Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

ஹசரத் நிஜாமுதீன் பகுதியில் ரூ.10.67 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள்

Print PDF

தினகரன் 03.06.2010

ஹசரத் நிஜாமுதீன் பகுதியில் ரூ.10.67 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள்

புதுடெல்லி, ஜூன் 3: காமன்வெல்த் போட்டிகளின்போது சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் ஹசரத் நிஜாமுதீன் பகுதியில் ரூ.10.67 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

தெற்கு டெல்லி ஹசரத் நிஜாமுதீன் பகுதியில் ஹசரத் நிஜாமுதீன் தர்கா, மசார் &&காலிப், ஹுமாயூன் சமாதி உள்ளி ட்ட பல்வேறு வரலாற்று நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ளன. உலகம் முழுவதும் இரு ந்து ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். அக்டோபர் மாதத்தில் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளின்போது அதிக சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெரிசல் மிக்க நிஜாமுதீன் பகுதியில் வாழும் மக்கள் நல்ல சூழலில் வாழுகிறார்கள் என்று வெளிநாட்டு ரசிகர்கள் எண்ணுமளவுக்கு, அப்பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதற்காக, அகாகான் கலாச்சார அறக்கட்டளை சார்பில் ரூ.10.67 கோடி மதிப்பீட்டில் ஒரு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாநகராட்சியிடம் அளிக்கப்பட்டது. அதை மாநகராட்சி ஏற்றுக் கொண்டு, நிஜாமுதீன் பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் வண்ணவண்ண டைல்ஸ்கள் பதிக்கும் பணி, மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள், கழிப்பிட வளாகங்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகளை தொடங்கியுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "காமன்வெல்த் போட்டிக்கு மிகவும் குறைவான நாட்களே உள்ளன. அதனால் பணிகளை விரைந்து முடிப்பதற்காக ஒவ்வொரு தெருவுக்கும் தனித்தனியாக திட்ட மதிப்பீடுகளை தயாரித்து பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

 

புதுப்பேட்டை டாம்ஸ் சாலையில் நவீன பேருந்து நிறுத்தம் பூங்கா கட்டுமான பணி

Print PDF

தினகரன்     03.06.2010

புதுப்பேட்டை டாம்ஸ் சாலையில் நவீன பேருந்து நிறுத்தம் பூங்கா கட்டுமான பணி

 சென்னை, ஜூன் 3: புதுப்பேட்டையில் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் நவீன பேருந்து நிறுத்தங்கள், புதிய பூங்கா கட்டுமானப் பணியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் இன்று தொடங்கி வைக்கிறார்.

புதுப்பேட்டை, டாம்ஸ் சாலையில் 9 மீட்டர் நீளம் 3 மீட்டர் அகலத்தில் 4 நவீன பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படுகிறது. டாம்ஸ் சாலையில் கூவம் கரையோரம் ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நவீன பூங்கா அமைகிறது.

மேலும் தற்போது 14 மீட்டர் அகலம் உள்ள டாம்ஸ் சாலை 16 மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.

மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த பணி நிறைவேற்றப்படுகிறது. இது ஒப்பந்தத்தின்படி 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றாலும் 4 மாதத்திலேயே முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

இந்த கட்டுமானப் பணி தொடக்கவிழா இன்று காலை 11 மணிக்கு டாம்ஸ் சாலையில் நடக்கிறது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பணியை துவக்கி வைக்கிறார்.

விழாவுக்கு சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார். மாநகராட்சி ஆணையர் ராஜேஷ்லக்கானி மற்றும் மண்டலக்குழு, நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

 

ஆறுமுகனேரி காமராஜ் பூங்காவை சீரமைக்க பேரூராட்சி தீர்மானம்

Print PDF

தினமணி 03.06.2010

ஆறுமுகனேரி காமராஜ் பூங்காவை சீரமைக்க பேரூராட்சி தீர்மானம்

ஆறுமுகனேரி, ஜூன் 2: ஆறுமுகனேரி காமராஜ் பூங்காவை சீரமைக்க பேரூராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆறுமுகனேரி பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர் சா.பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. காமராஜ் பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள் பழுதாகி உள்ளதால் அவற்றை மாற்றி புதியவை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

வன்னிமாநகரம் மற்றும் காணியாளன்புதூர் ஆகிய பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு குடிநீர் குழாயில் புதிய குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. 17-வது வார்டு இலங்கத்தம் கோயில் தெரு, குத்துக்கல் சுவாமி கோயில் தெரு மற்றும் லட்சுமிஅம்மன் கோயில் தெரு ஆகிய தெருக்களில் உள்ள குடிநீர் இணைப்புகளில் குடிநீர் விநியோகம் சீராக இல்லாததால் ஆழ்குழாய் கிணறு மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோக குழாயிலிருந்து வால்வு தனியாக அமைத்து அப்பகுதிகளுக்கு மேலும் ஒரு மணி நேரம் சப்ளை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

ஆறுமுகனேரியில் உள்ள 12 குடிநீர் மேல்நிலை தேக்கத் தொட்டிகள், பயணிகள் நிழற்குடைகள் மற்றும் ஆறுமுகனேரி எல்கையில் உள்ள வரவேற்பு பலகைகள் அனைத்திற்கும் வண்ணம் தீட்டி தகவல்கள் குறிக்க முடிவு செய்யப்பட்டது. பேரூராட்சியில் நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கு வசதியாக இங்குள்ள குடியிருப்புகளுக்கு விடுதலின்றி கதவிலக்கம் வழங்க திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டபடி செயல்படவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 


Page 85 of 160