Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

மாநகராட்சி எல்லை விரிவாக்க அரசாணை: நவ.22 மாமன்றக் கூட்டத்தில் வைக்க முடிவு

Print PDF

தினமணி                20.11.2010

மாநகராட்சி எல்லை விரிவாக்க அரசாணை: நவ.22 மாமன்றக் கூட்டத்தில் வைக்க முடிவு

மதுரை, நவ. 19: மதுரை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்துக்கான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை திங்கள்கிழமை (நவ.22) நடைபெறும் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தகவலுக்காக வைக்கப்படவுள்ளது.

மதுரை மாநகராட்சியில் 4 மண்டலங்கள், 72 வார்டுகள் உள்ளன. மக்கள் தொகை சுமார் 12 லட்சம். இந் நிலையில், மாநகராட்சியின் தற்போதைய எல்லைக்குள் (51.82 சதுர கிலோ மீட்டர்) அருகில் உள்ள சில பகுதிகளை இணைத்து, எல்லையை விரிவாக்க வேண்டும் என நீண்டநாள்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதுதொடர்பாக மாமன்றக் கூட்டத்தில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடைசியாக 9.9.2010-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மீண்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாநகராட்சி எல்லைக்குள் ஆனையூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் ஆகிய 3 நகராட்சிகளும், ஹார்விபட்டி, திருநகர், விளாங்குடி ஆகிய 3 பேரூராட்சிகளும், மேலமடை, உத்தங்குடி, வண்டியூர், நாகனாகுளம், கண்ணனேந்தல், திருப்பாலை, ஐராவதநல்லூர், சின்னஅனுப்பானடி, சிந்தாமணி, புதுக்குளம், தியாகராஜர் காலனி ஆகிய 11 ஊராட்சிகளையும் இணைக்கப் பரிந்துரை செய்யப்பட்டது.

மாநகராட்சியின் தொடர் நடவடிக்கையால் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை அரசாணை (நிலை) (எண்: 220. நாள் 28.9.2010) பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சி மாமன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. கவுன்சிலர்கள் கூட்டத்தில் வைக்கப்படும் தீர்மானங்களில் இந்த அரசாணையும் தகவலுக்கு வைக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்கள் தொகை அதிகரிக்கும்: அரசாணைப்படி மதுரை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டால் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் மக்கள் தொகை சுமார் 16 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு வார்டுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் மக்கள் தொகை இடம்பெற வேண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி தற்போதுள்ள 72 வார்டுகள், 125-க்கும் மேற்பட்ட வார்டுகளாகவும், தற்போதுள்ள மண்டலங்கள் 18-க்கும் மேற்பட்ட மண்டலங்களாகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சென்னை மாநகர எல்லை விரிவாக்கம் : 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் இணைப்பு

Print PDF

தினமலர்                   20.11.2010

சென்னை மாநகர எல்லை விரிவாக்கம் : 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் இணைப்பு

சென்னை : சென்னை மாநகராட்சியுடன் ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள் மற்றும் 25 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, காஞ்சிபுரம், கரூர், நாகர்கோவில் நகராட்சிகளின் எல்லைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் அசோக் வர்தன் ஷெட்டி பிறப்பித்துள்ள உத்தரவு: சென்னை மாநகர எல்லையுடன் பல்வேறு பகுதிகளை இணைத்து, மாநகராட்சியின் ஒரு பகுதியாக அமைக்க கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி இணைக்கப்பட்டுள்ள பகுதிகள் வருமாறு:

திருவள்ளூர் மாவட்டம் கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், வளசரவாக்கம் ஆகிய நகராட்சிகளின் பகுதிகள் முழுமையாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர், உள்ளகரம் - புழுதிவாக்கம் நகராட்சிகள் முழுமையாகவும், சென்னை மாநகருடன் இணைக்கப்படுகின்றன.

இது தவிர, திருவள்ளூர் மாவட்டம் சின்னச் சேக்காடு, புழல், போரூர் பேரூராட்சிகளும், காஞ்சிபுரம் மாவட்டம் நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் பேரூராட்சிகளும் முழுமையாக இணைக்கப்படுகின்றன.

கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை, இடையஞ்சாவடி, சடையங்குப்பம், கடப்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர், வடப்பெரும்பாக்கம், சூரப்பட்டு, கதிர்வேடு, புத்தகரம், நொளம்பூர், காரப்பாக்கம், நெற்குன்றம், ராமாபுரம், முகலிவாக்கம், மணப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், ஒக்கியம் - துரைப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடம்பேட்டை, செம்மஞ்சேரி, உத்தண்டி ஆகியவை முழுமையாக சென்னையுடன் இணைக்கப்படுகின்றன.

இவை அனைத்தும் சென்னை மாநகராட்சி சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. இந்த உள்ளாட்சிகளுக்கான வார்டுகள், அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலின் போது பிரிக்கப்படும்.

இதுதவிர, காஞ்சிபுரம் நகராட்சி எல்லையுடன், செவிலிமேடு பேரூராட்சி, ஓரிக்கை, தேனம்பாக்கம், நாதபேட்டை ஆகிய கிராம ஊராட்சிகள் இணைக்கப்படும். திருப்பத்தூர் நகராட்சியுடன் திருப்பத்தூர் கிராம ஊராட்சி முழுமையாக இணைக்கப்படுகிறது. கரூர் நகராட்சியுடன் இனாம்- கரூர் நகராட்சி, தாந்தோணி நகராட்சி, சேனபிராட்டி ஊராட்சி ஆகியவை முழுமையாக இணைக்கப்படுகின்றன.

நாகர்கோவில் நகராட்சியுடன், ஆசாரிபள்ளம் பேரூராட்சி, பெருவிளை, வடக்கு சூரன்குடி, காந்திபுரம், கரியமாணிக்கபுரம் கிராம ஊராட்சிகள் முழுமையாக இணைக்கப்படுகின்றன. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

திருச்செங்கோடு நகராட்சியில் ரூ1 கோடியில் வளர்ச்சி பணி ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினகரன்                 11.11.2010

திருச்செங்கோடு நகராட்சியில் ரூ1 கோடியில் வளர்ச்சி பணி ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், நவ. 11: திருச்செங்கோடு நகராட்சியில் ரூ1 கோடியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை ஆட்சியர் மதுமதி ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெசவாளர் காலனியில் ரூ1.07 கோடியில் மின் மயான தகனமேடை, காத்திருப்போர் அறை, கழிப்பிடம் கட்டுதல், சைக்கிள் நிறுத்துமிடம், ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஆட்சியர் மதுமதி ஆய்வு செய்தார். இந்த பணிகளை 30ம் தேதிக்குள் முடிக்க அவர் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து ரூ12 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் சமுதாயக் கூட கட்டுமானப் பணி, ரூ4 லட்சம் மதிப்பில் நெசவாளர் காலனிப் பகுதியில் சாலைகள் மற்றும் சாக்கடைகள் அமைக்கும் பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நகர்மன்ற தலைவர் நடேசன், நகராட்சி ஆணையாளர் இளங்கோ, நகராட்சி பொறியாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 38 of 160