Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீட்டுக்கே வரும் வரி வசூல் வேன்: மாநகராட்சியில் விரைவில் அறிமுகம்

Print PDF

தினமலர் 30.07.2010

வீட்டுக்கே வரும் வரி வசூல் வேன்: மாநகராட்சியில் விரைவில் அறிமுகம்

திருச்சி: திருச்சி மாநகராட்சி சார்பில், வீட்டுக்கே வந்து வரி வசூல் செய்யும் வகையில், நடமாடும் கம்ப்யூட்டர் வரி வசூல் மையம் (மொபைல் டேக்ஸ் வேன்) அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

திருச்சி மாநகராட்சியில் வீட்டுவரி, குடிநீர்வரி, கடைவரி என்பன உள்பட ஏராளமான வரி வருவாய் இனங்கள் உள்ளன. வரிசெலுத்துபவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வரிவசூல் மையம் அல்லது ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ.அபிஷேகபுரம் ஆகிய நான்கு கோட்ட அலுவலகத்தில் உள்ள வரிவசூல் மையத்தில் செலுத்த வேண்டும். பொதுமக்கள் வரி செலுத்துவதில் உள்ள குறைகளை களையவும், எளிய முறையில் வரி கட்டவும் மாநகராட்சி சார்பில் அந்தந்த கோட்ட அலுவலகத்தில் வரிவசூல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வந்தது.

இதனால், வரி செலுத்துவர்களுக்கு சற்று பிரச்னை குறைந்தது. ஆயினும், மக்களிடம் வரிசெலுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், விரைந்து வரிவசூலிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டது. அதன்படி, "மொபைல் டேக்ஸ் வேன்' அதாவது நடமாடும் கம்ப்யூட்டர் வரி வசூல் மையம் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பழைய வேன் ஒன்றை "ரீ-மாடுலேஷன்' செய்துள்ளனர். வேன் உள்ளே கம்ப்யூட்டர் கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துபவர் இந்த வேனில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில் பணத்தை கட்டி அதற்குரிய வரி ரசீதை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு ஏரியாவுக்கும் இந்த வேன் செல்லும். முறைப்படி விழா நடத்தி இந்த வேன் வரி வசூல் பணிக்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது. "வரி கட்டலையா..வரி' என திருச்சி மாநகரில் விரைவில் இந்த வேன் உலா வரும்.