Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லையில் குடிநீர் கட்டண உயர்வு தாற்காலிகமாக நிறுத்தம்

Print PDF

தினமணி 23.07.2010

நெல்லையில் குடிநீர் கட்டண உயர்வு தாற்காலிகமாக நிறுத்தம்

திருநெல்வேலி,ஜூலை 22: குடிநீர் கட்டண உயர்வை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் மேயர் அ.லெ.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மேயர் அ.லெ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணை மேயர் கா.முத்துராமலிங்கம்,ஆணையர் என்.சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

மேயர்: மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தப்பட்டதின் விளைவாக, வண்ணார்பேட்டையில் புதிதாக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட 6 மாதங்களுக்கு முன்பே இப் பாலம் நிறைவுபெற்று, ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் விழாவில், பாலத்தை தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

புதிதாக நடைபெற்று வரும் இரு குடிநீர் திட்டங்களும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே செயல்பாட்டுக்கு வரும்.

மாமன்ற உறுப்பினர் சுதா கே.பரமசிவன் (அதிமுக): மாநகராட்சி திடீரென குடிநீர் கட்டணத்தை உயர்த்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. குடிநீர் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என ஒருவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கும் வேளையில், மாநகராட்சி புதிய குடிநீர் கட்டணத்தை ரகசியமாக வசூலித்து வருகிறது.

மாமன்ற உறுப்பினர் ஆ.துரை (திமுக): குடிநீர் கட்டணம் உயர்வு குறித்து 6 மாதங்களுக்கு முன்பே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றிய பின்னர் 6 மாதங்கள் கழித்து இக் குடிநீர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். இக் கட்டண உயர்வை தற்போது நிறுத்தி வைக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மாமன்ற உறுப்பினர் முகைதீன் அப்துல்காதர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): இக் கட்டண உயர்வால், மக்களிடம் எதிர்ப்பையும்,விரோதத்தையும் மாநகராட்சி சந்திக்க வேண்டியிருக்கும்.

இதேபோல மேலப்பாளையம் மண்டலத் தலைவர் எஸ்.எஸ்.முகம்மது மைதீன், மாமன்ற உறுப்பினர்கள் பால்கண்ணன், டி.என். உமாபதிசிவன் ஆகியோர் குடிநீர் கட்டண உயர்வை 6 மாதம் தள்ளிபோட வேண்டும் என பேசினர்.

இதற்கு பதில் அளித்து மேயர் பேசியது:

குடிநீர் கட்டணத்தை உயர்த்தி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. திமுக பொறுப்பு ஏற்ற பின்னர், பல முறை குடிநீர் கட்டண உயர்வு தள்ளிப்போடபட்டது. மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை காரணமாக, புதிய குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றவும்,புதிய திட்டங்களை செயல்படுத்தவும் வங்கியில் கடன் மற்றும் மானியம் பெறுவதற்கு குடிநீர் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீர் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், எதிர்காலத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதிலும் இடர்பாடு ஏற்படும். மேலும் குடிநீர் கட்டண உயர்வு அரசு கெஜட்டில் இடம் பெற்றுவிட்டதால், இனி குடிநீர் கட்டண உயர்வை நிறுத்தி வைப்பதற்கு மாமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.

.துரை: குடிநீர் கட்டண உயர்வை நிறுத்தி வைப்பதற்கு மாமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. அடுத்த மாமன்றக் கூட்டத்திலேயே குடிநீர் கட்டண உயர்வை நிறுத்தி வைப்பதற்கு சிறப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும். மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள நிதி சிக்கலை சீர் செய்ய பல்வேறு வழிகள் உள்ளன.

தற்போது மாநகராட்சி பகுதியில் வசிக்கும் 25 சதவிகித பேரிடம்தான் வரி இனங்கள் வசூலிக்கப்படுகின்றன. இந்த விகிதத்தை உயர்த்தும்போது, மாநகராட்சி நிதி பற்றாக்குறை தானாக சீராகும்.

இதையடுத்து மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் குடிநீர் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி மொத்தமாக பேசியதால், அவையில் கூச்சல்,குழப்பம் ஏற்பட்டது.

இதைப் பார்த்த மேயர், குடிநீர் கட்டண உயர்வை தாற்காலிகமாக ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைப்பதாகவும், அடுத்தக் கூட்டத்தில் குடிநீர் கட்டண உயர்வை நிறுத்த தீர்மானம் கொண்டு வந்தால் 6 மாதம் குடிநீர் கட்டண உயர்வை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்தார்.

மாமன்ற உறுப்பினர் பொன்.தங்கராஜ் (அதிமுக): ஆதரவற்றோருக்கு தங்குவதற்கும்,உணவு அளிப்பதற்கும் சிந்துபூந்துறையில் உள்ள மாநகராட்சி பள்ளியும்,ஸ்ரீபுரத்தில் உள்ள மாநகராட்சி கட்டடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இரு இடங்களும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

எனவே, அந்த இடங்களில் ஆதரவற்றோரை தங்க வைத்தால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். எனவே அவர்களை வேறு இடங்களில் தங்க வைக்க வேண்டும். இல்லையெனில் நான் போராட்டத்தில் ஈடுபடுவேன்.

மேலும்,சத்திரம் புதுக்குளத்தில் ஜெ.பி. ராயல் கார்டனுக்கு என்ற புதிய குடியிருப்புக்கு அனுமதி வழங்கியதில் ரூ.2 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இது குறித்து விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டு, முறைகேட்டில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார். தற்போது அந்த விசாரணை என்ன நிலையில் உள்ளது, முறைகேட்டில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர்.

மேயர்: இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மாமன்ற உறுப்பினர் டி.எஸ்.முருகன் (சுயே.): மாநகர் பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. பல லட்சம் மதிப்பில் கொசு மருந்து தெளிப்பு கருவி வாங்கியும், அது பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மேயர்: கொசுவை ஒழிக்க சுகாதாரத் துறை மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல மாமன்ற உறுப்பினர்கள், தங்களது வார்டுகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை தீர்க்க கோரி பேசினர்