Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Development

"உடன்குடி பேரூராட்சியில் ரூ. 8 லட்சத்தில் பணிகள்'

Print PDF

தினமணி             06.12.2010

"உடன்குடி பேரூராட்சியில் ரூ. 8 லட்சத்தில் பணிகள்'

சாத்தான்குளம், டிச. 5: உடன்குடி பேரூராட்சியில் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 8 லட்சம் மதிப்பிலான பணிகள் செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து பேரூராட்சித் தலைவர் சாகுல்ஹமீது கூறியதாவது:

திருச்செந்தூர் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பணிகள் செய்ய ரூ. 8 லட்சத்தை, அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஒதுக்கீடு செய்துள்ளார். இந்நிதியின் கீழ் புதுமனை பகுதியில் ரூ. 5 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படுகிறது. மீதமுள்ள நிதியுடன், பொதுநிதியைச் சேர்ந்து ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கிறிஸ்தியாநகரம் வடக்குத் தெருவில் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது.

இதேபோல, ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் மானங்காத்த அய்யனார் சாலையும், ரூ. 7 லட்சத்தில் சாதரக்கோன்விளை வடக்கு, தெற்குத் தெரு சாலையும், ரூ. 4 லட்சத்து 30 ஆயிரத்தில் சைவப்பிரகாச வித்தியாசாலை தெரு, ரூ. 3 லட்சத்து 25 ஆயிரத்தில் நடுக்கடை காலனி சாலை, ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்தில் பரதர் தெருவில் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது.

இவ்வாறு மொத்தம் ரூ. 48 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் 2.12 கி.மீ. சிமென்ட் சாலைகள் அமைக்கப்படுகின்றன. பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதனுடன் 12-வது நிதிக்குழு மானியத் திட்டத்தில் பெறப்பட்ட ரூ. 7 லட்சத்துக்கு பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.

 

ரூ.90.13 கோடி மதிப்பிலான பணிகள், திட்டம் : ஸ்டாலின் திறந்துவைத்தார்

Print PDF

தினமலர்              01.12.2010

ரூ.90.13 கோடி மதிப்பிலான பணிகள், திட்டம் : ஸ்டாலின் திறந்துவைத்தார்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் மாம்பழத்துறையாறு உட்பட 90 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், மற்றும் பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

குமரியில் பல்வேறு திட்டம், மற்றும் பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். குமரி மாவட்டத்தில் 580 வீடுகள் கலைஞர் வீடுவழங்கும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இவற்றின் மதிப்பு 4.35 கோடி ஆகும். இதைப்போல் வில்லுக்குறி அருகே ரூ.20.97 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாம்பழத்துறையாறு அணை நீர்தேக்க திட்டத்தை அவர் துவக்கி வைத்தார்.

மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம் மூலம் 79 கடலோர கிராமங்கள், 17 டவுன்பஞ்சாயத்து, மற்றும் 19 வழியோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் 28.02 கோடி ரூபாய் மதிப்பில் திறக்கப்பட்டது. குழித்துறையாறு கூட்டு குடிநீர் திட்டம், பைங்குளம் குடிநீர் திட்டம், முன்சிறை குடிநீர் திட்டம், மற்றும் புதுக்கடை குடிநீர் திட்டம் ஆகிய குடிநீர் திட்டங்களுக்கான சுத்திகரிப்பு நிலையம் 14 கோடி ரூபாய் மதிப்பிலும், 79 கடலோர கிராமங்களுக்கான கூட்டுகுடிநீர் திட்டத்தில் பயன்பெறும் 11 டவுன் பஞ்சாயத்துக்கள், மற்றும் 19 வழியோர கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் 4.98 கோடி ரூபாய் மதிப்பிலும், நெடுஞ்சாலைத்துறை மூலம் நீரோடி-இரையுமன்துறை சாலை, பேச்சிப்பாறை- கோதையாறு சாலையில் பாலம், சாந்தபுரம் சாலையில் பாலம் என்று 2.83 கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலைத்துறை திட்டப்பணிகளையும் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைப்போல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் ராஜிவ் காந்தி சுனாமி புனரமைப்பு திட்டத்தில் கொல்லங்கோடு-நீரோடி திட்டப்பகுதியில் 1.43 கோடி ரூபாய் மதிப்பில் 48 மாற்றுக்குடியிருப்புகளையும் அவர் திறந்துவைத்தார்.இதைப்போல் திற்பரப்பு நீர்வீழ்ச்சி பூங்கா, பஸ் நிறுத்துமிடம், இடைக்கோடு பஞ்சாயத்து அலுவலக கட்டடம், ரீத்தாபுரம் டவுன் பஞ்சாயத்து கட்டட அலுவலகம், தென்தாமரைக்குளம் போலீஸ் ஸ்டேஷன் ஆகியவை உட்பட மொத்தம் 90 கோடியே 13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை ஸ்டாலின் திறந்து வைத்தார்.அடிக்கல் நாட்டிய பணிகள்: ரூ.11.40 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பேச்சிப்பாறையில் பல்முனை பயிற்சிக்கூடம் கட்டுதல், கன்னியாகுமரி- பழையாறு ஆற்றின் குறுக்காக தேசிய நெடுஞ்சாலையில் பாலம், பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி விடுதி கட்டடம் கட்டுதல், 10 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல், 31 அரசு உயர்நிலை, நடுநிலை மற்றும் துவக்கப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் தலைமை ஆசிரியர் அறை கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த அடிக்கல் நாட்டப்பட்டது.

மாம்பழத்தாற்று அணையால் 905 ஏக்கர் பலன்பெறும் : மாம்பழத்துறையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மாம்பழத்துறையாறு நீர்தேக்க அணையின் மொத்த கொள்ளளவு 44.54 மில்லியன் கனஅடி ஆகும். ரூ.20.97 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்நீர்தேக்கத்தால் 455.76 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும். இதைப்போல் மீதமுள்ள உபரி நீரை பத்மனாபபுரம் புத்தனார் கால்வாய் மூலம் பயன்படுத்தி 450 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி செய்யப்படுகிறது. மொத்தத்தில் மாம்பழத்துறையாறு நீர்தேக்கத்தின் மூலம் 905.76 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.2007ம் ஆண்டு மே மாதம் துவக்கப்பட்ட திட்டம் முடிவுற்று நேற்று அணை திறக்கப்பட்டது. நீர்தேக்கத்தினால் 25 குளங்கள் பயன்பெறுகின்றன. வில்லுக்குறி, கல்குளம், கப்பியறை பகுதியை சுற்றியுள்ள கிராமங்கள் அணைநீரால் பயன்பெறும். நீர்தேக்கத்தின் மொத்த நீளம் 360 மீட்டர், 80 அடி வரை அணையின் கொள்ளளவு நீர்மட்டம் உள்ளது.

 

குமரிக்கு ரூ139 கோடியில் திட்டங்கள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Print PDF

தினகரன்            01.12.2010

குமரிக்கு ரூ139 கோடியில் திட்டங்கள் துணை முதல்வர் மு..ஸ்டாலின் வழங்கினார்

தக்கலை, டிச.1: தக்கலையில் நடந்த விழாவில் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி, புதிய திட்ட பணிகள் உட்பட ரூ139 கோடி மதிப்பிலான திட்டங்களை குமரி மாவட்டத்திற்கு துணை முதல்வர் மு..ஸ்டாலின் வழங்கினார்.

மாம்பழத்துறையாறு நீர்த்தேக்கம் திறப்புவிழா, கலைஞர் வீடு வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கும் விழா, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் விழா மற்றும் அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை தக்கலை அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்தது.

விழாவிற்கு அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் (பொ) கலைச்செல்வன் வரவேற்றார். மாம்பழத்துறையாறு நீர்தேக்கத்தை திறந்து வைத்தும், கலைஞர் வீடு வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கியும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கியும், வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய கட்டடங்களை திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகள் என்று மொத்தம் ரூ139 கோடியில் திட்டங்களை வழங்கியும் துணை முதல்வர் மு..ஸ்டாலின் பேசினார்.

* துணை முதல்வர் ஸ்டா லின் தக்கலையில் நடந்த விழாவில் ரூ90 கோடியே 13 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் 668 திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இதில் ஊரக வளர்ச்சி துறை சார்பில்[4.97 கோடியிலும், நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ1.58 கோடி மதிப்பிலும் திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன. இதில் திற்பரப்பு அருவி பகுதிகள் ரூ55 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது.

* தென்தாமரைக்குளத்தில் ரூ41.80 லட்சத்தில் காவல்நிலையம், கன்னியாகுமரியில் ரூ88.62 லட்சத்தில் காவலர் குடியிருப்புகள் திறக்கப்பட்டன. சேரமங்கலத்தில் ரூ5.46 கோடியில் துணை மின்நிலையம், ரூ28 கோடியில் 79 கடலோர கிராமங்கள், 17 பேரூராட்சிகள், 19 வழியோர கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் உட்பட ரூ49.28 கோடியில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளையும் அவர் துவக்கி வைத்தார். நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ2.83 கோடி மதிப்பில் நீரோடி&இரயுமன்துறை, பேச்சிப்பாறை & கோதையாறு, சாந்தபுரம் சாலைகள் மேம்பாடு திட்டத்தையும் துவங்கி வைத்தார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் கொல்லங்கோட்டில் ரூ1.43 கோடியில் 48 மாற்று குடியிருப்புகளும் திறக்கப்பட்டன.

* விழாவில் ரூ11.40 கோடி மதிப்பில் 81 புதிய திட்ட பணிகளுக்கு அடிக் கல் நாட்டப்பட்டது. இதில் ரூ2 கோடியில் சுசீந்திரம் அருகே உள்ள செங்கட்டிப்பாலம் புதிதாக கட்டுதல், பாற சாலை& கொல்லங்கோடு சாலையில் ரூ98 லட்சத்தில் புதிய பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

* விழாவில் வருவாய் துறை மூலம் 173 பேருக்கு ரூ1.50 கோடி மதிப்பில் உதவித்தொகைகள், சமூக நலத்துறை மூலம் 1033 பேருக்கு ரூ2.51 கோடி மதிப்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் உதவித்தொகைகள், 1071 பேருக்கு இலவச கலர் டிவி ஆகியனவும் வழங்கப்பட்டன.

* மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு அலுவலகம் நாகர்கோவில் மற்றும் இணைக்கப்பட்ட கூட்டுறவு சங்க பணியாளர்களில் இருந்து எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட வங்கி உதவியாளர் பணியிடத்திற்கு 36 பேருக்கு பணி நியமன ஆணைகளை துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். விழாவில் ஹெலன்டேவிட்சன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜன், ரெஜினால்டு, ஜாண்ஜேக்கப், ஜாண் ஜோசப், லீமாரோஸ், மாவட்ட ஊராட்சி தலை வர் அஜிதா, பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் ரேவன் கில் ஆகியோர் பேசினர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மந்திராச்சலம் நன்றி கூறி னார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) விஜயகுமார், மாவட்ட ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு மீனவர் நல வாரிய துணைத்தலைவர் பெர்னார்டு, மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் ஜி.எம்.ஷா, வில்லுக்குறி பேரூராட்சி தலைவர் விஷ்ணு, தென்காசி எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியன், நெல்லை மாநகர துணை மேயர் முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், முன் னாள் எம்.எல்.ஏ எப்.எம்.ராஜரத்தினம், முன் னாள் எம்.பி சங்கரலிங்கம், நாகர்கோவில் நகர செயலாளர் வக்கீல் மகேஷ், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண்சன், கேட்சன், முன் னாள் மாவட்ட பொருளா ளர் எம்.பி கிறிஸ்டோபர், கணியாகுளம் ஊராட்சி தலைவர் அன்பழகன், வக்கீல் உதயகுமார், தொமுச பொதுசெயலாளர் ஞான தாஸ், தலைவர் காமராஜ், பொருளாளர் சிவன்பிள்ளை, அகஸ்தீஸ்வரம் ஒன்றி ய தலைவர் சோமு, தேரூர் பேரூராட்சி தலைவர் முத்து, மைலாடி பேரூராட்சி தலைவர் சாய்ராம், அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாநில துணை செயலாளர் இளங்கோ, தெங்கம்புதூர் பேரூராட்சி தலைவர் லிவிங்ஸ்டன், பத்மநாபபுரம் நகர செயலாளர் மணி, அரசு வக்கீல் முத்துகுமரேஷ், திக்கணங்கோடு ஊராட்சி தலைவர் அருளானந்த ஜார்ஜ், முளகுமூடு பேரூராட்சி தலைவர் ஐசக்ராபி, தக்கலை ஒன்றிய திமுக மகளிர் அணி அமைப்பாளர் கனகபாய், மேல்புறம் ஒன்றிய திமுக செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன், வக்கீல் தேவிகோடு மைக்கேல்குமார், மேல்புறம் ஒன்றிய அவைத்தலைவர் தேவதாஸ், மாவட்ட பிரதிநிதி ஷாபு, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி, கன்னியாகுமரி நகர செயலாளர் ஜெ.ஜெ.ஆர். ஜஸ்டின், குமரி ஸ்டீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 34 of 160