Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாவட்டத்தில் ரூ. 500 கோடியில் பணிகள்: ஆட்சியர்

Print PDF

தினமணி 12.03.2010

நெல்லை மாவட்டத்தில் ரூ. 500 கோடியில் பணிகள்: ஆட்சியர்

திருநெல்வேலி, மார்ச் 11: திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் பெருந்திட்டங்கள் தவிர்த்து அரசுத் துறைகள் மூலம் ரூ. 500 கோடி மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு அவற்றில் 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் தெரிவித்தார்.

இம் மாவட்ட 12-வது திட்டக் குழுக் கூட்டம் அதன் தலைவர் ம. கிரஹாம்பெல் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவரான மாவட்ட ஆட்சியர் ஜெயராமன், செயலர் கோ. குருநாதன், மாவட்ட திட்ட அலுவலர் அர. சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தை தொடக்கி வைத்து ஆட்சியர் மேலும் பேசியதாவது:

இம் மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் ரூ. 500 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய 20 சதவீதப் பணிகளும் இம் மாத இறுதிக்குள் அல்லது ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

நாட்டிலேயே முன்னோடியாக மேற்கொள்ளப்பட்டு வரும் நதி நீர் இணைப்பு திட்டமான தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டம் ரூ. 369 கோடியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அது தனி திட்டமாகும். இந்த திட்டத்தில், கான்கிரீட் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டமானது 2012-ல் நிறைவு பெறும்.

கடந்த 2008-09 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தற்போது 5 பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. அந்தப் பணிகளையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் ரூ. 16.5 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் இந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவு பெறும். தென்காசியில் ரூ. 24.5கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் அங்குள்ள புதிய பஸ்நிலையத்திற்கு வாகனங்கள் செல்வதில் சிக்கல் உள்ளதாக புகார் வந்தது. எனவே, அந்த இடத்தை ஆய்வு செய்து தற்போது 1.6 கி.மீ. தொலைவுக்கு மாற்றுச்சாலை அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப பூங்கா: கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்டப் பணிகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடையும். நான்குனேரி தொழில்நுட்ப பூங்கா திட்டத்தில் பல்வேறு முகமைகள் ஈடுபட்டுள்ளன.

அந்த திட்டத்திற்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தனியாக தண்ணீர் கொண்டு வரும் திட்டம் ரூ. 3 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது.

கலைஞர் வீட்டுவசதி திட்டம்: கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை நிறைவேற்ற மாவட்டத்தில் உள்ள 19 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒரு கிராமம் வீதம் தேர்வு செய்து மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 362 குடிசைகள் மட்டுமே உள்ளன.

அந்த வகையில் இம் மாவட்டம் முன்னேறிய மாவட்டமாக உள்ளது. அடுத்து, ûனைத்து கிராமங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

திட்ட அலுவலர் அர. சங்கர் பேசியதாவது: கடந்த 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இம் மாவட்டத்தில் 36 ஆயிரம் குடிசை வீடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இப்போது மேற்கொள்ளப்பட்ட மாதிரி கணக்கெடுப்பில் குடிசை வீடுகள் குறைவாகவே உள்ளன. எனவே, மாவட்டத்தில் முன்பைவிட இப்போது குறைவான அளவிலேயே குடிசைகள் இருக்க வாய்ப்புண்டு.

இம் மாதம் 29 ஆம் தேதி முதல் முழுக் கணக்கெடுப்பு நடைபெறும். அதில் 2001-ல் இருந்ததைவிட மூன்றில் ஒரு பங்கு மட்டுமே குடிசை வீடுகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

கூட்டத்தில், உறுப்பினர்கள் பேசும்போது அறிவிக்கப்படாத மின்வெட்டினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார் கூறினர்.

ஒரிசாவில் இருந்து பெறப்படும் மின்சாரத்தில் குறைவு ஏற்பட்டதாலும், நமது மாநிலத்தில் உற்பத்தியில் பிரச்னை ஏற்பட்டதாலும் மின்தடை ஏற்பட்டது என்றும், இப்போது நிலைமை முன்னேறி வருவதாகவும் மின்துறை அதிகாரிகள் பதிலளித்தனர்.

வடக்கு பச்சையாறு அணையில் இருந்து நான்குனேரி பகுதியில் உள்ள 46 குளங்களுக்கு தனிக் கால்வாய் அமைக்க வேண்டும் என்றும், கால்வாய் இல்லாததால் இந்த ஆண்டு சுமார் 20 குளங்களின் பாசன நிலங்களில் நஞ்சை பயிர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுப்பினர் தங்கராஜ் தெரிவித்தார்.

தனிக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

Last Updated on Friday, 12 March 2010 10:14