Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் அடுத்த மாதம் திறப்பு?

Print PDF

தினமணி 03.05.2010

மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் அடுத்த மாதம் திறப்பு?

மதுரை, மே 2: மதுரை மாட்டுத்தாவணியில் புதிய காய்கறி மார்க்கெட் பணிகள் தற்போது 90 சதம் முடிந்த நிலையில் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் 846 தரைக்கடைகளை உண்மையான வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணிக்காக சிறப்பு அதிகாரிகள் குழுவை மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் நியமித்துள்ளார்.

இக்குழு உண்மையான வியாபாரிகள் குறித்த அறிக்கையை இன்னும் 1 வாரத்துக்குள் சமர்ப்பிக்கவுள்ளது. இதையடுத்து, கட்டடக் கடைகள், 846 தரைக்கடைகள் உள்ளிட்டவைக்கு ஏலம் விடுவதற்கான தேதியை மாநகராட்சி அறிவிக்கும் என மாநகராட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

மதுரை மையப் பகுதியில் அமைந்துள்ள சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவந்தது. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இந்த காய்கறி மார்க்கெட்டை நகரின் வெளிப்பகுதியில் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சராக மு.க.அழகிரி பதவி ஏற்ற பின் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக மாட்டுத்தாவணி அருகே காய்கறி மார்க்கெட் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். இதற்காக முதலாவதாக மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது இந்த இதற்கான நிதி ரூ.12 கோடி வரை உயர்ந்துள்ளது.

மாட்டுத்தாவணியில் கட்டப்பட்டு வரும் மார்க்கெட்டில் மொத்தம் 524 கட்டட அமைப்பிலான கடைகளும், 846 தரைக் கடைகளும் கட்டப்பட்டுள்ளன. இதில், சென்ட்ரல் மார்க்கெட்டில் கடை வைத்திருந்த 466 வியாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள கட்டட அமைப்புக் கடைகளுக்கும், 846 தரைக்கடைகளையும் வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த மார்க்கெட்டில் கேண்டீன், கழிப்பிட வசதி, பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கீடு செய்யக் கோரி இதுவரை மொத்தம் 1,256 வியாபாரிகள் மாநகராட்சியில் மனு செய்துள்ளனர்.

கடைகள் மற்றும் மாத வாடகை, அட்வான்ஸ் தொகை விவரம்:

கட்டடக் கடை (8}க்கு 8): மாத வாடகை ரூ.1,000 (அட்வான்ஸ் ரூ.35,000). 13}க்கு 13 அளவு: வாடகை ரூ.2,000 (அட்வான்ஸ் ரூ.60,000).

தரைக்கடைகள்: (8}க்கு 8 அளவு) மாத வாடகை ரூ.700, (அட்வான்ஸ் ரூ.50,000). 10}க்கு 10 அளவு கடை: மாத வாடகை ரூ.1,000 (அட்வான்ஸ் ரூ.75,000). 20}க்கு 20 அளவுள்ள கடை: மாத வாடகை ரூ.4,000 (அட்வான்ஸ் ரூ.2 லட்சம்) என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்ட்ரல் மார்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் தரைக்கடைகள் வைத்து நடத்தி வந்துள்ளனர். அவர்களுக்கு இந்த ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், உண்மையான வியாபாரிகள் குறித்து கணக்கெடுக்க மாநகராட்சி உதவிக் கமிஷனர் ராஜகாந்தி, பொறியாளர்கள் ராஜேந்திரன், சந்திரசேகரன், உதவி நகர்நல அலுவலர் பழனிச்சாமி ஆகிய அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை மாநகராட்சி அமைத்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி உதவிக் கமிஷனர் (வருவாய்) ரா.பாஸ்கரன் கூறுகையில், இந்த அதிகாரிகள் குழு உண்மையான வியாபாரிகள் குறித்த அறிக்கை சமர்ப்பித்த ஒரு வாரத்தில் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் கடைகளுக்கு மொத்தமாக ஏலம் விடுவதற்கான தேதி அறிவிக்கப்படும்.

பின்னர் ஜூன் மாதம் முதல் வாரம் முதல் புதிய மார்க்கெட் செயல்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.