Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை உடனே செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை : கமிஷனர் குபேந்திரன்

Print PDF

தினமலர் 04.06.2010

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை உடனே செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை : கமிஷனர் குபேந்திரன்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி உள்ளிட்ட வரியினங்களை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லை என்றால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது வரும் என்று மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்கள் சுமார் 4 கோடிக்கு மேல் பாக்கியுள்ளது. இந்த பாக்கியை வசூல் செய்ய மாநகராட்சி சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் முறையாக வரிகள் வசூல் ஆகவில்லை. இதனால் மாநகராட்சி சார்பில் வரிவசூல் செய்வதில் கடும் கண்டிப்பு செலுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி வரிச் செலுத்தாத வீடுகளில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள அதிரடி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன் கூறியிருப்பதாவது; தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது அதிகமான மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. பாதாள சாக்கடை திட்டம் மொத்தம் 90 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இதில் மக்களின் பங்களிப்பு தொகை 24 கோடி ரூபாயாகும். ஆனால் மக்களின் பங்களிப்பு தொகை இதுவரை ஒன்றே முக்கால் கோடி ரூபாய் தான் வந்துள்ளது. அதுவும் சொத்து பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் செய்ய வரும் போது, பாதாள சாக்கடை திட்டத்திற்கு பணம் செலுத்தினால் தான் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று கண்டிப்பான உத்தரவு போடப்பட்டிருப்பதால் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.

இல்லை என்றால் அந்த பணம் வந்திருக்காது. நமது மாநகராட்சிக்கு பாதாளசாக்கடை என்னும் நல்ல திட்டம் வருகிறதே, இதன் மூலம் ஊர் சுத்தமாக இருக்கும். இதனால் நாமாக பாதாள சாக்கடை திட்ட இணைப்பு பெறுவதற்கு டெபாசிட் பணம் கட்ட வேண்டும் என்கிற எண்ணம் மக்களுக்கு வரவேண்டும். பாதாள சாக்கடை திட்ட டெபாசிட் பணம் கட்டியவர்களுக்கு விரைவாக முன்னுரிமைப்படி இணைப்பு வழங்கப்படும். இதனால் உடனடியாக மக்கள் அதற்குரிய டெபாசிட் தொகையை கட்ட வேண்டும். இதில் காலதாமதம் செய்தால் பின்னால் இணைப்பு வழங்குவதில் பிரச்னை ஏற்படும்.

இதே போல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியினை உடனடியாக செலுத்த வேண்டும். சொத்துவரி செலுத்தாத வீடுகளில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜப்தி நடவடிக்கையை தவிர்க்கும் வகையில் உடனே சொத்துவரி பாக்கியை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். இதனை செலுத்துவதற்காக சனிக்கிழமை நாட்களில் மாநகராட்சியில் சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சிகளில் அதிக சொத்துவரி பாக்கியுள்ள நகராக தூத்துக்குடி மாநகராட்சி உள்ளது. இதனால் இந்த மாநகராட்சிக்கு கெட்ட பெயர் உருவாகிறது. அதனை தடுக்க மக்கள் உடனே வரியினை செலுத்த வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் ரோடு சீரமைப்பு, குடிநீர் திட்ட விரிவாக்க பணிகள் மேற்கொள்ள உள்ளதால் உடனடியாக வரிப் பாக்கியை மக்கள் செலுத்த வேண்டும். இவ்வாறு கமிஷனர் குபேந்திரன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட டெபாசிட் தொகை உயர்வு செய்யப்படலாம் என்கிற பேச்சு உலா வந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்த உயர்வு வருவதற்குள் உடனடியாக மக்கள் டெபாசிட் தொகையை செலுத்தினால் பழைய கட்டண படியே செலுத்தி கொள்ளலாம்.

இல்லை என்றால் இன்னும் அதிகமாக செலுத்த வேண்டியது வந்துவிடும். இதனால் மக்கள் அதற்குள் விழித்து கொள்ள வேண்டும். இதே போல் குடிநீர் கட்டணம் பாக்கியுள்ளவர்களின் வீடுகளில் இணைப்பினை துண்டிக்கவும் மாநகராட்சி சார்பில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பு தகவல்கள் உலா வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.