Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செம்மொழி மாநாடு:புதிய பூங்கா உருவாக்க மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமணி 31.12.2009

செம்மொழி மாநாடு:புதிய பூங்கா உருவாக்க மாநகராட்சி திட்டம்

கோவை, டிச.30:உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை மாநகராட்சி சார்பில் ரூ.112.85 கோடியில் பல்வேறு பணிகளைச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜூன் 23 முதல் 27}ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறுகிறது. இதையொட்டி மாநகராட்சி சார்பில் ரூ.23.6 கோடியிலும், அரசின் நிதியுதவியில் ரூ.33.2 கோடியிலும், தனியார் பங்களிப்புடன் ரூ.56 கோடியிலும் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சி நிதியில் பள்ளி கட்டடங்கள், நிர்வாகக் கட்டடங்கள், பஸ் நிலையங்கள் மேம்படுத்தப்படும். புதிய பூங்காக்கள் உருவாக்கப்படும். உயர்கோபுர மின் விளக்குகள், தெருவிளக்குகள், குடிநீர் வசதி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழக அரசின் நிதியுதவியில் பள்ளிக் கழிவறைகள், மாநகராட்சி திருமண மண்டபங்கள், பொதுக் கழிப்பிடங்கள் மேம்படுத்தப்படும். இணைப்பு மற்றும் அணுகு சாலைகள் புதுப்பிக்கப்படும். நடமாடும் கழிப்பறைகள் வாங்கப்படும்.

தனியார் பங்களிப்பில், அவிநாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலைகளில் நடைபாதைகள் அமைக்கப்படும்.ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், கட்டண கழிப்பிடங்கள் மேம்படுத்தப்படும்.

Last Updated on Thursday, 31 December 2009 10:05