Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இரட்டை வாய்க்கால் பணிக்கான நிதியைப் பெற்றுத் தருவோம்

Print PDF

தினமணி 03.05.2010

இரட்டை வாய்க்கால் பணிக்கான நிதியைப் பெற்றுத் தருவோம்

கரூர், மே 2: கரூர் இரட்டை வாய்க்கால் பணிக்கான நிதியை பெற்றுத் தருவோம் என்றார் கரூர் மக்களவை உறுப்பினர் மு. தம்பிதுரை.

கரூரில் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை அந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினர் மு. தம்பிதுரையும், கரூர் சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக மாவட்டச் செயலருமான வி. செந்தில்பாலாஜியும் மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றனர்.

அவர்கள் தாந்தோன்றிமலை நகராட்சி, வெள்ளியணை, ஜெகதாபி, உப்பிடமங்கலம், பழைய ஜயங்கொண்ட சோழபுரம், கிருஷ்ணராயபுரம், மாயனூர், புலியூர் பேரூராட்சி, தொழில்பேட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றனர்.

அதைத்தொடர்ந்து, அரசு காலனியில் மனுக்களைப் பெற்ற போது, கரிகாலி நகரில் சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அந்த இடத்தை நேரில் பார்வையிட்ட தம்பிதுரை கூறியது:

அரசு காலனி பகுதியில் சாக்கடை தொடர்ந்து பராமரிக்கப்படாததால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் கால்வாய் அமைக்க எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆறுகளில் மணல் அள்ளுவதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து நடைபெற்று வரும் மக்களவை கூட்டத் தொடரில் புதன்கிழமை பேசுவேன்.

தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல், கனிம வளங்கள் அள்ளப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது.

1998-99 ஆம் ஆண்டில் நான் மக்களவை உறுப்பினராக இருந்த போது இரட்டை வாய்க்கால் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் அதிமுக ஆட்சியில் இல்லாத போதும், அந்தத் திட்டத்துக்குத் தேவையான நிதியை பெற்று வருகிறோம். 11 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, அப்போதெல்லாம் ஏதும் செய்யாமல் விட்டுவிட்டு தற்போது தவறான வாக்குறுதிகளை அளித்து வருகிறது.

இரட்டை வாய்க்கால் பணி முழுமையாக நிறைவேற தேவையான நிதியை நானும், செந்தில்பாலாஜி எம்எல்ஏவும் பெற்றுத் தருவோம் என்றார் தம்பிதுரை.

அதைத்தொடர்ந்து, அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ. பரிந்துரைக்கும் மனுக்கள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதில்லை என்று புகார் வருகிறது. அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தம்பிதுரை கூறினார்.

தொடர்ந்து வாங்கல், செவ்வந்திப்பாளையம், என்.புதூர், கடம்பங்குறிச்சி, தளவாபாளையம், தோட்டக்குறிச்சி பகுதி பொதுமக்களிடம் தம்பிதுரை மனுக்களை பெற்றனர்.

கரூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக செயலர் திருவிக. பழனியப்பன், ஒன்றியச் செயலர் கே. கமலக்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.