Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரம்பலூரில் ரூ.151 கோடி திட்டப்பணி துணை முதல்வர் ஃபிப்.,4ல் துவக்கிவைப்பு

Print PDF

தினமலர் 02.02.2010

பெரம்பலூரில் ரூ.151 கோடி திட்டப்பணி துணை முதல்வர் ஃபிப்.,4ல் துவக்கிவைப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் ஃபிப்., நான்காம் தேதி 151 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார் என கலெக்டர் விஜயகுமார் கூறினார். இது குறித்து நிருபர்களிடம் கலெக்டர் மேலும் கூறியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் காரை கிராமத்தில் இரண்டு கோடியே 37 லட்சத்து 43 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமத்துவபுரத்தை தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் ஃபிப்., நான்காம் தேதி திறந்து வைக்கிறார். தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் ஒரு கோடியே 69 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சிறுவர் பூங்கா, 69 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் விளையாட்டு அரங்கம், பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் சைக்கிள் ஸ்டாண்ட், பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் துறைமங்கலம் அரசு குடியிருப்பில் பூங்கா, மாத்தூர்-திட்டக்குடி சாலை, பெரம்பலூர்-ஆத்தூர் சாலை, கிருஷ்ணாபுரம்-பூலாம்பாடி சாலை, நெய்க்குப்பை-சாத்தனவாடி-மேட்டுப்பாளையம்- வாலிகண்டபுரம் சாலை, ஆலத்தூர்-அரியலூர் சாலை, அயனாபுரம் சாலை, கொளக்காநத்தம்-கருடமங்கலம் சாலை ஆகிய சாலைகளில் பாலங்கள் என மொத்தம் 115 பணிகளுக்கு 23 கோடியே 22 லட்சத்து 74 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களை பெரம்பலூரில் நடக்கும் அரசு விழாவில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

அடிக்கல் நாட்டும் பணிகள்: 97 கோடி ரூபாய் மதிப்பில் குன்னம் அருகே அரசு மருத்துவக்கல்லூரி, எட்டு கோடி ரூபாய் மதிப்பில் வேலூர் கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, இரண்டு கோடியே 49 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் அயன்பேரையூர் கிராமத்தில் சமத்துவபுரம், பாளையம் கிராமத்தில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளிக்கூடம், மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் ஒரு கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த கூட்டுறவுத்துறை அலுவலகம், வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டத்தில் 50 லட்சம் மதிப்பில் விதை கிடங்கிற்கான கட்டிடம், ஒரு கோடியே 81 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் என 17 அரசு புதிய கட்டிடங்களுக்கு 112 கோடியே 25 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பில் பெரம்பலூரில் நடைபெறும் அரசு விழாவில் அடிக்கல் நாட்டுகிறார்.

விழாவில் 15, ஆயிரத்து 366 பயனாளிகளுக்கு 16 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

ஆக 112. 25 கோடி ரூபாய் மதிப்பிலான 17 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 23.23 கோடி ரூபாய் மதிப்பிலான 115 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், 15 ஆயிரத்து 366 பயனாளிகளுக்கு 16.40 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 151 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்டப்பணிகளை தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். விழாவில் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராசா, மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை இணை அமைச்சர் நெப்போலியன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Last Updated on Tuesday, 02 February 2010 06:37