Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் 3 ஆண்டுகளில் ரூ.2,524 கோடியில் பணிகள்

Print PDF

தினமணி 3.11.2009

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் 3 ஆண்டுகளில் ரூ.2,524 கோடியில் பணிகள்

சேலம், நவ. 2: அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,524 கோடியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் அண்ணா நூற்றாண்டு நினைவு மன்ற கூட்ட அரங்கு, தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு ரூ.86.30 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட திட்டப் பணிகளைத் திறந்து வைத்தும், ரூ.1.55 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியும் அமைச்சர் பேசியது:

தமிழகத்தில் உள்ள 12,620 ஊராட்சிகள், 561 பேரூராட்சிகளில் கிடைக்கும் நிதியைக் கொண்டு அவற்றிற்கான அடிப்படை வசதிகளை செய்ய முடியவில்லை. எனவே அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,524 கோடியில் தார்சாலை, சிமென்ட் சாலை, நூலகம், வடிகால் வசதி, சுகாதாரப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பேரூராட்சிக்கும் ரூ.50 லட்சம் செலவு செய்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கன்னங்குறிச்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2.40 கோடியில் 104 திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இப்போது ரூ.31 லட்சத்தில் 15 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

கன்னங்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள சாலை பழுதடைந்துள்ளது. இதை பேரூராட்சி நிதியில் இருந்து செலவிட்டு சரி செய்து கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.

உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இரா.ஞானசேகரன், செயற்பொறியாளர் மோகன்ராஜ், பேரூராட்சித் தலைவர் அ.பூபதி, துணைத் தலைவர் தம்பித்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 03 November 2009 07:08
 

தேனி மாவட்டத்தில் மூன்றரை ஆண்டுகளில் ரூ. 140 கோடி வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர்

Print PDF

தினமணி 2.11.2009

தேனி மாவட்டத்தில் மூன்றரை ஆண்டுகளில் ரூ. 140 கோடி வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர்

தேனி, நவ. 1: தேனி மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ. 140 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியர் பி. முத்துவீரன் தெரிவித்தார்.

தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சிகள் தின விழா நடைபெற்றது. விழாவுக்குத் தலைமை வகித்து, பரிசுகள் வழங்கி ஆட்சியர் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் துணை முதல்வர் மு.. ஸ்டாலின் உத்தரவின்படி ஆண்டுதோறும் நவம்பர் முதல் தேதி உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் ரூ. 20 கோடியில் 1,508 பணிகள் நடைபெற்றுள்ளன.

ரூ. 31.50 கோடியில் 12,230 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் 12-வது நிதிக்குழு மான்யத் தொகையில் இருந்தும் ரூ. 23.45 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் அனைத்துப் பேரூராட்சிகள் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் ரூ. 35 கோடியில் 1,140 பணிகள், நகராட்சிகளில் ரூ. 70 கோடியில் 1,410 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர்.

விழாவில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சச்சிதானந்தன், பேரூராட்சித் தலைவர் வித்யா, செயல் அலுவலர் செந்தில்குமார், துணைத் தலைவர் உதயசூரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

ரூ 22.23 கோடியில் அரியலூரை அழகுபடுத்தும் பணி

Print PDF

தினமணி 1.10.2009

ரூ 22.23 கோடியில் அரியலூரை அழகுபடுத்தும் பணி

அரியலூர், செப் 30: ரூ 22.23 கோடியில் அரியலூர் நகராட்சியை அழகுபடுத்த, அரசுக்கு கருத்துரு அனுப்ப நகர்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரியலூர் நகராட்சியின் சாதாரணக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் விஜயலெட்சுமி செல்வராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

நகர்மன்ற நிர்வாக அதிகாரி டி. சமயச்சந்திரன், நகர்மன்றத் துணைத் தலைவர் வி. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பேருந்து நிலைய வளாகத்தில் ரூ 2.71 கோடியில் அலங்கார வளைவு, சிமென்ட் தளம், நவீனக் கழிப்பறைகள் அமைக்கும் பணி, அமரர் பூங்காவில் ரூ. 40 லட்சத்தில் நவீன தகன எரிவாயு மேடை, காந்தி மார்க்கெட்டில் ரூ. 20 லட்சத்தில் நவீன ஆடு அடிக்கும் தொட்டி அமைத்தல், 3 ஆயிரம் கழிவறை இல்லாத வீடுகளுக்கு கழிவறை, காந்தி மார்க்கெட்டில் ரூ. 18 லட்சத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுதல்,

ரூ. 25 லட்சத்தில் ஜெயங்கொண்டம், பேருந்து நிலைய உட்புறம், திருச்சி சாலை, பெரம்பலூர், செந்துறை சாலை முகப்புகள் மற்றும் அண்ணாசாலை ஆகிய இடங்களில் நீருற்று அமைக்கும் பணி.

ரூ 2.5 கோடியில் பழுதடைந்த கொள்ளிடம் குடிநீர்க் குழாயை மாற்றியமைத்தல், ரூ. 50 லட்சத்தில் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் என்.சிவஞானம், தனது வார்டுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படுவதில்லையென்று கூறி நகர்மன்ற கூட்டத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி கூட்ட அரங்கில் இருந்தார்.

கூட்டத்தில் நகராட்சித் தலைமை அலுவலர் என். குமரன், நகர்மன்ற உறுப்பினர்கள் த. ராமமூர்த்தி, எம். ராஜா, மாலா ஆ. தமிழரசன், . குணா, .பி. மணிவண்ணன், அமுதலெட்சுமி காசிநாதன், .பி.எஸ். பழனிசாமி, எஸ்.எம். சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Thursday, 01 October 2009 07:18
 


Page 145 of 160