Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை குளங்களில் படகு சவாரி! தமிழக அரசு உத்தரவு

Print PDF

தினமலர் 21.01.2010

கோவை குளங்களில் படகு சவாரி! தமிழக அரசு உத்தரவு

கோவை : குளங்களை மேம்படுத்தி கரையோர பூங்கா, படகு சவாரி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த, கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவையில் கோளராம்பதி குளம், நரசாம்பதி குளம், கிருஷ்ணாம்பதி குளம், செல்வம்பதி குளம், முத்தண்ணன் குளம், செல்வசிந்தாமணி குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் மற்றும் சிங்காநல்லூர் குளம் உள்ளது. இதுவரை, பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் இருந்த இக்குளங்கள் அனைத்தும் சமீபத்தில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் வந்தன.

எனினும், குளங்களை சீரமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் போது, முன்பு பொதுப்பணித்துறை பின்பற்றிய விதிமுறைகளை மாநகராட்சி தொடர வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வந்துள்ள இக்குளங்களை பராமரித்து சீரமைக்க, மூன்று ஆண்டுகளுக்கு முன் 127 கோடி ரூபாயில் திட்டம் தயாரித்திருந்தது பொதுப்பணித்துறை. தற்போது, மாநகராட்சியின் கீழ் குளங்கள் வந்த பின், இந்த குளங்களை மேம்படுத்த மேலும் கூடுதல் செலவு ஏற்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், குளங்கள் பராமரிப்பு குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு, தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு: குளங்களை குத்தகை முறையில் சீரமைத்து பராமரிக்க வேண்டும். மொத்த திட்ட மதிப்பீட்டில் 30 சதவீத தொகையை மாநகராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டும். மேலும், 90 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் பொதுப்பணித்துறையிடம் இருந்து குளங்களை பராமரிக்கும் பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி நிர்வாகம், மன்றத்தில் ஒப்புதல் பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் குறைந்த பட்ச மதிப்பீடு கட்டணம் செலுத்த வேண்டும். குளங்களில் மீன் பிடிக்க ஏற்கனவே குத்தகை வழங்கப்பட்டுள்ளது.

எனினும், சீரமைப்பு பணி நடக்கும் போது மீன் பிடிக்க அனுமதியில்லை. எனவே, விகிதாச்சார முறையில் குத்தகை தொகையை மீன் பிடிப்பாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் வழங்கவேண்டும். மேலும், குளங்களில் உள்ள வாய்க்காலில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால், நீர் நிலைக்கான இடத்தை விட்டுத்தராமல் முழுவதையும் சீரமைத்து குளங்களை மேம்படுத்த வேண்டும். குளக்கரையில் பூங்கா, நடைபாதை, அலங்கார மின் விளக்கு வசதிகள் செய்தல். தேவைப்படும் இடத்தில் படகு சவாரி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Last Updated on Thursday, 21 January 2010 07:37