Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை வளர்கிறது

Print PDF

தினகரன் (தலையங்கம்) 31.12.2009

சென்னை வளர்கிறது

குடும்பமாக இருந்தாலும், குட்டி அலுவலகமாக இருந்தாலும் நிர்வாகம் செய்வதென்பது சிரமமான விஷயம். ஊரையே நிர்வகிப்பது எத்தனை சிக்கலானது என்பதை சொல்லத் தேவையில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் என்னதான் மெகா திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினாலும் பிரச்னைகள் தீராது; புதிது புதிதாக முளைக்கும். இந்த பின்னணியில் பார்க்கும்போது, ‘சென்னை பெருநகர மாநகராட்சிஎன்ற அமைப்பை உருவாக்க அரசு எடுத்துள்ள முடிவு தவிர்க்க முடியாதது. 174 சதுர கிலோமீட்டர் பரந்திருக்கும் நகரின் தேவைகளை பூர்த்தி செய்யவே திணறும்போது நகரம் 426 சதுர கி.மீ. விரிந்தால் என்ன ஆகுமோ என்ற கவலை பலருக்கு. உலகெங்கும் மகாநகரங்கள் இப்படித்தான் ஒருங்கிணைத்து நிர்வகிக்கப்படுகின்றன. மொத்த மனிதர்களில் பாதி பேருக்கு மேல் மாநகரங்களில் வசிக்கிறார்கள். ஆனால், பூமியில் இவை ஆக்கிரமித்திருக்கும் நிலப்பரப்பு அரை சதவீதத்துக்கும் குறைவு.

போட்டி கடுமையாக இருந்தாலும் வாழ்வதற்கான வாய்ப்புகளை அள்ளித் தருவது மாநகரங்கள் என்பதால் மக்கள் அந்த திசையில் குடி பெயர்ந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் மாநகர நிர்வாகம் புதைமணலாக தோன்றுகிறது. முன்னேறிய நாடுகள் இதற்கான புதிய நுட்பங்களை கண்டறிந்து செயல்படுத்தும்போது, ஏனைய நாடுகளும் தமது சூழலுக்கேற்ப அவற்றை திருத்தி பயன்படுத்துகின்றன. உதாரணமாக மாநகர போக்குவரத்து தலையாய பிரச்னை. ஒவ்வொரு நாடும் வெவ்வேறு வழிகளில் இதற்கு தீர்வு கண்டுள்ளன. நமக்கு எது பொருத்தமாக இருக்கும் என்பதை அடையாளம் கண்டு தத்தெடுப்பதுதான் சவால்.

பொதுவாகவே நமது நாட்டில் பொறுப்புகள் துல்லியமாக வரையறுக்கப்படுவது இல்லை. ஒன்றுக்கு மேற்பட்ட நிர்வாக அமைப்புகள் இருந்துவிட்டால் பொறுப்புகளை தட்டிக் கழிப்பது இன்னமும் சுலபம். எனவே, வளரும் நகரத்துக்கு இணையாக நிர்வாக ஊழியர்களை அதிகரிப்பது பலனளிக்காது என்று பல நாடுகள் புரிந்து கொண்டன. பதிலாக மின்னணு நிர்வாகத்தை நாலாபக்கமும் விஸ்தரிக்கின்றன. 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மக்கள்தொகை அடிப்படையில் புதிய வார்டுகள் அமைக்க ஓராண்டுக்கு மேல் அவகாசம் இருக்கிறது. மிகச்சிறந்தவை என நிரூபணமான நிர்வாக வழிமுறைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்த அதனை பயன்படுத்தலாம்.

Last Updated on Thursday, 31 December 2009 06:14