Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தினமணி செய்தி எதிரொலி: ராயபுரம் ராபின்சன் பூங்கா ரூ.30 லட்சத்தில் சீரமைப்பு

Print PDF

தினமணி 09.02.2010

தினமணி செய்தி எதிரொலி: ராயபுரம் ராபின்சன் பூங்கா ரூ.30 லட்சத்தில் சீரமைப்பு

சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவை அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆய்வு செய்த மேயர் மா. சுப்பிரமணியன்.

திருவொற்றியூர், பிப். 8: ராபின்சன் பூங்கா ரூ.30 லட்சம் செலவில் விரைவில் சீரமைக்கப்படும் என மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்கா பழமையானது. 1948-ல் தி.மு.. துவக்கப்பட்ட இடமும் இதுதான். இப்பூங்கா சரிவர பராமரிக்கப்படாமல் மோசமான நிலையில் இருப்பது குறித்து தினமணி 'ஆராய்ச்சி மணி' பகுதியில் திங்கள்கிழமை வெளியானது.

முதல்வர் உத்தரவு: இதனைப் படித்த முதல்வர் மு.கருணாநிதி, உடனே பூங்காவைப் பார்வையிடும்படி மாநகராட்சி மேயருக்கு உத்தரவிட்டார்.

இதனை அடுத்து காலை 9 மணிக்கு அதிகாரிகளுடன் மேயர் மா.சுப்பிரமணியன் ராபின்சன் பூங்காவை பார்வையிட்டார். செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த குறைகளை நேரடியாக பார்த்த மேயர் பூங்காவை மேம்படுத்தும் பணிகள் குறித்து அங்கேயே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:

பூங்கா குறித்த செய்தியை அதிகாலையிலே முதல்வர் பார்த்துவிட்டார். உடனடியாகச் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் எனக்கு உத்தரவிட்டார்.

இங்கு வந்து பார்த்தபோது செய்தியில் கூறப்பட்டிருந்த குறைகள் சரியானதுதான் என புரிந்தது. இப்பூங்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ரூ.16 லட்சம் செலவில் யோகா மையம், ஓடுகள் பதிக்கப்பட்ட நடைபாதை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டன.

முன்பு சுமார் 200 பேர் வரை உபயோகித்த இப்பூங்காவுக்கு தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பூங்காவை சீரமைத்து புதிய வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டியது அவசியம்தான்.

ரூ.30 லட்சத்தில் புதிய வசதிகள்: இதன்படி பழைய நீரூற்றை அகற்றி விட்டு ரூ.9 லட்சம் செலவில் புதிய நீரூற்று, ரூ.5 லட்சம் செலவில் புதிய கழிப்பிடம், ரூ.5 லட்சம் செலவில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா, ரூ.3 லட்சம் செலவில் அலங்கார விளக்குகள், ரூ.2 லட்சம் செலவில் குடிநீர் தொட்டி, சுவர் அலங்காரம் உள்ளிட்ட பணிகள் என ரூ.30 லட்சம் செலவில் இப்பூங்கா நவீனப்படுத்தப்படும்.

இதற்கான பணிகள் 3 மாதங்களுக்குள் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மாதிரி பூங்கா: சுற்றுச்சுவர்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு புவி வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வு படங்கள் வரையப்படும்.

தி.மு..வை இந்த பூங்காவில் அண்ணா துவக்கியதை நினைவுபடுத்தும்வகையில் நினைவு சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அண்ணாவின் பொன்மொழிகள் பதிக்கப்பட்ட புதிய நினைவு சிற்பங்கள் அமைக்கப்படும். இவ்வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்ட பிறகு சென்னை மாநகரின் மாதிரி பூங்காவாக இந்த பூங்கா இருக்கும் என நம்புகிறேன்.

நுழைவுக் கட்டணம் ரத்து: பூங்காவை சமூக விரோதிகள் சிலர் பயன்படுத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து காவல் துறை துணை ஆணையருடன் பேச உள்ளேன். மேலும் இங்கு வசூலிக்கப்படும் ஒரு ரூபாய் நுழைவுக் கட்டணம் திங்கள்கிழமை முதல் ரத்து செய்யப்படுகிறது. இனி இலவசமாக ராபின்சன் பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தலாம். முறையாக பூங்காவை பராமரிக்க ஊழியர்கள், காவலாளிகள் விரைவில் நியமிக்கப்படுவர் என்றார் மேயர்.

Last Updated on Tuesday, 09 February 2010 06:58