Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈரோடு மாநகராட்சி தொழில் வரியைக் குறைக்க தொழில்-வணிக சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

Print PDF

தினமணி 21.06.2010

ஈரோடு மாநகராட்சி தொழில் வரியைக் குறைக்க தொழில்-வணிக சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஈரோடு, ஜூன் 20: ஈரோடு மாநகராட்சியால் உயர்த்தப்பட்டுள்ள தொழில் வரியை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில்-வணிக சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கூட்டமைப்பு சிறப்பு செயற்குழுக் கூட்டம், ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்புத் தலைவர் என்.சிவநேசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் எஸ்.கே.ராமசாமி, ஆர்.சிவலிங்கம் முன்னிலை வகித்தனர். பில்டர்ஸ் சங்கத் தலைவர் ஏ.ராமலிங்கம் வரவேற்றார். பொதுச்செயலர் டி.ஜெகதீசன், பொருளாளர் வி.கே.ராஜமாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் இரண்டாமிடம் பெற்றதற்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமாருக்கு மனித நேய கல்விக் காப்பாளர் விருது வழங்கப்பட்டது.

ஈரோடு பிரப் சாலையில் உள்ள 80 அடி சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து விட வேண்டும். அரசு தலைமை மருத்துவமனை அருகில் மேம்பாலம் கட்ட வேண்டும்.

நூல் விலை தொடர்ந்து உயர்வதால், பருத்தி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். சிறு, குறு தொழில் முனைவோர், தங்களது நிறுவனங்களுக்கு பழைய இயந்திரங்களை வாங்கியிருந்தாலும், அவர்களுக்கு மின் கட்டண மானியம் வழங்க வேண்டும். ஈரோட்டில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகம் அமைக்க வேண்டும். பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உணவுப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனி மார்க்கெட் வளாகத்தை ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகமாக மாற்ற வேண்டும். நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறநகர் பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.

ஈரோடு நகராட்சியில் தொழில் வரி மிக அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதல் வரியை உடனடியாகக் குறைக்காவிட்டால், அடுத்த அரையாண்டிற்கான வரியை செலுத்த மறுக்கும் சூழல் உருவாகும். மேட்டூரில் இருந்து தனி குழாய் வழியாக குடிநீரைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். வஉசி பூங்காவில் உள்ள பழைய லாரி நிறுத்த வளாகத்தில், நிரந்தர தொழில் கண்காட்சி மையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.