Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

கொல்லிமலையில் ரூ.200 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி 03.08.2010

கொல்லிமலையில் ரூ.200 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள்

நாமக்கல், ஆக. 2: கொல்லிமலையில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 200 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் செ. காந்திச்செல்வன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் திங்கள்கிழமை நடந்த வல்வில் ஓரி விழாவில் அவர் பேசியது:

கொல்லிமலையில் 1975-ல் வல்வில் ஓரி மன்னன் சிலையை திறந்து வைத்து சிறப்பு சேர்த்த தமிழக முதல்வர்தான் தொடர்ந்து கொல்லிமலையில் வல்வில்ஓரி விழா நடத்த அடித்தளம் அமைத்தார். மேலும், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ. 200 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன.

கொல்லிமலையில் பல்வேறு வகையான மூலிகைகள் உள்ளன. ஆங்கில மருத்துவத்தைவிட மூலிகை மூலம் அளிக்கப்படும் இயற்கை வைத்தியம்தான் சிறந்தது. மீண்டும் மூலிகை மருத்துவத்துக்கு மக்கள் மாறும் சூழல் ஏற்படும். இதனை அடிப்படையாகக் கொண்டுதான் கொல்லிமலையில் மூலிகை ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசு உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், கொல்லிமலை தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இனி 50 கி.மீ. தூரம் சென்று சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இராது. செம்மேட்டிலேயே அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

மலைக்கு வந்து செல்ல தற்போதுள்ள 70 கொண்டை ஊசி வளைவுகளால் போக்குவரத்து கடினமாக உள்ளது. எனவே, மாற்றுப் பாதையாக முள்ளுக்குறிச்சியிலிருந்து நரியங்காடு வரை புதிய பாதை அமைக்க ரூ. 11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. அடுத்த ஆண்டு வல்வில் ஓரி விழாவுக்கு வரும்போது புதிய பாதையை பயன்படுத்தும் சூழல் ஏற்படும். மேலும், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை குறுகிய தூரத்திலேயே தரைப்பகுதிக்கு கொண்டு சேர்ப்பதன் மூலம் லாரி வாடகை செலவும் மீதமாகும்.

சுற்றுலா மேம்பாட்டுக்காக ரூ. 1.99 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இவையனைத்தும் நிறைவு பெற்றால் கொல்லிமலை மிகச்சிறந்த சுற்றுலாதலமாக மாறும் என்பதில் ஐயமில்லை என்றார் அவர்.

ஆட்சியர் சகாயம் பேசுகையில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலத்து நாணயங்கள் கொல்லிமலை வாசலூர்பட்டியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சோழ சாம்ராஜ்யம்தான் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, வீரம், கொடை, காதல் என பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளது. அத்தகைய தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழர்களின் பண்பாட்டையும் பேணி காப்பதற்காகவே வல்வில் ஓரிவிழா நடத்தப்படுகிறது என்றார்.

 

வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்ட நகர்மன்றத் தலைவர்

Print PDF

தினமணி 03.08.2010

வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்ட நகர்மன்றத் தலைவர்

தேவகோட்டை, ஆக. 2: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சியில் நடைபெற்ற மக்கள் நல வளர்ச்சித் திட்டங்களை, நகர்மன்றத் தலைவர் வேலுச்சாமி பார்வையிட்டார். தேவகோட்டை நகராட்சி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான சிலம்பணி வடக்குத் தெருவில் 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் சிமென்ட் தளம் அமைக்கும் பணியையும், தாழையூர் கூத்தாடி முத்துப்பெரியநாயகி ஆலயம் அருகே சிறுவாச்சி செல்லும் சாலையில் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலத்தையும், நகர்மன்றத் தலைவர் வேலுச்சாமி மற்றும் ஆணையர் ரவிச்சந்திரன், பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.

 

ரூ2 கோடியே 21 லட்சம் செலவில் கூவம் கரையோரம் 2 பூங்கா

Print PDF

தினகரன் 03.08.2010

ரூ2 கோடியே 21 லட்சம் செலவில் கூவம் கரையோரம் 2 பூங்கா

சென்னை, ஆக. 3: கூவம் கரையோரம் ரூ2 கோடியே 21 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இரண்டு புதிய பூங்காக்களை துணை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

சென்னை மாநகராட்சி சார்பில் புதுப்பேட்டை, லான்ஸ் தோட்ட சாலையில் கூவம் கரையோரம் புதிய பூங்கா அமைக்கும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

முதல்வர் கருணாநிதி உத்தரவுப்படியும், துணை முதல்வர் ஸ்டாலின் அறிவுரைப்படியும் கூவம் நதி சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி கூவம் கரையோரம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

புதுப்பேட்டை லான்ஸ் தோட்ட சாலையில் தூய ஆண்ரூஸ் பாலம் முதல் ஆதித்தனார் சாலை வரை 730 மீட்டர் நீளத்திற்கு கூவம் ஆற்றின் மேற்பகுதி அழகுபடுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் அமைத்தல், நடைபயிற்சி பாதை, கீழ்நிலைத் தொட்டி, மழைநீர் வடிகால்வாய், மின்விளக்குகள், நடைபாதை கள், அழகிய புல்தரைகள், பூஞ்செடிகள் என பல்வேறு வகையான பணிகள் ரூ1 கோடியே 34 லட்சத்து 81 ஆயிரம் செலவில் முடிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று சிவானந்தா சாலையில் கூவம் கரையோரம் ரூ86.83 லட்சம் செலவில் அழகிய பூங்கா, நடைபாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு புதிய பூங்காக்களையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக துணை முதல்வர் ஸ்டாலின் 4ம் தேதி (நாளை) பகல் 12 மணிக்கு திறந்து வைக்கிறார். இவ்வாறு மேயர் கூறினார். கவுன்சிலர் அப்துல்மஜீத் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். ஸ்டாலின் நாளை திறக்கிறார்

 


Page 67 of 160