Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

சென்னை மாநகராட்சி விரிவாக்க திட்டம் கிடப்பில்? .

Print PDF

தினமலர் 13.08.2010

சென்னை மாநகராட்சி விரிவாக்க திட்டம் கிடப்பில்? .

முக்கிய கவுன்சிலர்களின் வார்டுகள் நீக்கப்படுவதாலும், புதிய பகுதிகளை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளாலும், சென்னை மாநகராட்சி விரிவாக்கப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், விரிவாக்கப்பணி திட்டமிட்டபடி நிறைவேறுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் நான்காவது பெரிய மெட்ரோ பாலிட்டன் நகர் சென்னை. கடந்த 78ம் ஆண்டு நிர்ணயப்படி இதன் பரப்பளவு 174 சதுர கிலோ மீட்டர். சென்னையை விட, மெட்ரோ பாலிட்டன் நகரமாக இல்லாத பெங்களூரின் பரப்பளவு அதிகம். குறைந்த அளவு பரப்பளவு, மக்கள் தொகையால் சென்னை மெட்ரோ பாலிட்டன் தகுதியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், ஆவடி, தாம்பரம் ஆகிய புதிய மாநகராட்சிகளை உருவாக்குவதை தவிர்த்து, அவற்றிற்கான புறநகர் பகுதிகளை சென்னையுடன் இணைத்து, மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய, அரசு திட்டமிட்டது.இதற்கான உத்தரவு கடந்த டிசம்பர் 26ல் வெளியிடப்பட்டது. அதன்படி, சென்னையை, 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக விரிவாக்கம் செய்து, புதிய வார்டுகளின் எல்லைகளை நிர்ணயிக்கவும், இதற்கான அறிக்கையை ஆறு மாதத்திற்குள் வெளியிடவும் முடிவெடுக்கப்பட்டது.அதன்படி, மாநகராட்சி துணை கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, சென்னையை சுற்றியுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையில், சென்னை மாநகரில் உள்ள 155 வார்டுகளை, ஒவ்வொரு வார்டிலும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கும் வகையில் பிரித்து, அதை 120 ஆக குறைக்கவும், புதிகாக இணையும் பகுதிகளை 80 வார்டுகளாகவும் மாற்றி, விஸ்தரிக்கப்பட்ட மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் இருக்கும்படியும் திட்டமிடப்பட்டது.இதன்படி, குறைந்த வாக்காளர்களைக் கொண்ட வார்டுகளையும், 50 ஆயிரத்திற்கும் மேல் வாக்காளர்கள் உள்ள வார்டுகளையும் பிரித்து பக்கத்து வார்டுகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.அப்படி வார்டுகள் பிரிக்கப்பட்டால், சில தி.மு.., புள்ளிகளின் வார்டுகள் பறிபோகும் நிலை உள்ளது.இதனால், எந்த வார்டை எந்த வார்டுடன் சேர்ப்பது என்ற சர்ச்சை எழுந்தது. அத்துடன், ஒரு வார்டை மற்றொரு வார்டுடன் சேர்ப்பதால், இரண்டு கவுன்சிலர்களுக்கும் மனஸ்தாபம் ஏற்படுவதுடன், அவர்கள் வரும் தேர்தலில் தீவிரமாக செயல்படுவார்களா என்ற சந்தேகம் ஆளுங்கட்சிக்கு எழுந்துள்ளது.இதோடு, சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யும் போது, முன்பு கணக்கெடுக்கப்படாத வானகரம், மீனம்பாக்கம், பல்லாவரம் போன்ற பகுதிகளையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது.இப்பிரச்னைகளால், மாநகராட்சி விரிவாக்க திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், சென்னை மாநகராட்சி விரிவக்க திட்டம், வெறும் கனவாகவே போய்விடுமோ, என்ற அச்சம் எழுந்துள்ளது.

-
நமது சிறப்பு நிருபர் -

 

பூலாம்பட்டி பேரூராட்சியில் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

Print PDF

தினமணி 12.08.2010

பூலாம்பட்டி பேரூராட்சியில் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

எடப்பாடி, ஆக. 11: பூலாம்பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளுக்களை எடப்பாடி எம்எல்ஏ புதன்கிழமை துவக்கி வைத்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பூலாம்பட்டி பேரூராட்சிக்கு | 3.50 லட்சத்தை அடிப்படை வசதிகளுக்காக எடப்பாடி எம்எல்ஏ காவேரி ஒதுக்கினார். பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர் ஆகிய பகுதிகளில் தார்ரோடு, மினி மோட்டார் பம்பு ஆகிய அடிப்படை வசதிகளை மேம்படுத்த இத்தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது.

கூடக்கல் பகுதியில் மினி மோட்டர் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டப் பணியை காவேரி புதன்கிழமை துவக்கி வைத்தார். அவருடன் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மூர்த்தி, பாமக பூலாம்பட்டி பேரூர் செயலாளர் அங்கமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

 

உள்ளாட்சியில் அனுமதி பெறாத தொழிற்சாலைகள்

Print PDF

தினமலர் 12.08.2010

உள்ளாட்சியில் அனுமதி பெறாத தொழிற்சாலைகள்

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் தொழிற்சாலைகள் உள்ளாட்சி அமைப்புகளிடம் முறைப்படி அனுமதி பெறாதது சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வின்போது தெரிய வந்தது.ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் இருங்காட்டுகோட்டை, ஒரகடம், மாம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், திருமங்கலம் என ஐந்து சிப்காட் வளாகம் உள்ளன. இவற்றில் 450க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு மேற்கொண்டது.

அப்போது சிப்காட்டிற்கு நிலம் கொடுத்த பொதுமக்களுக்கு தொழிற்சாலைகளில் வேலை வழங்கப்பட்டுள்ளதா, கட்டட அனுமதி, தொழிற்சாலை உரிமம் உள்ளாட்சியில் பெறப்பட்டுள்ளதா, உள்ளாட்சிகளுக்கு முறையாக வரி செலுத்தப்படுகிறதா என தொழிற்சாலை நிர்வாகிகளிடம் கேட்டனர். அவர்கள் அனைத்தும் முறையாக செய்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால், ஆய்வில் சில தொழிற்சாலைகள் உள்ளாட்சியில் அனுமதி பெறாமல் கட்டடம் கட்டியிருப்பது தெரிந்தது. மேலும், வருவாய் துறையிடம் தடையில்லா சான்று பெறாமலிருப்பதும் தெரிந்தது. சிப்காட் நிர்வாகமும், சிப்காட் தொழிற்பேட்டைக்கு முறையாக நகர் ஊரமைப்பு திட்டத்தில் அனுமதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் யசோதா கூறும்போது, "ஒரு சில குறைகள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்யும்படி கூறியுள்ளோம். ஆய்வு குறித்து அரசுக்கு அறிக்கை சமர்பிப்போம்' என்றார்.

 


Page 61 of 160