Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரியில்லா இனங்கள் மூலம் வரவேண்டிய நிலுவை தொகையை வசூலிக்க பேரூராட்சிகள் இயக்குனர் உத்தரவு

Print PDF

தினகரன் 16.08.2010

வரியில்லா இனங்கள் மூலம் வரவேண்டிய நிலுவை தொகையை வசூலிக்க பேரூராட்சிகள் இயக்குனர் உத்தரவு

விழுப்புரம், ஆக. 16: விழுப்புரம் மாவட்ட பேரூராட்சி செயல் அலுவலர்களின் பணி ஆய்வு கூட்டம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் பழனிசாமி முன்னிலையில் பேரூராட்சிகளின் இயக்குனர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

செஞ்சி, திருக்கோவிலூர், தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 பேரூராட்சிகளில் நடப்பு நிதியாண்டில் (2010&11) அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ள அனைத்து பணிகளும் வரும் 22ம் தேதிக்குள் வேலைக்கான பணி ஆணை வழங்கி பணிகள் தொடங்கப்பட வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தின் மூலம் உரம் தயார் செய்து விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். வரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலம் பேரூராட்சிகளுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகைகளை முழுமையாக வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து திட்டப்பணிகளையும் கால தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். சுவர்ண ஜெயந்தித்திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய தனி நபர் கடன்கள், குழுக்கடன்கள் வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனை பேரில் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சடையப்பன், உதவி செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் செயல் அலுவலர்கள் பங்கேற்றனர்.