Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

ரூ.30 கோடியில் லால்பாக் பூங்கா அழகுபடுத்தப்படும்: முதல்வர்

Print PDF

தினமணி 05.05.2010

ரூ.30 கோடியில் லால்பாக் பூங்கா அழகுபடுத்தப்படும்: முதல்வர்

பெங்களூர், மே 4: தில்லி ஜவாஹர்லால் நேரு பூங்காவைப் போல ரூ.30 கோடியில் பெங்களூர் லால்பாக் தாவரவியல் பூங்கா அழகுபடுத்தப்படும் என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.

பெங்களூரில் உள்ள லால்பாக் தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்று பார்வையிட்டார் முதல்வர் எடியூரப்பா. அங்கு காலைநேரத்தில் நடைப் பயற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பிறகு அங்கு நிருபர்களிடம் எடியூரப்பா கூறியது: தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பூங்கா மிகவும் அழகாக பராமரிக்கப்படுகிறது. உலக மக்களின் கவனத்தை அந்தப் பூங்கா கவர்ந்துள்ளது. அதுபோல் லால் பாக் பூங்காவும் அழகுபடுத்தப்படும். இதற்காக பெங்களூர் நகர வளர்ச்சி ஆணையம் (பிடிஏ) ரூ.30 கோடி செலவிட உள்ளது. இந்தத் தோட்டத்தில் உள்ள ஏரிகள் தூர்வாரப்பட்டுசீரமைக்கப்படும்.

சிறுவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு ûமாதனம் அமைக்கப்படும். பெரியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள தனி வழி ஏற்படுத்தப்படும். இங்குள்ள ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் அதிக அளவில் செடி கொடிகள் வைத்து, இந்தத் தோட்டம் இன்னும் பசுமையாக்கப்பட்டு அழகுபடுத்தப்படும்.

அதுபோல் கழிப்பறை வசதி, பாதுகாப்பு வசதி, குடிநீர் வசதி என அனைத்து வசதிகளும் அந்த நிதியில் இருந்து செய்யப்படும். முதியோருக்கு லால்பாக் பூங்காவுக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

லால்பாக் பூங்காவில் தற்போது மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை இதற்கு ரூ.17 கோடி செலவிடப்பட்டுள்ளது. லால்பாக்கின் நான்கு பகுதிகளிலும் அழகிய பூங்காக்கள் அமைக்கப்படும். பிச்சைக்கார்கள் தொல்லை ஒழிக்கப்படும்.

பெங்களூர் மாநகராட்சி தற்போது மேயர் நிர்வாகத்திற்கு வந்துள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதிகள் நிர்வாகத்தில் மேயர் மற்றும் கவுன்சிலர்களிடம் பொதுமக்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். இந்த நகரை தூய்மையான நகரமாகவும், பசுமையான நகரமாகவும் வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பார்கள் என்று மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

அதற்கான நடவடிக்கையை மேயர் எடுக்க வேண்டும். நகரில் உள்ள ஏரிகளை சீரமைத்து அழகுபடுத்த வேண்டும். தரமான சாலைகளை அமைக்க வேண்டும். நகரின் மேம்பாட்டுக்கு அனைவரின் ஒத்துழைப்புடன் மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

முதல்வருடன் அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு, சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார், மேயர் எஸ்கே நடராஜ், துணை மேயர் தயானந்த் மற்றும் கவுன்சிலர்கள் வந்திருந்தனர்.

 

செம்மொழி மாநாடு: மே இறுதிக்குள் 44 நவீன பூங்காக்கள் தயார்

Print PDF

தினமணி 05.05.2010

செம்மொழி மாநாடு: மே இறுதிக்குள் 44 நவீன பூங்காக்கள் தயார்

கோவை, மே 4: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரில் அமைக்கப்படும் 44 நவீன பூங்காக்களும் மே இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரை அழகுப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. நகரின் மைய பகுதிகளில் இருக்கும் ரிசர்வ் சைட்களில் 44 நவீன பூங்காக்கள் அமைக்கும் பணி ரூ.8 கோடியில் நடைபெற்று வருகிறது.

இதுவரை 4 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 40 பூங்காக்களில் 15 பூங்காக்கள் அமைக்கும் பணி இன்னும் 10 நாட்களில் நிறைவடைந்துவிடும். மீதமுள்ள 25 பூங்காக்கள் அமைக்கும் பணியை மே இறுதிக்குள் முடிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மனதை ரம்மியப்படுத்தும் பசுமை நிறைந்த புல்வெளிகளுடன் கூடிய இயற்கை சூழலில் இப்பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகள் விளையாடி மகிழ சறுக்குகள், ஊஞ்சல்கள், குதுகலப்படுத்தும் செயற்கை நீரூற்றுகள், நீர்வீழ்ச்சிகள், முதியோர்கள் ஓய்வெடுக்கும் வகையிலான பெஞ்ச்கள், இளைஞர்கள், முதியவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையிலான நடைபாதைகள் உள்ளிட்டவை இப்பூங்காக்களில் இருக்கும் சிறப்பு அம்சங்கள்.

சாலையோர பூங்காக்கள்:ரேஸ்கோர்ஸில் இரு இடங்கலில் சாலையோர பூங்காக்கள் ரூ.97.85 லட்சத்தில் நடைபெற்று வருகின்றன. இவற்றிலும் நடைப்பயிற்சி சாலைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மாநாட்டு ஊர்வலம் நடைபெறும் அவிநாசி சாலை, திருச்சி சாலைகளில் முக்கிய சந்திப்புகளில் நீர்வீழ்ச்சிகள், உயர்கோபுர விளக்குகள், சாலையோர பூங்காக்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன.

அவிநாசி சாலையில் காளப்பட்டி முதல் கோவை நகரின் மைய பகுதி வரை புதிதாக 275 மின்கம்பங்களும், திருச்சி சாலையில் 151 மின்கம்பங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர திருச்சி சாலை மற்றும் அவிநாசி சாலையில் ஒவ்வொரு 100 மீ இடைவெளிக்கு இடையேயும் நவீன ஒளிரும் விளக்குகளும் பொருத்தப்பட்டு வருகின்றன. இப் பணிகள் அனைத்தும் ஜுன் முதல் வாரத்துக்குள் முடிக்கப்பட்டுவிடும் என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.

கோவை மக்களின் பொழுதுபோக்குக்காக இதுவரை வ..சி. பூங்கா மட்டும் தான் இருந்தது. நகரில் புதிதாக 44 பூங்காக்கள் உருவாக்கப்படுவதால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் பணியை விரைந்து முடிக்க மேயர் உத்தரவு

Print PDF

தினமணி 05.05.2010

மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் பணியை விரைந்து முடிக்க மேயர் உத்தரவு

மதுரை, மே. 4: மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மேயர் கோ.தேன்மொழி உத்தரவிட்டார்.

மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலப் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் செவ்வாய்கிழமை கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேயர் கோ.தேன்மொழி தலைமை வகித்தார். துணைமேயர் பி.எம்.மன்னன், ஆணையாளர் (பொறுப்பு) க.தர்ப்பகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் சாலை அமைத்தல், குடிநீர் வசதி, கழிவு நீர் அகற்றுதல், தெருவிளக்கு அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றக் கோரி பொதுமக்கள் சார்பில் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன.

இதில் கழிவு நீர் கலந்து வருவதை சரிசெய்யக்கோரி வந்த புகார் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மண்டலத் தலைவர் க.இசக்கிமுத்து, கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.விஜயகுமார், நகரமைப்பு அலுவலர் முருகேசன், நகர் நல அலுவலர் சுப்பிரமணியன், நிர்வாகப் பொறியாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக புதூர் கற்பக நகர் 7-வது தெருவில் உள்ள போர்வெல் தண்ணீரில் கழிவு நீர் வருவதாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து மேயர் தேன்மொழி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதையடுத்து, மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து செல்லக் கூடிய சாலைகளை நெடுஞ்சாலத் துறை மூலம் சரி செய்யுமாறு தெரிவித்தார்.

மேலும், புதிதாகக் கட்டப்பட்டு வரும் சென்ட்ரல் மார்க்கெட் பணிகளைப் பார்வையிட்டு, கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.

 


Page 94 of 160