Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

ரூ.6.9 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Print PDF
தினமணி              07.03.2013

ரூ.6.9 கோடி மதிப்பில்  வளர்ச்சிப் பணிகள்:  ஆட்சியர் ஆய்வு


பெருந்துறை தொகுதியில் ரூ.6.9 கோடியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை ஈரோடு ஆட்சியர் வே.க.சண்முகம் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

 நபார்டு நிதி உதவியின் கீழ் பெருந்துறை பேருராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்படும் புதிய கட்டடப் பணிகளை ஆட்சியர் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து பெருந்துறை அரசு மருத்துவமனைக்குச் சென்று சுகாதாரப் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

 நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பெருந்துறை-கவுந்தப்பாடி சாலையில் ரூ.25 லட்சம் மதிப்பில் சிறப்புத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பராமரிப்புப் பணிகளைப் பார்வையிட்டனர். இச்சாலைப் பணிகளை துரிதமாக முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தினார்.

 இதையடுத்து, இதே சாலைப் பகுதியில் பெருந்துறை பேருராட்சிப் பகுதி சாலை ரூ.1.04 கோடி மதிப்பில் நடைபெறும் சாலை மேம்பாடு, சிறுபாலம் அமைக்கும் பணியையும் அவர் ஆய்வுசெய்தார். தொடர்ந்து, ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய்த் திட்டத்தின்கீழ் ரூ.1.58 கோடியில் நடைபெறும் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டடப் பணியையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

 ஆய்வின்போது பெருந்துறை பேரூராட்சித் தலைவர் சரஸ்வதி துரைராஜ், பேரூராட்சிகள் துறை செயற்பொறியாளர் மோகன், பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் தன்னாசி, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் எம்.வாணி, பி.தமிழ்ச்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.
Last Updated on Thursday, 07 March 2013 10:06
 

மாநகராட்சி திட்டப்பணிகளுக்கு ரூ.1,880 கோடி : மத்திய அரசுக்கு சென்றது பரிந்துரை

Print PDF
தினமலர்       06.03.2013

மாநகராட்சி திட்டப்பணிகளுக்கு ரூ.1,880 கோடி : மத்திய அரசுக்கு சென்றது பரிந்துரை


கோவை:கோவை மாநகராட்சியில் ஜவஹர்லால்நேரு தேசிய நகரப்புற புனரமைப்பு திட்டம் இரண்டாம் கட்டத்தில், மழை நீர் வடிகால், இயற்கை மழைநீர் வடிகால் புனரமைப்பு, குளங்கள் புனரமைப்பு, தடையில்லா குடிநீர் வழங்கும் பணிகள் மேற்கொள்ள, 1,880 கோடி ரூபாய் திட்டங்களுக்கு அனுமதி கோரி, மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் ஜவஹர்லால்நேரு தேசிய நகரப்புற புனரமைப்பு திட்டத்தில், பாதாள சாக்கடை, மழை நீர் வடிகால், குளங்களை தூர்வாரி புனரமைத்தல், நகர்ப்புற ஏழை மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.மாநகராட்சியின் பழைய 72 வார்டுகளில் முதல் கட்டத்தில், பாதாள சாக்கடை பணிகள் 377 கோடி ரூபாய்க்கு அனுமதி வழங்கப்பட்டது. அதில், 334 கி.மீ., நீளத்திற்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடக்கிறது.பில்லூர் 2வது குடிநீர் திட்டத்திற்கு 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்து, குடிநீர் வினியோகம் துவங்கப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் 97 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு, குப்பை தரம் பிரித்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மழைநீர் வடிகால் பணிகளுக்கு 180 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதில், 731 கி.மீ., நீளத்திற்கு வடிகால் வசதி ஏற்படுத்தும் பணிகள் நடக்கிறது. நகர்ப்புற ஏழை மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்டம் (பி.எஸ்.யு.பி) 443 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிதியில், 2707 தனிநபர் வீடுகள் மக்கள் பங்களிப்புடன் கட்டும் பணி நடக்கிறது.மேலும், 9923 குடியிருப்புகளுடன் அடுக்குமாடி கட்டப்பட்டு, குளம் மற்றம் நீர்நிலைப்புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு வீடு ஒதுக்கப்படுகிறது. இதில், உக்கடம், அம்மன்குளத்தில் 3,840 குடியிருப்புகளுடன் அடுக்குமாடி கட்டும் பணி நடக்கிறது. மீதமுள்ள குடியிருப்புகள் கட்ட கோவைபுதூர், உக்கடம், வெள்ளலூர், வெள்ளக்கிணறு பகுதிகளில் இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.சங்கனூர், விளாங்குறிச்சி, கருப்பராயன்கோவில், கோவில்மேடு ஓடைப்புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு 9,600 குடியிருப்புடன் அடுக்குமாடி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், ஜவஹர்லால்நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில், இரண்டாம் கட்டத்திற்கு பணிகள் தேர்வு செய்யப்பட்டு, உத்தேச மதிப்பீட்டுடன் மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு அனுப்பியுள்ளனர்.

மாநகராட்சியின் பழைய 72 வார்டுகளில் முதல்கட்டத்தில் விடுபட்ட பகுதிகளில் 1,482 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்க 490 கோடி ரூபாய்க்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.சிங்காநல்லூர், வாலாங்குளம், பெரியகுளம், முத்தண்ணன்குளம், செல்வசிந்தாமணி, செல்வாம்பதி, நரசம்பதி, கிருஷ்ணம்பதி ஆகிய எட்டு குளங்களை தூர்வாரவும், கரையை அகலப்படுத்தி பூங்கா மற்றும் நடைபாதை அமைக்கவும் 200 கோடி ரூபாய்க்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இயற்கை மழைநீர் வடிகால் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றி, தூர் வாரி சுத்தம் செய்ய 500 கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், சங்கனூர் பள்ளம் 269 கோடி ரூபாயில் 10.18 கி.மீ.,; கணபதி - சங்கனூர் பள்ளம் 127.8 கோடி ரூபாயில் 13.86 கி.மீ.,; விளாங்குறிச்சி பள்ளம் 61.2 கோடி ரூபாயில் 11 கி.மீ.,; கருப்பராயன் கோவில் பள்ளம் 18.5 கோடி ரூபாயில் 1.9 கி.மீ.,; கோவில்மேடு பள்ளம் 23.3 கோடிரூபாயில் 3.3 கி.மீ., புனரமைப்பு செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.குடிநீர் தேவையை பூர்த்தி செய்து, தன்னிறைவு பெற்ற மாநகரமாக மாற்றவும், மாநகராட்சியிலுள்ள பழைய குடிநீர் குழாய்களை மாற்றியமைத்து, 22 இடங்களில் புதிதாக மேல்நிலைத்தொட்டி கட்டவும், குடிநீர் இணைப்புகளில் அளவீடு செய்ய "ஆட்டோ மீட்டர்' பொருத்தவும் 690 கோடி ரூபாயில் திட்டமிடப்பட்டுள்ளது.இரண்டாம் கட்டத்திற்கான இந்த நான்கு பணிகளுக்கான திட்டமும், மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.கமிஷனர் (பொறுப்பு) சிவராசு கூறுகையில், ""முதல்கட்டத்தில் மொத்தம் 1,211 கோடி ரூபாய்க்கு அனுமதி பெற்று, பணிகள் நடக்கிறது. இரண்டாம் கட்டத்தில், 1,880 கோடி ரூபாய்க்கு நான்கு திட்டப் பணிகளுக்கு பரிந்துரை மட்டுமே அனுப்பியுள்ளோம். திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்ததும், விரிவான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடு ஆகியவை தயாரித்து அனுப்பப்படும். அதற்கு நிர்வாக ஒப்புதல், தொழில்நுட்ப ஒப்புதல் கிடைத்ததும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.சாதனைக்கு "சோதனை'கோவையில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் நிறைவடையவில்லை. பணிகள் நடந்த இடத்தில், ரோடு போடாமல் உள்ளது. திட்டத்தில் முக்கிய இணைப்பு பணிகள் நிறைவடையாததால் மாநகரில் சாக்கடை கழிவு நீர் பல இடங்களில் தேங்கி நிற்கிறது. மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் பல இடங்களில் பாதியில் நிற்பதால் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி, கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது. பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்தியும், இயற்கை கைகொடுக்காததால், தேவைக்கேற்ப குடிநீர் கிடைக்காத நிலையுள்ளது. திட்டப்பணிகளை சாதனைகளாக குறிப்பிட்டாலும், நிறைவு பெறாததால் சாதனையை "சோதனை'க்கு உள்ளாக்கியுள்ளது.
 

பருவதமலையில் ரூ.2 கோடியில் அடிப்படை வசதிகள்

Print PDF
தினமணி         05.03.2013

பருவதமலையில் ரூ.2 கோடியில் அடிப்படை வசதிகள்


பருவதமலை மீது படிகள் அமைக்கவும், குடிநீர் வசதி செய்யவும் ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலசப்பாக்கம் எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 180 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

விழாவில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியது:

தமிழகத்தில் இப்போது படிப்படியாக மின் வெட்டு நேரம் குறைந்து வருகிறது. இதுவும் விரைவில் சரி செய்யப்பட்டுவிடும்.  டெல்டா பகுதி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களையும் வறட்சி மாவட்டமாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் மற்ற மாவட்டங்களுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் 67 புதிய வழித்தடங்களில் பேருந்து இயக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. 37 புதிய பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ரூ.8 கோடியில் மேலாரணி, மேல்சோழங்குப்பம் வழியாக ஜமுனாமரத்தூர் செல்ல சாலைப் பணி தொடங்கப்படவுள்ளது.

தென்மாதிமங்கலம் பருவதமலை மீது சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக படிகள் அமைக்கவும், மலை மீது குடிநீர் வசதி செய்யவும் சுற்றுலா துறை மூலம் ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கலசப்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விழாவில், வட்டாட்சியர் கோபால் முன்னிலை வகித்தார். இடர்பாடு வட்டாட்சியர் முனியப்பன் வரவேற்றார். ஒன்றியக்குழுத் தலைவர்கள் ஜெயராமன் (கலசப்பாக்கம்), கோவிந்தராஜ் (துரிஞ்சாபுரம்), அதிமுக ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், சந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன்,பிச்சாண்டி மற்றும் அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
 


Page 21 of 160