Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

கூவம் நதிக்கரையை அழகுபடுத்த சிவானந்தா சாலையில் பூங்கா: துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்

Print PDF
தினமணி 02.02.2010

கூவம் நதிக்கரையை அழகுபடுத்த சிவானந்தா சாலையில் பூங்கா: துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்


சென்னையில் சிவானந்தா சாலையில் கூவம் நதிக்கரை பூங்கா அமைக்கும் பணியினை

பார்வையிடுகிறார் துணை முதல்வர் மு..ஸ்டாலின். உடன் சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் எஸ்.ராமசுந்தரம்.

சென்னை, பிப். 1: கூவம் நதிக்கரையை அழகுபடுத்தும் வகையில் சிவானந்தா சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் விரைவில் பூங்கா அமைக்கப்படும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சிவானந்தா சாலையில் கூவம் நதிக்கரையோரப் பகுதிகளை ஆய்வு செய்து பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தை, பூங்கா அமைக்கும் பணிகளுக்காக மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் அவர் திங்கள்கிழமை பங்கேற்றார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

அடையாறு, பக்கிங்ஹாம், கூவம் ஆகிய நீர்வழித் தடங்களை சீரமைக்க அரசு ஏற்கெனவே உயர் நிலைக் குழுவை அமைத்துள்ளது.

இந்தக் குழுவின் முதலாவது கூட்டத்தில், கூவம் நதியைச் சீரமைக்கும் திட்டம் குறித்த ஒருமித்த திட்ட அறிக்கையைத் தயாரிக்கவும், திட்ட செயலாக்கத்தின் போது தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறவும் சிங்கப்பூர் அரசு நிறுவனத்துடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.

கூவம் சீரமைப்புத் திட்டத்தின் அடுத்தகட்டமாக சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை பகுதிகளில் மோட்டார் உதிரிபாகங்கள் விற்கும் கடைகள், சிறு ஆலைகளை மறைமலை நகருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுப்பேட்டை பகுதியில் ரூ. 1.27 கோடியில் பூங்கா பணிகள்: புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பூங்காக்கள் மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட உள்ளன.

இந்தப் பகுதியில் கூவம் நதிக்கரையோரம் ரூ. 1.27 கோடியில் பூங்கா அமைக்கும் பணிகள் இப்போது நடைபெறுகின்றன.

இப்போது சிவானந்தா சாலையில் அண்ணா சாலை முதல் காமராஜர் சாலை வரை 1100 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகல பரப்பில் பூங்கா அமைக்க மாநகராட்சிக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொசு ஒழிப்புப் பணி: முக்கிய நீராதாரங்களில் கொசு ஒழிப்புப் பணிகளுக்காக 9 படகுகளில் சென்று கொசுப் புழுக்கள், லார்வாக்களை ஒழிக்கும் வகையில் மருந்து தெளிக்கப்படுகிறது.

இந்தப் பணிக்காக மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 5 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரத் தூதுவர் அட்டைகள் வழங்கப்பட்டு, கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொசு ஒழிப்புப் பணியில் மாநகராட்சியின் 1,200 ஊழியர்கள் புகை பரப்பிகள், தெளிப்பான்கள் உதவியுடன் தினமும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் எல்லா போராட்டங்களையும் ஜெயலலிதா நடத்திய பின்னர் இப்போது கடைசியாக கொசு ஒழிப்புப் போராட்டத்துக்கு வந்துள்ளார் என்றார் ஸ்டாலின்.

இதில் மாநகர மேயர் மா. சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் எஸ். ராமசுந்தரம், கூவம் சீரமைப்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் பனீந்தரரெட்டி, துணை முதல்வரின் செயலாளர் கே. தீனபந்து, மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 02 February 2010 10:20
 

பெரம்பலூரில் ரூ.151 கோடி திட்டப்பணி துணை முதல்வர் ஃபிப்.,4ல் துவக்கிவைப்பு

Print PDF

தினமலர் 02.02.2010

பெரம்பலூரில் ரூ.151 கோடி திட்டப்பணி துணை முதல்வர் ஃபிப்.,4ல் துவக்கிவைப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் ஃபிப்., நான்காம் தேதி 151 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார் என கலெக்டர் விஜயகுமார் கூறினார். இது குறித்து நிருபர்களிடம் கலெக்டர் மேலும் கூறியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் காரை கிராமத்தில் இரண்டு கோடியே 37 லட்சத்து 43 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சமத்துவபுரத்தை தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் ஃபிப்., நான்காம் தேதி திறந்து வைக்கிறார். தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் ஒரு கோடியே 69 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சிறுவர் பூங்கா, 69 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் விளையாட்டு அரங்கம், பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் சைக்கிள் ஸ்டாண்ட், பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் துறைமங்கலம் அரசு குடியிருப்பில் பூங்கா, மாத்தூர்-திட்டக்குடி சாலை, பெரம்பலூர்-ஆத்தூர் சாலை, கிருஷ்ணாபுரம்-பூலாம்பாடி சாலை, நெய்க்குப்பை-சாத்தனவாடி-மேட்டுப்பாளையம்- வாலிகண்டபுரம் சாலை, ஆலத்தூர்-அரியலூர் சாலை, அயனாபுரம் சாலை, கொளக்காநத்தம்-கருடமங்கலம் சாலை ஆகிய சாலைகளில் பாலங்கள் என மொத்தம் 115 பணிகளுக்கு 23 கோடியே 22 லட்சத்து 74 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களை பெரம்பலூரில் நடக்கும் அரசு விழாவில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

அடிக்கல் நாட்டும் பணிகள்: 97 கோடி ரூபாய் மதிப்பில் குன்னம் அருகே அரசு மருத்துவக்கல்லூரி, எட்டு கோடி ரூபாய் மதிப்பில் வேலூர் கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, இரண்டு கோடியே 49 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் அயன்பேரையூர் கிராமத்தில் சமத்துவபுரம், பாளையம் கிராமத்தில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளிக்கூடம், மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் ஒரு கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த கூட்டுறவுத்துறை அலுவலகம், வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டத்தில் 50 லட்சம் மதிப்பில் விதை கிடங்கிற்கான கட்டிடம், ஒரு கோடியே 81 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் என 17 அரசு புதிய கட்டிடங்களுக்கு 112 கோடியே 25 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பில் பெரம்பலூரில் நடைபெறும் அரசு விழாவில் அடிக்கல் நாட்டுகிறார்.

விழாவில் 15, ஆயிரத்து 366 பயனாளிகளுக்கு 16 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

ஆக 112. 25 கோடி ரூபாய் மதிப்பிலான 17 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 23.23 கோடி ரூபாய் மதிப்பிலான 115 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், 15 ஆயிரத்து 366 பயனாளிகளுக்கு 16.40 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 151 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்டப்பணிகளை தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். விழாவில் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராசா, மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை இணை அமைச்சர் நெப்போலியன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Last Updated on Tuesday, 02 February 2010 06:37
 

அண்ணாசாலை முதல் காமராஜர் சாலை வரை அழகிய பூங்கா

Print PDF

தினமலர் 02.02.2010

அண்ணாசாலை முதல் காமராஜர் சாலை வரை அழகிய பூங்கா

சென்னை: ""அண்ணாசாலை முதல் காமராஜர் சாலை வரை, கூவம் ஆற்றையொட்டி அழகிய பூங்கா அமைக்கப்படும்,'' என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். துணை முதல்வர், நேற்று காலை சிவானந்தா சாலையில் உள்ள பகுதிகளை ஆய்வு செய்து, பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 1,100 மீட்டர் நீளம், ஐந்து மீட்டர் அகலம் உள்ள இடத்தை, பூங்கா அமைப்பதற்காக மாநகராட்சியிடம் ஒப்படைத்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: அடையாறு பக்கிங்காம் கால்வாய், கூவம் போன்ற நீர்வழித் தடங்களை சீரமைக்க எனது தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூவம் ஆற்றை சீரமைக்க ஒருமித்த சுற்றறிக்கை அளிக்கவும், திட்ட செயலாக்கத்தின்படி, தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் பெறவும், "சிங்கப்பூர் கோ ஆப்ரேஷன் என்டர்பிரைசஸ்' நிறுவனத்துடன், அடுத்த மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளோம். கூவம் ஆற்றை சீரமைக்கும் பணிகளின் குழு, சிந்தாதிரிப் பேட்டை, புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில், கூவம் கரையை ஆக்கிரமித்து இருந்த ஆட்டோ மற்றும் மோட்டார் உதிரி பாகங்களின் சிறிய தொழிற்சாலைகளை மறைமலை நகருக்கு மாற்ற முடிவெடுத்து, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

புதுப்பேட்டை லாங்ஸ் காலனி பகுதியில் இருந்த 1,150 ஆக்கிரமிப்புகள், கடந்த அக்டோபர் மாதம் அகற்றப்பட்டு மாற்றும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க, ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில், அந்த இடத்தில் அழகிய பூங்கா அமைக் கும் பணி நடந்து வருகிறது. சிவானந்தா சாலையில் அண்ணாசாலை முதல் காமராஜர் சாலை வரையில் உள்ள கூவம் கரையில், 1,100 மீட்டர் நீளத்திற்கும், ஐந்து மீட்டர் அகலத்திற்கும் உள்ள இடம், பூங்கா அமைக்க மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெள்ளக் காலங்களில் கூவம் ஆற்றில் நீரோட்டத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் பூங்கா அமைக்கப்படும். இவ்வாறு துணை முதல்வர் கூறினார்..

Last Updated on Tuesday, 02 February 2010 10:21
 


Page 120 of 160