Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

பாகுபாடின்றி பணிகள் நகராட்சித் தலைவர் தகவல்

Print PDF

தினமலர் 22.10.2010

பாகுபாடின்றி பணிகள் நகராட்சித் தலைவர் தகவல்

பந்தலூர் : "நெல்லியாளம் நகராட்சியில், வார்டுகள் பேதமின்றி வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெல்லியாளம் நகராட்சி மன்றத் தலைவர் காசிலிங்கம் கூறியதாவது:

நெல்லியாளம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில், கட்சி, வார்டுகள் பேதமின்றி, கவுன்சிலர்கள் முன்வைக்கும் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நிதிக்கு ஏற்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டுகளில் நிலவும் அனைத்து குறைகளையும் ஒரே நேரத்தில் நிவர்த்தி செய்ய இயலாத நிலையில், ஒரு சில வார்டுகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளாவிட்டால், போராட்டம் நடத்தப் போவதாக எச்சரிப்பது, சரியான செயல் அல்ல. தங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்து, வார்டு கவுன்சிலர்களுடன் வந்து தெரிவித்தால், முன் னுரிமை அடிப்படையில் பணிகள் மேற் கொள் ளப்படும். இவ்வாறு, காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

வி.கே.புரம் பகுதியில் ரூ.15 லட்சம் : வளர்ச்சி பணிகள் துவக்கம்

Print PDF

தினமலர் 22.10.2010

வி.கே.புரம் பகுதியில் ரூ.15 லட்சம் : வளர்ச்சி பணிகள் துவக்கம்

விக்கிரமசிங்கபுரம்: விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் சுமார் 15 லட்ச ரூபாய் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகளை சபாநாயகர் ஆவுடையப்பன் துவக்கி வைத்தார்.விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 11வது வார்டில் ரூ.2.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம், ரூ.66 ஆயிரம் செலவில் 20வது வார்டு இ.எஸ்.. ஆஸ்பத்திரி மேல்புறம், 19,18,17,16,15 ஆகிய வார்டுகளிலும், 8வது வார்டு மேலக்கெட்டாரம் போஸ்ட் ஆபீஸ் அருகில் மற்றும் மேலக்கெட்டாரம் பேச்சியம்மன் கோயில் அருகில், 10வது வார்டு டாணா மெயின்ரோடு பகுதியில் மற்றும் பாபநாசம் சேனைத்தலைவர் திருமண மண்டபம் பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்க்.6வது வார்டு மெயின் ரோட்டில் ரூ.42 ஆயிரம் செலவில் சின்டெக்ஸ் டேங்க், 21வது வார்டு போலீஸ் ஸ்டேஷன் அருகே ரூ.3.07 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை ஆகிய வளர்ச்சி பணிகள் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி முருகன் முன்னிலை வகித்தார். சபாநாயகர் ஆவுடையப்பன் வளர்ச்சி பணிகளை திறந்து வைத்து பேசினார்.விழாவில் நகராட்சி இளநிலை அலுவலர் மாணிக்கராஜ், வார்டு கவுன்சிலர்கள் இசக்கிபாண்டியன், சந்திரா, ஜெயலெட்சுமி, பரமசிவன், அற்புதவிஜயா, சொர்ணமாரி, மீனாகுமாரி, திமுக மாவட்ட பிரதிநிதி கணேசன், முத்துராமலிங்கம், சிவந்தியப்பர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராஜாராம், திமுக இளைஞரணி செல்வம், திமுக தொழிற்சங்க செயலாளர் பரணிசேகர், தலைவர் நெடுஞ்செழியன் உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

 

167 சதுர கி.மீ. பரப்பளவுக்கு விரிவடைகிறது திருச்சி மாநகராட்சி

Print PDF

தினமணி 14.10.2010

167 சதுர கி.மீ. பரப்பளவுக்கு விரிவடைகிறது திருச்சி மாநகராட்சி

திருச்சி, அக். 13: திருச்சி மாநகராட்சியின் பரப்பளவு இப்போதுள்ள 146 சதுர கி.மீ. என்ற அளவிலிருந்து, திருவெறும்பூர் பேரூராட்சி மற்றும் பாப்பாக்குறிச்சி, எல்லக்குடி, கீழக்கல்கண்டார்கோட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சிகளையும் சேர்த்து 167.23 சதுர கி.மீ. ஆக விரிவடைகிறது.

இதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை கடந்த செப். 28-ம் தேதி பிறப்பித்துள்ளது.

திருச்சி மாநகராட்சியின் தற்போதைய பரப்பளவு 146.9 சதுர கி.மீ. கடந்த 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மாநகராட்சிப் பகுதியின் மக்கள் தொகை 7,52,066. மாநகராட்சியின் ஆண்டு வருமானம் 2009-10 ஆம் ஆண்டு கணக்கின்படி ரூ 180.37 கோடி.

இந்த நிலையில், திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சி, பாப்பாக்குறிச்சி, எல்லக்குடி, கீழக்கல்கண்டார்கோட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சிகளை இணைக்க கடந்த செப்டம்பர் 6-ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் கருத்து கேட்கப்பட்டது. பாப்பாக்குறிச்சி ஊராட்சி, மாநகராட்சியுடன் இணைய இசைவு தெரிவித்தது. எல்லக்குடி ஊராட்சி மன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இசைவு தெரிவித்தும், அதன்பிறகு செப்டம்பர் 3-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எதிர்ப்புத் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், திருவெறும்பூர் பேரூராட்சி, கீழக்கல்கண்டார்கோட்டை, ஆலத்தூர் ஊராட்சி மன்றங்கள், மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைத்தன.

இதைத் தொடர்ந்து, சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் மாநகராட்சியின் மையப் பகுதியிலிருந்து 5 கி.மீ. தொலைவுக்குள் வருவதாலும், மாநகரில் செயல்படுத்தப்படும் அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் ஒருங்கிணைத்து சிறந்த முறையில் மேற்கொள்ள முடியும் என்றும் மாநகராட்சி ஆணையர் அறிக்கை அனுப்பிவைத்தார். இந்த இணைப்பு, பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், கிராமப்புற மக்கள் நகர்ப்புறத்துக்கு குடிபெயர்வதைத் தவிர்க்கவும் பேருதவியாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார்.

அந்தப் பரிந்துரையில், உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சியுடன் இமைக்க வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளபோதும், பொதுமக்களின் நன்மை மற்றும் வேகமாக நகர்மயமாகி வருதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இவற்றை இணைத்தல் அவசியமாகிறது என்றும் ஆட்சியர் குறிப்பிட்டார்.

இவற்றை அடிப்படையாக வைத்து நகராட்சி நிர்வாக இயக்குநரும் அரசுக்கு பரிந்துரை செய்ய, முடிவில் கவனமாக பரிசீலிக்கப்பட்டு இந்த அரசாணை வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன்படி மாநகராட்சியின் விரிவாக்க விவரம் (2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி): தற்போதைய மாநகராட்சி மக்கள் தொகை- 7,52,066, பரப்பளவு- 146.90 சதுர கி.மீ. திருவெறும்பூர் பேரூராட்சி மக்கள் தொகை- 16,824, பரப்பளவு- 4.16 சதுர கி.மீ. பாப்பாக்குறிச்சி ஊராட்சி மக்கள் தொகை- 20,371, பரப்பளவு- 4.92 சதுர கி.மீ. எல்லக்குடி ஊராட்சி மக்கள் தொகை- 4,831, பரப்பளவு- 4.30 சதுர கி.மீ. கீழக்கல்கண்டார்கோட்டை ஊராட்சி மக்கள் தொகை- 1,472, பரப்பளவு- 4.72 சதுர கி.மீ. ஆலத்தூர் ஊராட்சி மக்கள் தொகை- 1,080, பரப்பளவு- 2.23 சதுர கி.மீ. இணைப்புக்குப் பிறகு மொத்த மக்கள்தொகை- 7,96,644. பரப்பளவு- 167.23 சதுர கி.மீ. இந்த அரசாணையால் தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் பாதிக்கப்படாது. மாநகராட்சி வகைமுறை சட்டப்படி வரைவு அறிவிக்கை அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்ட பிறகு, சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, விரிவுபடுத்தப்படவுள்ள மாநகராட்சிப் பகுதிகளுக்கான வார்டு எல்லைகள், மண்டலங்கள் அமைக்கப்படும். அதன்பிறகு, 2011-ம் ஆண்டு மாநகராட்சிக்கு சாதாரணத் தேர்தல் இந்த விரிவாக்க வகைமுறைப்படி நடைபெறும்.

 


Page 41 of 160