Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செம்மொழி மாநாட்டு பணி திருப்தியளிக்கிறது : மாநகர மேம்பாட்டுகுழு கூட்டத்தில் நம்பிக்கை

Print PDF

தினமலர் 11.03.2010

செம்மொழி மாநாட்டு பணி திருப்தியளிக்கிறது : மாநகர மேம்பாட்டுகுழு கூட்டத்தில் நம்பிக்கை

கோவை : கோவையில் நடக்க உள்ள செம்மொழி மாநாட்டையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் திருப்தியளிப்பதாக கலெக்டர் உமாநாத் கூறினார். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக ஏற்படுத்தபட்ட கோவை மாநகர மேம்பாட்டு குழு கூட்டம் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடந் தது. கூட்டத்திற்கு தலைவரும் மேயருமான வெங்கடாசலம் தலைமை வகித்தார்.

கலெக்டர் உமாநாத் பேசியதாவது: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரில் துவங்கப்பட்டுள்ள பணிகள் வேகமாக நடந்து வருவது திருப்தியளிக்கிறது. அரசிடம் நிதியை எதிர்நோக்கியிருந்த அரசாணைகள் வந்துவிட்டன. சாலைப் பணிக்காக 13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒரு பணியை நிறைவு செய்தபின், மற்ற துறையினர் அப்பணியை மேற்கொள்ள வேண்டிய நிலையிருந்தால், அது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் தகவல் தெரிவிக்கலாம்.

இது வரை சாலை வரைபடம் குறித்து விவாதிக்கப்படவில்லை. அவிநாசிரோடு, திருச்சி ரோட்டை இணைக்கும் இணைப்பு சாலைக்கு மூன்று ஏக்கரை தனியார் தான் கிரயம் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளனர். அதன் பின்பு ரோடு விஸ்தரிக்கும் பணிகளும், ரோடுபோடும் பணியும் துவங்கும். மருத்துவத்துறையினர் மாநகர மேம்பாட்டுக்குழுவுடன் இணைந்து செயல்பட வேண்டும், மருத்துவத்துறைக்கு ஏழு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அத்துறையினர் மேற்கொள்ள வேண்டும். குடிநீர், மின்சார துறை அதிகாரிகள் தடங்கள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும், என்றார் கலெக்டர்.

துணை மேயர் கார்த்திக் பேசியதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்பு பில்லூர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. விநியோகம் பாதிக்கப்பட்டது. மக்கள் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே நிலை செம்மொழி மாநாட்டின் போது ஏற்படக்கூடாது. இரு துறைகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்னதான் மக்களுக்கு நாம் நல்ல விஷயங்களை செய்தாலும் குடிநீர் இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும். அதனால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சவுரிபாளையம், உப்பிலிபாளையம் ரோட்டில் ரோடு பணிகள் நிறைவடைந் துள்ளன; ஆனால் மின் கம்பங்கள் அகற்றப்படவில்லை என்றார்.

பதிலளித்த மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலகிருஷ்ணன்: அவிநாசி ரோடு பணிகள் முழுமையடைந்துள்ளன. மற்ற பணிகள் விரைவாக முடிக்கப்படும். துணை மேயர் குறிப்பிட்ட பணிகளை மூன்று நாள் கால அவகாசத்தில் முடித்து விடுவோம், என்றார்.

குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் வேலுசாமி: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் நிரஞ்சன் மார்டி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, பில்லூர் பகுதியில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க ஆலோசனைகளை வழங் கியுள்ளார். அதன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.

மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா : மாநகராட்சி 75.27 கி.மீட்டருக்கு 76 ரோடுகளை புதுப்பிக்க 26.31 கோடியை ஒதுக்கி உள்ளது. ஏழு ரோடு பணிகள் முடிந்தன; 38 பணி நடந்து வருகிறது. மேலும் 31 பணிகள் துவங்க உள்ளன. இவை ஏப்ரல் 30ம் தேதிக்குள் முடிக்கப்படும்.

இது தவிர மாநகராட்சி பள்ளி கழிப்பிடம், திருமண மண்டபங்கள் பராமரிக்கப்படுகிறது. அவிநாசிரோட்டில் 20 பேருந்து நிழற்குடை, பிரதான ரோடுகளில் அலங்கார நீர் ஊற்று, சாலையோர பூங்கா மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ரேஸ்கோர்ஸ் பகுதியில் மழைநீர் வடிகால், நடைபாதை, சாலையோர பூங்கா அமைத்தல், ரோடு பராமரிப்பு பணிமேற்கொள்ளப் பட்டு வருகிறது, என்றார்.

கூட்டத்தில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் குமரன், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜா, மாநகராட்சி நகர்நல அலுவலர் தங்கராஜ், நகரமைப்பு அலுவலர் சவுந்தர்ராஜன், உதவி பொறியாளர்கள் சுகுமாரன், கணேஷ்வரன் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 11 March 2010 06:03