Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செம்மொழி மாநாடு: சாலை, பூங்கா மேம்பாட்டுக்கு ரூ.35 கோடி

Print PDF

தினமணி 05.02.2010

செம்மொழி மாநாடு: சாலை, பூங்கா மேம்பாட்டுக்கு ரூ.35 கோடி

சென்னை, பிப்.4: செம்மொழி மாநாட்டை ஒட்டி கோவையில் மாநகராட்சிக்குச் சொந்தமான சாலை, கழிப்பறை மற்றும் பூங்காக்களின் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.35 கோடி ஒதுக்கப்படுவதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் ஜூன் 23}ம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாடு நடைபெறுவதை ஒட்டி, கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சி மற்றும் அரசு சார்பில் தனித்தனியே இந்தப் பணிகள் செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து, அரசுத் துறை வட்டாரங்களிடம் கேட்ட போது, ""மாநகராட்சி சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் ரூ.27 கோடி ஒதுக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை ஓரிரு நாளில் நிதித் துறை வெளியிடும். மேலும், அங்குள்ள பூங்காக்கள், கழிப்பறைகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தி அழகுபடுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.7 கோடியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தன.

பல்வேறு திட்டங்கள்...கோவை மாநகரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் மின்சார வாரியம், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளும் இறங்கியுள்ளன.

நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலைகள் ரூ.60 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அவினாசி, திருச்சி செல்லும் சாலைகளில் மின்கம்பிகள் கம்பங்கள் வழியே மேலே செல்கின்றன. அவற்றை பூமிக்கு அடியில் கொண்டு செல்ல ரூ.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், ஊராட்சி, பேரூராட்சி சாலைகளின் சீரமைப்புப் பணிக்கு தனியாக ரூ.4 கோடி செலவிடப்படுகிறது.

உடனடியாக மேற்கொள்ளப்படுமா? உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி, நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை உடனடியாக முடிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக அரசுத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ""சாலை உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் மாநாடு தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிக்கப்படும். இப்போதே அனைத்துப் பணிகளையும் முடித்தால் சாலை, சுவர் உள்ளிட்டவற்றின் பொலிவு குறைந்து விடும். மாநாட்டின் போது அதன் சிறப்புத் தெரியாது. எனவே, நிதி ஒதுக்கல், மேம்பாட்டுப் பணிகளில் எந்தத் தாமதமும் ஏற்படவில்லை'' என்று விளக்கம் அளித்தனர்.