Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்டட வரி நிர்ணயத்ததில் வரி ஏய்ப்பு

Print PDF

தினமலர் 17.08.2010

கட்டட வரி நிர்ணயத்ததில் வரி ஏய்ப்பு

உடுமலை: உடுமலை நகராட்சியிலுள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு வரி நிர்ணயம் செய்ததில், முறைகேடு நடந்துள்ளதாகவும், 30 சதவீதம் வரை இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து, மறு ஆய்வு செய்ய நகராட்சி கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியும் பயனில்லை.உடுமலை நகராட்சியில், 13,179 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரி நிர்ணயிக்கப்பட்டு; வசூலிக் கப்பட்டு வருகிறது. வணிக வளாகங்கள் உட்பட 210 கடைகளுக்கு 4.31 லட்சம் ரூபாய் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே போல், 16 தொழிற்சாலைகளுக்கு 62 ஆயிரமும், நகராட்சியிலுள்ள 1,294 காலியிடங்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒரு சதுர அடிக்கு குறிப்பிட்ட அளவு தொகை நிர்ணயித்து, மொத்த சதுர அடி பரப்பளவின் அடிப்படையில் கட்டடங்களுக்கு வரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.உடுமலை நகராட்சியிலுள்ள வீடுகளுக்கு வரி நிர்ணயிக்கும் அதிகாரிகள் , சம்பந்தப்பட்ட நபர்களிடம் குறிப்பிட்ட அளவு தொகை பெற்றுக்கொண்டு, குறைந்த அளவு பரப்பளவு என குறிப்பிட்டு வரி நிர்ணயித்துள்ளனர்.பெரும்பாலான வணிக வளாகங்களிலும் இதே போல் பரப்பளவு குறைத்து குறிப்பிடப்பட்டு, வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது.

ஒரு சில வீடுகளில் பல ஆயிரக்கணக்கான சதுர அடி பரப்பளவு இருந்தாலும், குறைந்த சதுர அடி பரப்பளவு மட்டுமே உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.அதே போல், வணிக வளாகங்களிலும், கடைகள் மறைக்கப்பட்டு, சதுர அடி பரப் பளவு குறைந்து கணக்கிடப்பட்டு வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சில வணிக வளாகங்களில், மூன்றடுக்குகளில் கடைகள் இருந்தாலும், இரண்டு அடுக்கு மட்டுமே உள்ளதாகவும், பல கடைகள் மறைத்தும் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஆண்டு தோறும் அதிகளவு வரி கட்டுவதற்கு பதில், கணக்கெடுக்கும் அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட அளவு தொகை கொடுத்தால் போதும் என்ற நிலையில், இவ்வாறான முறைகேடுகள் நடந் துள்ளன. அதே போல், அதிகாரிகளுக்கு ஒத்து வராத உரிமையாளர்களின் சிறிய அளவிலான வீடுகளுக்கு அதிகளவு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, உடுமலை நகராட்சி பகுதியில் தற்போதுள்ள கட்டடங்களுக்கு வரி நிர்ணயம் செய்ததில் 30 சதவீதம் வரை வரி ஏய்ப்பு இருக்கும் வாய்ப்புள்ளதாகவும், நகராட்சிக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது.இதனையடுத்து, மறு சீராய்வு செய்து, பாரபட்சம் இல்லாமல் வரி நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், இது குறித்து அறிக்கையை நகர மன்றத்தின் பார்வைக்கு வைக்க வேண்டும் என நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், வரி மறு சீராய்வு குறித்து தொடர் நடவடிக்கை இல்லாமல், வரி ஏய்ப்பு தொடர்கதையாக உள்ளது.இது குறித்து நகராட்சி தலைவர் வேலுசாமி கூறியதாவது :வரி ஏய்ப்பு காரணமாக, நகராட்சி வரி வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் புகார் வந்தது.

இதனையடுத்து, அனைத்து கட்டடங்களுக்கும் பாரபட்சம் இல்லாமல், இருக்கும் அளவை முறையாக அளவீடு செய்து, வரி நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், மறு அளவீடு செய்து நகர மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் கூறுகையில், ""வரி மறு ஆய்வு செய்வதற்கு எங்களுக்கு அதிகாரமில்லை. நகராட்சி நிர்வாக ஆணையரிடம் மறு ஆய்வு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது,'' என்றார்.