Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

திண்டுக்கல்லில் புதிய காய்கறி மார்க்கெட் துவக்கம் : நீண்ட கால பிரச்னைக்கு விரைவில் தீர்வு

Print PDF

தினமலர் 26.04.2010

திண்டுக்கல்லில் புதிய காய்கறி மார்க்கெட் துவக்கம் : நீண்ட கால பிரச்னைக்கு விரைவில் தீர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல்லின் மையப்பகுதியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டை மாற்றும் பணி விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக நகராட்சி தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் காந்தி மார்க்கெட் முன்பு விளையாட்டு மைதானமாக இருந்தது.வெளி மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் வாங்க ஏராளமானோர் இங்கு வருவதால் நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் காய்கறிகளின் இலை தழைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டுவதால் கழிவுகளால், துர்நாற்றமும் வீசுகிறது.இப்பகுதியில் வசிக்கும் மக்கள் காந்தி மார்க்கெட்டை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் பழநி ரோட்டில் உள்ள லாரி செட் டை, குப்பை கிடங்கிற்கு மாற்றி விட்டு, லாரி செட் இருந்த இடத்தில் காய்கறி மார்க்கெட் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு திண்டுக்கல் நகராட்சிக்கு புதிதாக காய்கறி மார்க்கெட் கட்ட 4 கோடியே 50 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

நகராட்சி தலைவர் நடராஜன் கூறியதாவது: திண்டுக்கல்-பழநி ரோட்டிலுள்ள லாரி செட் இடம் நகராட்சிக்கு சொந் தமானது. இது 4 ஏக்கர் பரப்பளவு உள்ளது. இந்த இடத்தில் புதிதாக காய்கறி மார்க்கெட் கட்ட அரசு 4 கோடியே 50 லட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த இடத்தில் விரைவில் கட்டடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை நகராட்சி கூட்டத்தில் வைத்து முறைப்படி பணி துவக்கப்படும்.மேலும் நகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் புதிய ரோடுகளும் அமைக்கப்படும் என்றார்.

Last Updated on Tuesday, 27 April 2010 07:34
 

தாந்தோணி நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம்: ரூ.32.93 கோடியில் செயல்படுத்த முடிவு

Print PDF

தினமலர் 26.04.2010

தாந்தோணி நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம்: ரூ.32.93 கோடியில் செயல்படுத்த முடிவு

கரூர்: தாந்தோணி நகராட்சியில் 32.93 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்துவற்கான திட்ட மதிப்பீடு பணி முடிக்கப்பட்டுள்ளது. தாந்தோணி நகராட்சியில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் தலைவர் ரேவதி தலைமையில் நடந்தது. கமிஷனர் தெய்வசிகாமணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தாந்தோணி நகராட்சியில் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 31 ஆயிரத்து 591 எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே 2040ல் ஒரு லட்சத்து ஆயிரத்து 600 எனமளவில் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கட்டளை காவிரியில் இரண்டு கிணறுகளை ஆதாரமாக கொண்டு குடிநீர் திட்டம் செயல்படுகிறது. தினசரி 4.32 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. பெருகும் மக்கள்தொகை அடிப்படையில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்த, திட்ட அறிக்கை தயாரிக்க நகராட்சி நிர்வாக ஆணையர் மூலமாக 2008ல் ஃபிஷ்னர் இந்தியா நிறுவனத்துக்கு ஆணையிடப்பட்டது.

ஃபிஷ்னர் இந்தியா நிறுவன முதன்மை பொறியாளர் ஜெயச்சந்திரபோஸ், வடிவமைப்பு பொறியாளர் சரவணன் கூறியதாவது: தாந்தோணிமலை குடிநீர் அபிவிருத்தி திட்டம் 32.93 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. காவிரியில் கீழ்க்கட்டளையில் உள்ள கிணறுகளுக்கு அருகில் ஆறு மீ., விட்டம், 19.55 மீட்டர் ஆழத்தில் நீர் சேகரிப்பு கிணறு அமைத்து, 135 குதிரை திறன் கொண்ட டர்பைன் மின் இறைப்பான் பொருத்தப்பட்டு, 15.20கி.மீ., நீளத்துக்கு 400 மி.மீ., 'டிஐ' குழாய் மூலம் பொன்நகரில் கட்டப்படும் ஐந்து லட்சம் லிட்டர் கொள்ளவு தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் சேகரிக்கப்படும். தற்போது பயன்பாட்டில் உள்ள குடிநீர் திட்டம் எவ்வித மாறுதலுமின்றி மூலக்காட்டனூர் நீர் தேக்க தரைமட்ட தொட்டிவரை பயன்படுத்தப்படும்.

பொன்நகர் தரைமட்ட தொட்டியில் இருந்து செல்லாண்டிபாளையம், கலெக்டர் அலுவலகம் பின்புறம், தோரணக்கல்பட்டி, பொன்நகர் பகுதியில் கட்டப்புடும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பயன்பாட்டில் உள்ள மூலக்காட்டனூர் தரைமட்ட தொட்டியில் இருந்து காந்திகிராமம் மேல்நிலை தொட்டிக்கும் நீர் உந்தப்படும்.திட்டத்துக்காக கூடுதலாக ஏழு இடங்களில் ஒரு லட்சம் லிட்டர் முதல் 15 லட்சம் லிட்டர் வரை கொள்ளளவு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள ஏழு தொட்டிகளும் பயன்படுத்தப்படும். புதிதாக அமையும் தொட்டிகளின் கொள்ளளவு 47 லட்சம் லிட்டர், பயன்பாட்டில் உள்ள தொட்டிகளின் கொள்ளளவு 13.50 லட்சம் லிட்டர் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.நகராட்சி பகுதி 14 குடிநீர் விநியோக பகுதியாக பிரித்து மொத்தம் 146.32 கி.மீ., பகிர்மான குழாய் நீளத்தில், பழைய 'பிவிசி' குழாய் 30.52 கி.மீ., நீளம் மற்றும் புதிய 'ஹெச்டிபிஇ' குழாய் 115.8 கி.மீ., நிளத்துக்கு அமைத்து குடிநீர் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2010 மக்கள் தொகை அடிப்படையில் சுமார் 11 ஆயிரத்து 772 வீட்டு குடிநீர் இணைப்புகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. திட்டத்தின் மொத்த மதிப்பீடு 32.93 கோடி ரூபாய் மற்றும் பராமரிப்பு செலவு ஆண்டுக்கு 1.88 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2040 ஆண்டு மக்கள் தொகை உச்சகட்ட இலக்காக கொள்ளப்பட்டுள்ளது.நகராட்சி தலைவர் ரேவதி கூறுகையில், ''திட்ட அறிக்கை நகராட்சி நிர்வாக ஆணையர் பார்வைக்கு அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் நிதி ஒதுக்கீடு முறை குறித்து முடிவு செய்யப்பட்டு, டெண்டர் அழைப்பு மற்றும் வழக்கமான நடைமுறைகள் முடித்து திட்டம் துவங்கும். விரைவில் பணி துவங்கப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடைமுறைக்கு வந்ததும், மக்கள் 24 மணிநேரமும் குழாயில் தண்ணீர் பெறும் வகையில் இத்திட்டம் இருக்கும்,'' என்றார்.

Last Updated on Monday, 26 April 2010 06:48
 

நகராட்சி வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

Print PDF

தினமணி 23.04.2010

நகராட்சி வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

அரியலூர், ஏப் 22: அரியலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் த. ஆபிரகாம் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், அரியலூர் நகராட்சியில் அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் ரூ. 1 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பயணியர் நிழல்குடையை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர், நிழல்குடையை தரமானதாகவும், உறுதியாகவும் கட்ட வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், சடையப்பன் மற்றும் சேர்வைத்தெரு பகுதியில், டீக் கடை, பெட்டிக்கடை உரிமையாளர்களிடம் நகராட்சி அனுமதி பெற்று கடைகள் நடத்தப்படுகின்றனவா என்பது குறித்தும், அனுமதி பெறாமல் இயங்கும் கடைகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும், கல்லக்குடியில் ரூ. 3 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மகளிர் பொதுக் கழிப்பறையை ஆய்வு செய்த ஆட்சியர், தற்போது பயன்பாட்டில் உள்ள பொதுக் கழிப்பறையை சுகாதாரமாகவும், போதுமான தண்ணீர் வசதி ஏற்படுத்தி, கழிப்பறையை சுற்றி உள்ள முள் புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவ வசதி மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளை கேட்டறிந்து, அலுவலர்களின் வருகைப் பதிவேடு, மருந்து வழங்கும் பதிவேடு மற்றும் இருப்பு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் ஆட்சியர் ஆபிரகாம்.

இந்த ஆய்வுகளின் போது, அரசு தலைமை மருத்துவர் சிவக்குமார், நகராட்சி ஆணையர் சமயச்சந்திரன், பொதுப் பணி மேற்பார்வையாளர் பாண்டு, பொறியாளர் நிலேஸ்வரன், மருத்துவர் அன்புமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்

 


Page 99 of 160