Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செம்மொழி மாநாட்டு பணிகளை ஒரு மாதத்துக்கு முன்பே முடிக்கவும் : அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு

Print PDF

தினமலர் 25.01.2010

செம்மொழி மாநாட்டு பணிகளை ஒரு மாதத்துக்கு முன்பே முடிக்கவும் : அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு

கோவை : செம்மொழி மாநாடு நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுக்கு துணை முதல்வர் ஸ்டாலின் ஆய்வுக்கூட்டத்தில் உத்தரவிட்டார்.

கோவையில் ஜூன்., 23 முதல் 27 வரை நடக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அளித்த பதில் வருமாறு: நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன்: மாநாட்டை யொட்டி 17 ரோடுகள் 96 கி.மீ தூரத்திற்கு அமைப்பதற்கு 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது. பணிகள் துவங்க உள்ளன. திருச்சி ரோடு விரிவுபடுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. மாநாடு நடக்கும் போது வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தம் செய்ய மாவட்ட எல்லையில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்க இடம் தேர்வு செய்து வருகிறோம்.

மேட்டுப்பாளையம் ரோடு பணிகள் துவங்குவதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்கள் கூட்டம் வரும் 5ம் தேதி டில்லியில் நடக்கிறது. அப்போது மாநாட்டு சிறப்பு குறித்து எடுத்து சொல்லி மேட்டுப்பாளையம் ரோட்டை அகலப்படுத்தும் பணியை துவக்க அறிவுறுத்துவேன், என்றார்.

ஊரகத்தொழில் துறை அமைச்சர் பழனிசாமி: சிறைச்சாலை வளாகத்தை வெள்ளலூருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சிறை வளாகம் கட்டும் பணிகள் விரைவாக துவங்கும். தற்போது சிறை உள்ள இடத்தில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.

மேயர் வெங்கடாசலம்: மாநகராட்சி சார்பில் மேட்டுப்பாளையம் ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு வருகிறது பணிகள் ஏப்ரல் மாதம் முடிவடையும். காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கு ஐந்து ஏக்கர் நிலம் தேவைப்படும். அதற்கான நிலம் சிறை இடமாற்றம் செய்யும்போது பஸ் ஸ்டாண்டையொட்டியுள்ள இடத்தை பயன்படுத்தி விஸ்தரிக்கலாம். அவிநாசி ரோட்டின் இருபக்கமும் நடைபாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. 28 கோபுர விளக்குகள் அமைக்கப்படும். அனைத்து பூங்காக்களும் அழகுபடுத்தப்படும்.

மாநகாரட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா: 26 கோடி ரூபாயில் கோவை நகரிலுள்ள பல்வேறு ரோடுகள் தேர்வு செய்யப்பட்டு, சரிப்படுத்தவும், விஸ்தரிக்கவும், புதிதாக ரோடு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கலெக்டர் உமாநாத்: வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பணிகள் மார்ச் மாதம் நிறைவடையும். மாநாட்டின் போது மழை பெய்யும் நிலை ஏற்பட்டால், அரங்கம் விட்டு மற்றொரு அரங்கிற்கு செல்வதற்கு, மூடிய நடைபாதை அமைக்கப்படும். அவிநாசி ரோடு ஹோப் கல்லூரி ரயில்வே பாலப்பணி வேகமாக நடக்கிறது. ரயில்வே ஸ்டேஷன் அழகுபடுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஸ்டேஷன் செல்ல சப்வே அமைக்கும் ஏழு கோடி ரூபாய் பணிக்கு இடம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. அவிநாசி ரோடு, திருச்சி ரோட்டில் 55 கோடி ரூபாயில் தரைக்கடியில் கேபிள் வழியாக மின் ஒயர்கள் அமைக்கும் பணியை மின் வாரியம் துவக்கியுள்ளது.

அதிகாரிகள், அமைச்சர்கள் அளித்த பதில்களை கேட்ட துணை முதல்வர் ஸ்டாலின் மாநாடு நடப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக அனைத்து பணிகளையும் நிறைவு செய்யவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் சிவணான்டி, எஸ்.பி., கண்ணன் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 25 January 2010 06:26