Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

'மை லேடீஸ்' பூங்கா நீச்சல் குளம் 15 நாளில் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

Print PDF

தினமலர் 19.04.2010

'மை லேடீஸ்' பூங்கா நீச்சல் குளம் 15 நாளில் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை : 'புதுப்பிக்கப்பட்ட, 'மை லேடீஸ்' பூங்கா நீச்சல் குளத்தை விரைவில் துணை முதல்வர் திறந்து வைப்பார்' என, மேயர் சுப்ரமணியன் கூறினார்.சென்ட்ரல் அருகே, 'மை லேடீஸ்' பூங்காவில், பழமையான ராயல் நீச்சல் குளம் இருந்தது. கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பாழடைந்த நிலையில் இருந்தது. அந்த நீச்சல் குளத்தை புனரமைக்க திட்டமிட்டு, ஒரு கோடியே 39 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணியை, சென்னை மாநகராட்சி மேற்கொண் டுள்ளது. பணிகள் முடியும் நிலையில் உள்ளது. மேயர் சுப்ரமணியன், நீச்சல்குளம் புனரமைக்கும் பணியை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: பழமையான நீச்சல்குளம் புதுப்பிக்கப்பட்டு, 23 ஆயிரத்து 861 சதுர அடி பரப்பளவில் கட்டப் படுகிறது. அருகில் சிறுவர்கள் குளிக்கும் வகையில் சிறிய நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீச்சல்குளத்தில் ஒரே நேரத்தில் 60 பேர் குளிக்கலாம். ஆறு உடை மாற்றும் அறைகள், ஆறு கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீச்சல் குளத்திற்கு தனியே தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் இரண்டு லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்படும்.

தென்சென்னையில் மெரீனா நீச்சல் குளம் இருப்பது போல், வடசென்னை மக்கள் பயன்பெறும் வகையில், 'மை லேடீஸ்' பூங்கா நீச்சல்குளம் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடியும் நிலையில் இருப்பதால், 15 நாட்களில் துணை முதல்வர் ஸ்டாலின் நீச்சல் குளத்தை திறந்து வைப்பார். 'மை லேடீஸ்' பூங்கா அருகில் உள்ள ஏரியில், படகு குழாம் அமைக்கும் பணிக்கான வடிவமைப்பிற்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் படகு குழாம் அமைக்கப்படும். அதுபோல், தென்சென்னையில் வேளச்சேரி ஏரியில் படகு குழாம் அமைக்க பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.மேயருடன், கமிஷனர் (பொறுப்பு) ஆஷிஸ் சாட்டர்ஜி, தலைமை பொறியாளர் விஜயகுமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Last Updated on Monday, 19 April 2010 06:05