Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வயர்லெஸ் சாலையில் 2 நாளில் ரோடு அமைச்சர் நேரு உறுதி

Print PDF

தினகரன் 31.12.2009

வயர்லெஸ் சாலையில் 2 நாளில் ரோடு அமைச்சர் நேரு உறுதி

திருச்சி: கனரக வாகனங்களின் போக்குவரத்தால் சேதமடைந்த வயர்லெஸ் சாலையில் 2 நாளில் ரோடு போடப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மாநகராட்சி 35 மற்றும் 37வது வார்டு விமான நிலைய பகுதியில் இலவச கலர் டிவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று அன்னை ஆசிரம பள்ளி வளாகத்தில் நடைபெற் றது. கலெக்டர் சவுண் டையா தலைமை வகித்தார். கலர் டிவி வழங்கும் திட்டத்தை துவக்கிவைத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வர் அறிவித்தது போலவே அனைவருக்கும் இலவச கலர் டிவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. வரும் மார்ச்சுக்குள் 40 லட்சம் தொலைக் காட்சிப் பெட்டிகளை தயாரிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. எனவே இன்னும் இரு மாதத்தில் விடுபட்டுள்ள எல்லாருக்கும் டிவிக்கள் வழங்கப்படும்.

குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநகராட்சியில் அமைக்கப்பட்டு வரும் 35 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் 3 தொட்டிகள் விமான நிலைய பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றது. எனவே இன்னும் 6 மாதத்தில் இப்பகுதியில் குடிநீர் பிரச்னை முற்றிலும் தீர்ந்துவிடும்.

விமான நிலையப் விரிவாக்கப் பணிகளுக்காக, ஏர்போர்ட் மேற்கு பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக கிழக்கே நத்தமாடிப்பட்டி பகுதியில் தரிசு நிலங்கள்தான் கையகப்படுத்தப்பட உள்ளது. அங்கே நிலம் எடுப்பதற்கு பதிலாக உரிமையாளர்களுக்கு தற்போதுள்ள நிலவரப்படி தொகை கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீடு இடிக்கப்படும் நிலை வந்தால், வீடு கட்ட தொகையும், இடத்திற்கு மாற்று இடமும் கொடுக்கின்றோம். எனவே யாரும் அது பற்றி கவலைப்பட தேவையில்லை. மேலும் ஜவர்ஹர்லால் நேரு ஊரகப் பகுதிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகள் தலா ரூ.3 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுவிட்டன. திருச்சியிலும் அத்திட்டத்தின் கீழ் நிதியை பெற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு பெற்றுவிட்டால் மாநகராட்சியில் எல்லா அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும்.

வயர்லெஸ் ரோடு வழியாக வரும்போதுதான் அந்த ரோட்டின் நிலையை அறிந்தேன். போக்குவரத்து மாற்றப்பட்டு இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் திருப்பி விடப்பட்டதால்தான் ரோடு இவ்வாறு சேதமடைந்தது. ஏற்கனவே திமுக ஆட்சியில்தான் இந்த ரோடு போடப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரோடு போடப்பட உள்ளது. இன்னும் 2 நாளில் ரோடு போட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

35வது வார்டு பகுதியில் வசிக்கும் 1,950 குடும்பத்தினருக்கு இலவச வண்ண தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. அதேபோல இதே பகுதியில் உள்ள 37 வார்டுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 1,305 குடும்பத்தினருக்கும் டிவிக்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கவுன்சிலர் காளீஸ்வரன் செய்திருந்தார். டிஆர்ஓ தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி மேயர் சுஜாதா, எம்எல்ஏக்கள் சேகரன், அன்பில் பெரியசாமி, துணை மேயர் அன்பழகன், கமிஷனர் பால்சாமி, கவுன்சிலர் ஆர்.சி.கணேசன், கிராப்பட்டி செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Thursday, 31 December 2009 06:16