Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பழனி நகர வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்: அமைச்சர்

Print PDF

தினமணி 25.01.2010

பழனி நகர வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்: அமைச்சர்

பழனி, ஜன. 24: பழனி நகரின் வளர்ச்சிக்கு தமிழக அரசு செய்ய வேண்டிய உதவிகள் அனைத்தும் பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்படும் என தமிழக வருவாய் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் இ. பெரியசாமி தெரிவித்தார் பழனி மூலக்கடையில் நேதாஜி மணிமண்டபம் திறப்பு விழா மற்றும் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வள்ளலார் தலைமை வகித்தார். அரசு கொறடா அர. சக்கரபாணி, திண்டுக்கல் எம்.பி., சித்தன், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்றத் துணைத் தலைவர் ஹக்கீம் வாழ்த்துரை வழங்கினார். பழனி நகர்மன்ற தலைவர் ராஜமாணிக்கம் வரவேற்றார்.

அப்போது, பழனியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை 1953-ம் ஆண்டு மறைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தலைமையில் திறக்கப்பட்டது. இதன் கீழ்பீடம் கரிய கல்லாலும், சிலை முழுக்க சோழிபட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவப்பு நிற மார்பிளால் செதுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

நேதாஜியின் 114-வது பிறந்த நாளில் இந்த சிலைக்கு மணிமண்டபம் சுமார் 6 லட்சம் செலவில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

பழனி நகராட்சிக்கு திருவிழா காலங்களில் அதிகச் செலவுகள் நேரிடும் நிலையில், தேர் வீதிகளுக்கு திருக்கோயில் நிதி ஒதுக்க அமைச்சர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து மணிமண்டபத்தை திறந்து வைத்து தலைமையுரை நிகழ்த்திய அமைச்சர் பெரியசாமி, தமிழகத்திலேயே திருக்கோயிலில் இருந்து நகராட்சிக்கு அதிக நிதி பெற்றுத் தரப்பட்டுள்ளது. பஸ் நிலைய விரிவாக்கத்துக்கு பல கோடி ரூபாய் பெற்றுத் தரப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும், பழனி நகரை மேம்படுத்த மாவட்ட அமைச்சர் என்ற முறையில் மாநில அரசிடம் இருந்து வேண்டிய நிதிகளைப் பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். சுமார் ரூ. 2.71 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளின் அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேதாஜி சுபாஷ் படையில் பணியாற்றியவர்களுக்கு மரியாதைகள் செய்யப்பட்டன. பழனி நகராட்சி ஆணையர் சித்திக் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் சுரேஷ்குமார், நகர திமுக செயலாளர் வேலுமணி, ஒன்றிய செயலாளர் மாரியப்பன், நகர்மன்ற ஆணையர், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 25 January 2010 06:40