அப்புறப்படுத்துவதில்லை. இதனால் இரு சக்கர வாகனங்கள் சறுக்கி விழுந்து விபத்து ஏற்படுகின்றன.மாநகரப் பகுதி முழுவதும் கொசுத் தொல்லை அதிகரித்துவிட்டது. வீரியம் மிகுந்த கொசு மருந்து அடிக்க வேண்டும்.

சி.பத்மநாபன் (சிபிஎம்): செம்மொழி மாநாட்டுக்கு இன்னும் 150 நாள்கள் தான் உள்ளன. அதற்குள் எந்தெந்த பணிகளைச் செய்ய முடியும், எந்த பணிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய மாநகராட்சி மன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். விதிமீறிய கட்டடங்கள் மீதான நடவடிக்கை தொடர வேண்டும். இதற்கு முந்தைய காலத்திலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை துண்டு துண்டாக நின்று போய்விட்டன. வரும் காலங்களில் அதுபோன்று ஏற்படாமல் தவிர்க்க, அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

ஆர்.எஸ்.திருமுருகம் (காங்கிரஸ்): செம்மொழி மாநாட்டுக்காக மேற்கொள்ள இருக்கும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். மன்றக் கூட்டத்தில் அனுமதி பெற்று பணிகளைத் துவங்குவது தாமதத்தை ஏற்படுத்தும். அவசர அவசியம் கருதி செய்ய வேண்டிய பணிகளை விரைவில் துவக்கலாம் என்றார்.

Last Updated on Wednesday, 30 December 2009 10:29