Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

வேளச்சேரி, கொளத்தூரில் மழைநீர் கால்வாய் அமைக்க பணி ஆணை:மேயர் அறிவிப்பு

Print PDF

தினமலர் 09.04.2010

வேளச்சேரி, கொளத்தூரில் மழைநீர் கால்வாய் அமைக்க பணி ஆணை:மேயர் அறிவிப்பு

சென்னை:மழைக் காலங்களில் வெள்ளப் பாதிப்பை தடுக்க, வேளச்சேரி, கொளத்தூர் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்களை கட்ட, பணி ஆணைகள் வழங்கப் பட்டதாக மேயர் சுப்ரமணியன் கூறினார்.மேயர் சுப்ரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

மழைக் காலங்களில் நகரில் வெள்ள பாதிப்பை தடுக்க, ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின்கீழ், 1,447 கோடி ரூபாய் மதிப் பீட்டில் புதிய மழைநீர் வடிகால் கால்வாய்கள் கட்டுவது, நீர்வழித்தடங்களை ஆழப்படுத்தி கரைகளை சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.இதில், 860 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி சார்பில், நகரில் 12 பகுதிகளாக பணிகள் பிரிக்கப் பட்டு, தனித்தனியே ஒப்பந்தங்கள் கோரப் பட்டது.

இதில், வேளச்சேரி பகுதிகளில் 41 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கொளத்தூர் பகுதியில், 22 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் புதிய மழைநீர் வடிகால்வாய்கள் கட்டுவதற்கும், வடக்கு பக்கிங் காம் கால்வாயை தூர் எடுத்து ஆழப்படுத்தியும், கரைகளை பலப்படுத்தும் பணிக்கு 16 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிஆணைகள் வழங்கப் பட்டுள்ளன.

பத்து நாட்களில் பணிகள் துவங்கப்படும்.அதுபோல், தெற்கு பக்கிங்காம் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் ஆகியவைகளை அகலப் படுத்தி தூர் எடுத்து, கரைகளை பலப்படுத்தும் பணிகளுக்கு தேவைப்படும் ஒப்பந்தங்கள் விடப் பட்டு, ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் ஒப்பந்த தொகையை குறைக்கும்படி மாநகராட்சி பேச்சு நடத்தி வருகிறது.

முடிவு ஏற்பட்டதும், வரும் 29ம் தேதி நடைபெறும் மன்ற கூட்டத்தில்தீர்மானம் கொண்டு வரப்பட்டு பணிஆணை வழங் கப்படும்.தொடர்ந்து, மீதமுள்ள ஆறு பணிகளுக்கும் ஒப்பந்தம் கோரப்படும்.இவ்வாறு மேயர் கூறினார்.

Last Updated on Friday, 09 April 2010 08:20
 

அண்ணா சாலையில் ரூ. 500 கோடியில் ஆறு மேம்பாலங்கள்

Print PDF

தினமலர் 09.04.2010

அண்ணா சாலையில் ரூ. 500 கோடியில் ஆறு மேம்பாலங்கள்

சென்னை:அண்ணா சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அங்கு 500 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள ஆறு மேம்பாலங்களுக்கான திட்டங்களுக்கு விரிவான தொழில்நுட்ப அறிக்கை (டி.பி.ஆர்.,) தயார் செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள் அமைக்க மாநில நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது.தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், சாந்தி தியேட் டர் சிக்னல், எல்..சி., சிக்னல், ஸ்பென்சர் சிக்னல், தேனாம் பேட்டை எல்டாம்ஸ் சாலை, நந்தனம் தேவர் சிலை சிக்னல், சி..டி., நகர் உள்ளிட்ட ஆறு இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.

மொத்தம் 500 கோடி ரூபாய் மதிப்பில், இந்த மேம்பாலங்கள் அமையவுள்ளன. இதற்கான, விரிவான தொழில்நுட்ப அறிக்கை தயார் செய்யும் பணி துரிதமாக நடந்து வருகிறது.ஆறு மாதத்தில் இந்தப்பணி முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவக்கப்படவுள்ளன.இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அண்ணா சாலையில் ஆறு மேம்பாலங்கள் அமைந்தால் வாகனங்கள், தாம்பரத்திலிருந்து அண்ணா சாலைக்கு நெரிசலில் சிக்காமல் எளிதாக சென்றுவிட முடியும்.

மாதவரம் - செங்குன்றம், திருவள்ளூர் - செங்குன்றம் சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. உள்வட்ட சாலையில் எட்டு சுரங்கப்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Last Updated on Friday, 09 April 2010 07:36
 

புதுப் பொலிவு பெறும் தஞ்சை சிவகங்கை பூங்கா

Print PDF

தினமணி 08.04.2010

புதுப் பொலிவு பெறும் தஞ்சை சிவகங்கை பூங்கா

தஞ்சாவூர்
, ஏப் 7: தஞ்சாவூரில் உள்ள சிவகங்கை பூங்காவில் சுற்றுலாத் துறை மூலம் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மக்களுக்கு நகரில் உள்ள பிரதான பொழுதுபோக்கு இடங்களில் சிவகங்கை பூங்காவும் ஒன்று. சிறுவர் ரயில், நீச்சல் குளம், படகு சவாரி, நீறுற்றுகள், ராட்டினம், ஊஞ்சல் உள்ளிட்டவற்றுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுபோக்க ஏற்ற இடமாக இப்பூங்கா உள்ளது.

வார விடுமுறை நாள்களில் பூங்காவிற்கு பொதுமக்கள் வருகை அதிகமாக இருக்கும். தற்போது பள்ளித் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், நாள்தோறும் பூங்காவிற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சல், ராட்டினம், சறுக்குப் பலகை போன்றவை பழுதடைந்து இருந்தன. தற்போது சுற்றுலாத் துறை மூலம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு இவை அனைத்தும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், ரூ. 5 லட்சத்தில் புதிதாக 5 பைபர் படகுகள் வாங்கப்பட்டுள்ளன. படகு சவாரி செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவதால் படகு சவாரி செய்ய கூட்டம் அதிகமாக வருகிறது.

பூங்காவில் பழுதடைந்திருந்த தாமரை ஊற்று ரூ. 1.10 லட்சத்தில் சீரமைக்கப்பட்டுள்ளது. சிறுவர் ரயிலிலும் பழுது இருந்ததால் அதைக் கடந்த வாரம் முதல் இயக்கவில்லை. அதையும் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பில் ரயில் தண்டவாளம் மற்றும் ரயில் பெட்டிகளைச் சீரமைத்து வருகின்றனர். இப்பணிகளை விரைவில் முடித்து ரயில் சவாரியை தொடங்க அதிகாரிகள் முனைப்புகாட்டி வருகின்றனர்.

பூங்காவில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் குப்பைகள் சேர்ந்து மாசுபடுகிறது. எனவே, கூடுதலாக துப்புரவுப் பணியாளர்களை நியமித்து பூங்காவை எப்போதும் துப்புரவுடன், அழகுடன் பராமரிப்பதற்கும் அதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் த. நடராஜனிடம் கேட்டபோது, வியாழக்கிழமைக்குள் சிறுவர் ரயில் பழுதுநீக்கம் செய்யப்பட்டு இயக்கப்படும். கூடுதலாக துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பராமரிப்புப் பணிகளை திருப்திகரமாக நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடுவது உள்ளிட்ட அறிவிப்புகளை பூங்காவிற்கு வருபவர்கள் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

Last Updated on Thursday, 08 April 2010 09:52
 


Page 105 of 160