Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செம்மொழி மாநாடு: சர்க்யூட் ஹவுஸ் மேம்படுத்த ரூ.2.63 கோடி

Print PDF

தினமலர் 18.02.2010

செம்மொழி மாநாடு: சர்க்யூட் ஹவுஸ் மேம்படுத்த ரூ.2.63 கோடி

கோவை : கோவை சுற்றுலா மாளிகையை மேம்படுத்த, இரண்டு கோடியே 63 லட்ச ரூபாய் நிதி, அரசிடம் கோரப்பட்டுள்ளது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான தங்குமிட ஏற்பாட்டுக் குழு கூட்டம், ஊரக தொழில் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் அவர் பேசியதாவது: கோவை சுற்றுலா மாளிகையை மேம்படுத்த இரண்டு கோடியே 63 லட்ச ரூபாய் தேவையென்று அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, விரைவில் பெறப்படும். கோவை நகரில் அரசுத்துறைகளின் கட்டுப் பாட்டிலுள்ள அனைத்து சுற்றுலா மாளிகைகளும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை நகரிலுள்ள அரசுக் கல்லூரி, தனியார் கல்லூரியில் எவ்வளவு அறைகள் உள்ளன என்ற விபரத்தையும் சேகரிக்க வேண்டும்.

கோவை மாநகராட்சியில் 15 திருமண மண்டபங்கள், 94 லட்ச ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படுகின்றன. நகரில் 160 திருமண மண்டபங்களும், வெளியே 66 திருமண மண்டபங்களும் உள்ளன. இவற்றில், வெளிமாவட்டத்திலிருந்து வரும் கலைஞர்களை, தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரைத் தங்க வைக்கலாம். திருமண மண்டபங்களை வர்ணம் பூசி, குடிநீர்த் தொட்டிகளை சரி செய்து, கழிவறை வசதிகளை மேம்படுத்துமாறு மண்டப உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதப்படும். கோவையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஓட்டல்களை மாநாட்டுக்கு முன்பாக முடிக்குமாறு கேட்டுக்கொள்ளலாம்.

ஊட்டி மற்றும் குன்னூர் நகரங்களில் உள்ள அறைகள் அனைத்தையும் முன் கூட்டியே பதிவு செய்து வைக்கலாம். விருந்தோம்பல் குழு மற்றும் போக்குவரத்து குழுவுடன் கலந்தாலோசித்து, இறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அமைச்சர் பழனிச்சாமி பேசினார். கூட்டத்தில், திருப்பூர் மேயர் செல்வராஜ், கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 18 February 2010 06:51