Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விருதுநகர் நகராட்சியில் வீடுகள், தொழிற்சாலைகள் கடைகளில் வரி ஏய்ப்பு மறு ஆய்விற்கு குழு வருகிறது

Print PDF

தினகரன் 14.06.2010

விருதுநகர் நகராட்சியில் வீடுகள், தொழிற்சாலைகள் கடைகளில் வரி ஏய்ப்பு மறு ஆய்விற்கு குழு வருகிறது

விருதுநகர், ஜூன் 14: விருதுநகரில் வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் முறையான வரி செலுத்ததால் நகராட்சிக்கு கோடிக்கணக்கில் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மறு வரி சீரமைப்பு ஆய்வுக்குழு வர உள்ளதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் உள்ள 102 நகராட்சிகளில் அதிக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இருந்தும் வரி வருமானத்தில் குறைந்த நகராட்சியாக விருதுநகர் உள்ளது. குறைந்த வரி வருமானம் காரணமாக நகராட்சி ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறித்த தேதியில் சம்பளம் வழங்க முடிவதில்லை. நகரின் வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் முறையாக நிறைவேற்றப்பட முடியவில்லை.

விருதுநகரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 2 ஆயிரத்துக்கும் அதிக கடைகள், 100 எண்ணெய் மில்கள், 40 புண்ணாக்கு மில்கள், 10 பெரிய தொழிற்சாலைகள், 100 குடோன்கள், 10 மல்லி மில்கள், 50 திருமண மண்டபங்கள் உள்ளன. ஆனால் நகராட்சியின் ஆண்டு வரி வசூல் ரூ.2 கோடிக்கும் குறைவாக உள்ளது.

மேலும் வீடுகளின் உரிமையாளர்கள் பலர், கடைகள், ஓட்டல்கள், தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் பலர் பல வருடங்களாக வரி ஏய்ப்பு செய்து வருகின்றனர். மாவட்ட தலைநகராகி 25 ஆண்டுகள் ஆன பின்னரும் அடிப்படை வசதிகள் இல்லை. கடந்த ஆண்டு வரி உயர்த்தப்பட்டது. அப்போது முறையாக ஆய்வு செய்யாமல் கடைசியாக கட்டிய வரியில் 5 முதல் 10 சதவீதம் வரை மட்டுமே உயர்த்தப்பட்டது.

குடிசை, ஓட்டு வீடுகள் இருந்த பல இடங்கள் இப்போது மாடி வீடுகளாகவும், காம்ப்ளெக்ஸ்களாகவும் மாறி விட்டன. ஆனால் வரி மட்டும் மாற வில்லை. 6 மாத வரியாக ரூ.100 வரையே செலுத்தி வரும் கட்டிடங்கள் பல உள்ளன. நகரின் வெளிப்பகுதியில் உள்ள பல வீடுகளுக்கு முதல் கட்ட வரி கூட நிர்ணயம் செய்யப்படவில்லை.இதனால் ஒவ்வொரு திட்டத்திற்கும் அரசின் நிதியை எதிர்பார்க்க வேண்டிய நிலை உள்ளது. வணிக நகரில் வருமானம் இல்லையா என அரசு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வரி வசூல் தொடர்பாக மறு ஆய்வுக்குழுவை விருதுநகருக்கு அனுப்ப உள்ளது. இந்த குழு நகரில் உள்ள கட்டிடங்கள் முழுமையாக அளந்து வரி வசூல் நிர்ணயம் செய்யும்.

இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "விருநகரில் எந்த பணியினையும் செய்ய முடியவில்லை. நகரில் தேங்கும் குப்பைகளை அள்ள பணம் தர முடியவில்லை. ராணிப்பேட்டை நகராட்சியில் மறு ஆய்வுக்குழுவின் ஆய்விற்கு பின்னர் வரி வசூல் நிலைமை சீரடைந்துள்ளது. அதே போல் விருதுநகரில் மறு ஆய்வுக்குழுவினை விரைவில் அனுப்ப அரசு முடிவெடுத்துள்ளது. குறைந்த வரி செலுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டால் வரி ஏய்ப்பு செய்த காலத்திற்கு உண்டான வரி மற்றும் அபராதம் சேர்த்து கட்ட வேண்டி வரும்" என்றனர்