Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொடுமுடி பேரூராட்சியில் வரி விதிப்பு செய்யப்படாத வீடுகள்

Print PDF

தினமணி    25.05.2010

கொடுமுடி பேரூராட்சியில் வரி விதிப்பு செய்யப்படாத வீடுகள்

கொடுமுடி, மே 24: கொடுமுடி பேரூராட்சியில் வரி விதிப்பு செய்யப்படாமல் இருக்கும் 250 வீடுகளுக்கு வரி விதிப்பு செய்யப்பட வேண்டுமென கொடுமுடி சொத்து வரி செலுத்துவோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் தலைவர் கே.முத்துச்சாமி தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு திங்கள்கிழமை அனுப்பிய மனு விவரம்:

ஈரோடு மாவட்டம், கொடுமுடி பேரூராட்சி 15 வார்டுகளைக் கொண்டது. தற்போது கொடுமுடி பேரூராட்சியில் ஏறத்தாழ ஐந்தாயிரம் வீடுகளுக்கு வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகலாக கொடுமுடி பேரூராட்சியில் பல்வேறு காரணங்களுக்காகவும், நிரந்தர செயல் அலுவலர் இல்லாத காரணத்தாலும் பேரூராட்சி முழுவதும் பல நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டடங்கள் கட்டப்பட்ட போதிலும் அவற்றிற்கு முறையாக கட்டட உரிமம் பெற்று வரிவிதிப்பு செய்யப்படவில்லை.

பல வீடுகளுக்கு கூரை வரியே தற்போதும் வசூலிக்கப்படுகிறது. 250 வீடுகளுக்கு மேல் வீட்டு வரி வசூலிக்கப்படாமல் உள்ளது. முறையாக பல ஆண்டுகளாக வீட்டுவரி செலுத்தி வருவோர்களுக்கு மீண்டும் மீண்டும் எவ்வித அறிவிப்புமின்றி 25 சதவீதம் வீட்டுவரி உயர்த்தப்பட்டு வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு வீட்டு உரிமையாளர்கள் கட்டட அனுமதி வாங்கியிருந்தாலும் கூட, அந்தக் கட்டடங்களுக்கு மறு வரிவிதிப்பு செய்யாமல், அந்தக் கட்டட உரிமங்களைப் புதுப்பிக்காமலும், காலாவதியான நிலையிலும் அப்படியே விட்டுவைத்திருக்கின்றனர். தற்போதும் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

எனவே, உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பேரூராட்சி முழுவதும் வரி விதிப்பு இல்லாமல் இருக்கும் சுமார் 250 வீடுகளுக்கும், தற்போது கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கும் வரிவிதிப்பு செய்யப்பட வேண்டும்.

மேலும், கொடுமுடி பேரூராட்சி பகுதியில் போடப்பட்டிருக்கும் 15- க்கும் மேற்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை விரைவில் அங்கீகாரம் செய்து கொடுக்கவும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவும், பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்