Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தீர்ப்பாய தீர்ப்புக்கு மதிப்பே இல்லை வரியை குறைக்க மறுத்தது மாநகராட்சி

Print PDF

தினமலர் 18.08.2010

தீர்ப்பாய தீர்ப்புக்கு மதிப்பே இல்லை வரியை குறைக்க மறுத்தது மாநகராட்சி

கோவை : உயர்த்தி விதிக்கப்பட்ட வீட்டு வரியை குறைக்க, மாநகராட்சி வரி விதிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை மதிக்காமல், வீட்டு உரிமையாளரை அலைய வைக்கிறது மாநகராட்சி நிர்வாகம். கோவை நகரிலுள்ள பாப்பநாயக்கன் பாளையம் லட்சுமிமில் காலனி, வரிவிதிப்பு எண் 65728, கதவு எண் 99 ல், வசிப்பவர் சபாபதி. 1993 ம் ஆண்டு அவருடைய பழைய வீட்டு கட்டடத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் வரிவிதிப்பு செய்தபோது, அதிக வரிவிதிப்பு செய்ததாக கூறி, மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட, கோவை மாநகராட்சி சொத்து வரிவிதிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் 2009 ம் ஆண்டு மார்ச், 24 அன்று, வரிவிதிக்கப்பட்ட 2,225 ரூபாயில், 115 ரூபாயை குறைத்து, 2,142 ரூபாயை வசூலிக்க உத்தரவு பிறப்பித்தது. இது வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட வரிவிதிப்பு தொகையை, எதிர்காலத்தில் மாநகராட்சிக்கு செலுத்தப்படும் வரியில் கழித்து சமன்செய்து கொள்ள உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மாநகராட்சி அதிகாரிகளிடம் காண்பித்து வரிக்குறைப்பு செய்ய சபாபதி 7 ஆண்டுகளாக மாநகராட்சி தலைமை அலுவலகம், கிழக்கு மண்டல அலுவலகம் என அலுவலகங்களுக்கு சென்று வலியுறுத்தினார். மாநகராட்சி அதிகாரிகள் சரியான முறையில் பதில் அளிக்காமல், தீர்ப்பின் படி, வரிக்குறைப்பு செய்யாமல் இழுத்தடித்தனர்.

இது குறித்து பாதிப்புக்குள்ளான சபாபதி கூறியதாவது: கோவை மாநகராட்சி வரிவதிப்பு மேல்முறையீட்டு தீர்பாயத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் வரிக்குறைப்பு செய்யக்கோரி, மாநகராட்சி கமிஷனரை பலமுறை நேரில் சந்தித்து மனு கொடுத்தேன்.கிழக்கு மண்டல உதவிகமிஷனரை சந்தித்து தீர்ப்பாய நகலை கொடுத்து அதை அமல்படுத்த கோரிக்கை விடுத்தேன். ஆனால் வரிக்குறைப்பு செய்யவில்லை.

மாநகாரட்சி கமிஷனர், உதவி கமிஷனர், வரிவிதிப்பு அலுவலர் என்று ஒவ்வொருவரையும் சந்தித்து இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டினேன். அதிகாரிகளோ பணியாளர்களோ கண்டு கொள்ளவில்லை. 113 ரூபாய் ஒரு போதும் குறைக்க முடியாது என மறுத்து விட்டனர். எப்படியும் தீர்ப்பாய உத்தரவை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், ஐகோர்ட்டில் நீதி கேட்பேன்.இவ்வாறு சபாபதி கூறினார்.