Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாந்தோணி நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம்: ரூ.32.93 கோடியில் செயல்படுத்த முடிவு

Print PDF

தினமலர் 26.04.2010

தாந்தோணி நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம்: ரூ.32.93 கோடியில் செயல்படுத்த முடிவு

கரூர்: தாந்தோணி நகராட்சியில் 32.93 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்துவற்கான திட்ட மதிப்பீடு பணி முடிக்கப்பட்டுள்ளது. தாந்தோணி நகராட்சியில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் தலைவர் ரேவதி தலைமையில் நடந்தது. கமிஷனர் தெய்வசிகாமணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தாந்தோணி நகராட்சியில் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 31 ஆயிரத்து 591 எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே 2040ல் ஒரு லட்சத்து ஆயிரத்து 600 எனமளவில் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கட்டளை காவிரியில் இரண்டு கிணறுகளை ஆதாரமாக கொண்டு குடிநீர் திட்டம் செயல்படுகிறது. தினசரி 4.32 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. பெருகும் மக்கள்தொகை அடிப்படையில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்த, திட்ட அறிக்கை தயாரிக்க நகராட்சி நிர்வாக ஆணையர் மூலமாக 2008ல் ஃபிஷ்னர் இந்தியா நிறுவனத்துக்கு ஆணையிடப்பட்டது.

ஃபிஷ்னர் இந்தியா நிறுவன முதன்மை பொறியாளர் ஜெயச்சந்திரபோஸ், வடிவமைப்பு பொறியாளர் சரவணன் கூறியதாவது: தாந்தோணிமலை குடிநீர் அபிவிருத்தி திட்டம் 32.93 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. காவிரியில் கீழ்க்கட்டளையில் உள்ள கிணறுகளுக்கு அருகில் ஆறு மீ., விட்டம், 19.55 மீட்டர் ஆழத்தில் நீர் சேகரிப்பு கிணறு அமைத்து, 135 குதிரை திறன் கொண்ட டர்பைன் மின் இறைப்பான் பொருத்தப்பட்டு, 15.20கி.மீ., நீளத்துக்கு 400 மி.மீ., 'டிஐ' குழாய் மூலம் பொன்நகரில் கட்டப்படும் ஐந்து லட்சம் லிட்டர் கொள்ளவு தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் சேகரிக்கப்படும். தற்போது பயன்பாட்டில் உள்ள குடிநீர் திட்டம் எவ்வித மாறுதலுமின்றி மூலக்காட்டனூர் நீர் தேக்க தரைமட்ட தொட்டிவரை பயன்படுத்தப்படும்.

பொன்நகர் தரைமட்ட தொட்டியில் இருந்து செல்லாண்டிபாளையம், கலெக்டர் அலுவலகம் பின்புறம், தோரணக்கல்பட்டி, பொன்நகர் பகுதியில் கட்டப்புடும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பயன்பாட்டில் உள்ள மூலக்காட்டனூர் தரைமட்ட தொட்டியில் இருந்து காந்திகிராமம் மேல்நிலை தொட்டிக்கும் நீர் உந்தப்படும்.திட்டத்துக்காக கூடுதலாக ஏழு இடங்களில் ஒரு லட்சம் லிட்டர் முதல் 15 லட்சம் லிட்டர் வரை கொள்ளளவு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள ஏழு தொட்டிகளும் பயன்படுத்தப்படும். புதிதாக அமையும் தொட்டிகளின் கொள்ளளவு 47 லட்சம் லிட்டர், பயன்பாட்டில் உள்ள தொட்டிகளின் கொள்ளளவு 13.50 லட்சம் லிட்டர் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.நகராட்சி பகுதி 14 குடிநீர் விநியோக பகுதியாக பிரித்து மொத்தம் 146.32 கி.மீ., பகிர்மான குழாய் நீளத்தில், பழைய 'பிவிசி' குழாய் 30.52 கி.மீ., நீளம் மற்றும் புதிய 'ஹெச்டிபிஇ' குழாய் 115.8 கி.மீ., நிளத்துக்கு அமைத்து குடிநீர் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2010 மக்கள் தொகை அடிப்படையில் சுமார் 11 ஆயிரத்து 772 வீட்டு குடிநீர் இணைப்புகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. திட்டத்தின் மொத்த மதிப்பீடு 32.93 கோடி ரூபாய் மற்றும் பராமரிப்பு செலவு ஆண்டுக்கு 1.88 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2040 ஆண்டு மக்கள் தொகை உச்சகட்ட இலக்காக கொள்ளப்பட்டுள்ளது.நகராட்சி தலைவர் ரேவதி கூறுகையில், ''திட்ட அறிக்கை நகராட்சி நிர்வாக ஆணையர் பார்வைக்கு அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் நிதி ஒதுக்கீடு முறை குறித்து முடிவு செய்யப்பட்டு, டெண்டர் அழைப்பு மற்றும் வழக்கமான நடைமுறைகள் முடித்து திட்டம் துவங்கும். விரைவில் பணி துவங்கப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடைமுறைக்கு வந்ததும், மக்கள் 24 மணிநேரமும் குழாயில் தண்ணீர் பெறும் வகையில் இத்திட்டம் இருக்கும்,'' என்றார்.

Last Updated on Monday, 26 April 2010 06:48