Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

சென்னை பெருநகர பகுதியின் எல்லை விரிவாக்கம் : பிற நகர அதிகாரிகளுடன் ஆலோசிக்க முடிவு

Print PDF
தினமலர்      01.08.2012

சென்னை பெருநகர பகுதியின் எல்லை விரிவாக்கம் : பிற நகர அதிகாரிகளுடன் ஆலோசிக்க முடிவு

 சென்னை பெருநகர பகுதியின் எல்லை விரிவாக்கம் செய்வது தொடர்பாக, டில்லி, மும்பை நகரங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

 சென்னை மாநகராட்சி மற்றும் அதை ஒட்டியுள்ள உள்ளாட்சி பகுதிகளை ஒருங்கிணைத்து, 1974ம் ஆண்டு சென்னை பெருநகர பகுதியாக அறிவிக்கப் பட்டது. இதற்கு உட்பட்ட பகுதிகள், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின், நில பயன்பாட்டு விதிகளை கடைபிடிக்க @வண்டும்.

டில்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பிற பெரு நகரங்களைவிட, சென்னை பெருநகர பகுதியின் பரப்பளவு மிகவும் குறைவு. சென்னை பெருநகர எல்லைக்கு வெளியே ஸ்ரீபெரும்புதூர், மறைமலை நகர், கேளம்பாக்கம், திருவள்ளூர் உள்ளிட்ட சிறுநகரங்களும், இவற்றின் சுற்றுப்புறப் பகுதிகளிலும் திட்டமின்றி, தாறுமாறான வளர்ச்சி அதிகரித்து வருகிறது.

வளர்ச்சியை, நெறிப்படுத்த இப்பகுதிகளை சி.எம்.டி.ஏ., எல்லைக்குள் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என, அரசுக்கு பரிந்துரைகள் வந்தன. இதை கருத்தில் கொண்டு, டில்லி, மும்பை, பெங்களூரு நகரங்களில் உள்ளது போன்று, சென்னையிலும் பெருநகர் பகுதி எல்லையை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

பரிந்துரைகள் என்ன?இதற்காக, சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரிகளை கொண்ட குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின் குழு, முதற்கட்ட அறிக்கையை
அரசுக்கு அளித்து உள்ளது.அதில், இரண்டு முக்கிய பரிந்துரைகள் கூறப்பட்டு உள்ளன.

தற்போது, 1,189 சதுர கி.மீ., ஆக உள்ள பரப்பளவை, இரண்டு வகையில் அதிகரிப்பது பற்றி அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ஒரு பரிந்துரையில், 4,400 சதுர கி.மீ., ஆக அதிகரிக்கலாம் என்றும், மற்றொன்றில், 8,800 சதுர கி.மீ., ஆக விரிவாக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. இந்த பரிந்துரை அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது.அதிகாரிகள் ஆலோசனை இந்நிலையில், பரிந்துரைகளை அமலாக்கும்போது, எழும் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப் பட்டு உள்ளது. 

இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத, சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்தகைய விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் டில்லி, மும்பை, பெங்களூரு பெருநகர் வளர்ச்சி மண்டல அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

இதற்காக, அந்தந்த மாநிலஅதிகாரிகளுக்கு சி.எம்.டி.ஏ., அழைப்பு விடுத்தது. இதற்கு, அதிகாரிகளும், சென்னை வர சம்மதித்து உள்ளனர்.வெளி மாநில அதிகாரிகள் மட்டுமல்லாது, விரிவாக்கத்தின் போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிக்க, நகராட்சி மற்றும் உள்ளாட்சி, வருவாய்த் துறை, குடிநீர் வாரிய அதிகாரிகள் என, தமிழகத்தில் பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இந்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான நிகழ்ச்சி நிரல்கள் குறித்த வரைவு அறிக்கைஅரசின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டு உள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன், கூட்டம் நடத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி
கூறினார்.

பரிந்துரைகள் விவரம்

சென்னை பெருநகர எல்லை விரிவாக்கத்துக்காக, சி.எம்.டி.ஏ.,அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள் விவரம்:
டூ பரிந்துரை 1: வடக்கில் கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை; மேற்கில் ஸ்ரீபெரும்புதூர்; தெற்கில் செங்கல்பட்டு ஆகிய பகுதிகள் வரை சி.எம்.டி.ஏ., எல்லைகளை விரிவாக்கம் செய்யலாம். இதன் மூலம், சென்னை பெருநகர் பகுதியின் பரப்பளவு, 4,400 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கலாம்.

டூ  பரிந்துரை  2:  வடக்கில்  கும்மிடிப்பூண்டி,  ஊத்துக்கோட்டை,  மேற்கில்  காஞ்சிபுரம், உத்திரமேரூர், தெற்கில் செய்யார் வரை சி.எம்.டி.ஏ.,எல்லைகளை  விரிவாக்கம்  செய்யலாம். இதனால், சென்னை பெருநகர் பகுதியின் பரப்பளவு, 8,800 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கும்.

- நமது நிருபர் -

Last Updated on Wednesday, 01 August 2012 08:22
 

ஜெகதளாவில் ரூ.35 லட்சம் செலவில் அடிப்படை பணிகள்

Print PDF

தினமலர்                    28.07.2012

ஜெகதளாவில் ரூ.35 லட்சம் செலவில் அடிப்படை பணிகள்

குன்னூர்:ஜெகதளா பேரூராட்சியில் தடுப்பு சுவர் மற்றும் கழிப்பிடம் அமைக்க 35 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெகதளா பேரூராட்சியில் சுவர்ண ஜெயந்தி ரோஸ்கார் யோஜனா திட்டத்தின் கீழ், மகளிருக்கு சேலையில் பல்வேறு வேலைபாடுகள் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் 23 பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இவர்களுக்கான பயிற்சி முடிந்தது. பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டது.

ஜெகதளா பேரூராட்சி தலைவர் உஷா மற்றும் செயல் அலுவலர் ராஜகோபால் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் உதவித்தொகையை வழங்கினர்.தலைவர் உஷா கூறுகையில், ""சுவர்ண ஜெயந்தி ரோஸ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் அழகுக்கலை, டெய்லரிங் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க பரிசீலிக்கப்படும். ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட என்.ஜி., காலனி பகுதியில் வெள்ள நீர் புகுந்து விடுவதால், அங்கு தடுப்பு சுவர் கட்ட கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டது. இங்கு 25 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பு சுவர் கட்டப்படும். கட்டுமான பணிகள் விரைவில் துவக்கப்படும்.அருவங்காடு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் அங்கு கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர். எனவே மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இப்பகுதியில் 10 லட்சம் ரூபாய் செலவில் கழிப்பிடம் கட்டும் பணி துவங்கியுள்ளது,'' என்றார்.

 

மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு ரூ. 2 கோடிக்கு பணிவழங்க ஒப்புதல்

Print PDF

தினமலர்                 26.07.2012

மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு ரூ. 2 கோடிக்கு பணிவழங்க ஒப்புதல்

கோவை:கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிக்கு ரூ.2 கோடியில் பணிகள் துவக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவை மாநகராட்சியின் மத்திய மண்டல கூட்டம், மண்டலத் தலைவர் ஆதி நாராயணன் தலைமையில் நடந்தது. ஆம்னி பஸ் ஸ்டாண்டு கழிப்பறை பராமரிப்பு, பாதாள சாக்கடை குழாய் பதிப்பு, சிமென்ட் தளம் அமைத்தல், தார் தளம் அமைத்தல்,பொதுக் கழிப்பிட மராமத்து, மழைநீர் வடிகால் தூர்வாருதல், குப்பைத் தொட்டி மராமத்து உட்பட பல்வேறு பணிகளை நிறைவேற்ற மொத்தம் 2 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.மேலும், ஐந்து லட்சம் ரூபாய் செலவில் ரோட்டிற்கு பேட்ச் பணி நடக்கும் தீர்மானம் வந்த போது, தி.மு.க., கவுன்சிலர் மீனா மற்றும் தே.மு.தி.க., கவுன்சிலர் சாவித்திரி பேசுகையில், ""எந்த வார்டில், எந்த பகுதியில் என குறிப்பிடாமல், பொதுவாக தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதிக்க முடியாது,'' என்றனர்.

அரங்கம் என்னாச்சு?: கடந்த ஆட்சியில் தெற்கு மண்டல அலுவலகத்துக்கென கட்டப்பட்ட புதிய அலுவலகம்தான், தற்போது மத்திய மண்டல அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.'

கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட இக்கட்டடத்தில், கூட்ட அரங்கின் பணிகளை முடிக்க, எவரும் கவனம் செலுத்தவில்லை. இதனால் கூட்ட அரங்கு பூட்டியே கிடக்கிறது. வேறு வழியில்லாமல் மண்டலத் தலைவரின் அறையில் நேற்றைய கூட்டம் நடந்தது.

மண்டல அலுவலகத்தில் கேட்டதற்கு, "கூட்ட அரங்கில் மின்சார இணைப்பு பணி இன்னும் பாக்கியுள்ளது. பணி முடிந்தபின் கூட்ட அரங்கில் மண்டல கூட்டம் நடத்தப்படும்' என்றனர். மத்திய மண்டல அலுவலகத்துக்கு 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் மின் இணைப்பு பெறுவதற்கான தீர்மானம், நேற்றைய கூட்டத்தில்தான் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

துணைமேயர் லீலாவதி, வரிவிதிப்புக் கமிட்டித் தலைவர் பிரபாகரன், கணக்குக் குழுத் தலைவர் கணேசன், எதிர்க்கட்சித் தலைவர் நந்தகுமார், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 


Page 29 of 160