Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வருவாயை பெருக்க 10 லட்சம் புதிய சொத்துகளுக்கு வரி விதிக்க மாநகராட்சி திட்டம்

Print PDF

தினகரன் 18.08.2010

வருவாயை பெருக்க 10 லட்சம் புதிய சொத்துகளுக்கு வரி விதிக்க மாநகராட்சி திட்டம்

புதுடெல்லி, ஆக. 18: மாநகராட்சி வருவாயை பெருக்க 10 லட்சம் புதிய சொத்துகளுக்கு வரி விதிப்பது என நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி மாநகராட்சி கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தத்தளிக்கிறது. இதனால், சொத்து வரி வசூல் மூலம் கூடுதல் நிதியை திரட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக மாநகராட்சி நிலைக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. நிலைக்குழு தலைவர் யோகேந்தர் சந்தோலியா, மாநகராட்சி ஆணையாளர் கே.எஸ்.மெஹ்ரா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிதியாண்டில் கூடுதலாக 10 லட்சம் சொத்துக்களை சொத்து வரிவிதிப்பின் கீழ் கொண்டு வருவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதற்கான விரிவான செயல் திட்டமும் உருவாக்கப்பட்டது.

அதுபற்றி சந்தோலியா கூறுகையில், "ஏற்கனவே சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதோடு மட்டுமல்லாமல் ரூ.5 லட்சத்துக்கு மேல் சொத்து வரியை நிலுவையில் வைத்துள்ள 4,816 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த சொத்துக்களை பறிமுதல் செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்றார்.

மாநகராட்சி ஆணையாளர் மெஹ்ரா கூறியதாவது:

இந்த நிதியாண்டில் கூடுதலாக 10 லட்சம் சொத்துக்களை வரி விதிப்பின் கீழ் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், சொத்துகளை அடையாளம் காணுவதற்காக இந்திய நில அளவைத்துறை, மின் விநியோக நிறுவனங்கள், எம். டி.என்.எல். ஆகியவற்றிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களையும் பெற்றுள்ளோம். இதுதவிர, வீடு வீடாக மாநகராட்சி அலுவலர்களும் புதிய சொத்துகளை வரி விதிப்பின் கீழ் கொண்டு வருகிறார்கள்.

பல்வேறு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட பட்டியல்களை, இப்போதுள்ள சொத்து வரிதாரர்கள் பட்டியலுடன் ஒப்பிட்டு சரிபார்த்து ஒழுங்குபடுத்தப்படும். பிறகு, கம்ப்யூட்டரில் விவரங்கள் இணைக்கப்படும். இந்தப் பணிகள் இன்னும் 6 மாத காலத்துக்கு நடக்கும். ஒரு வருடத்துக்குள் எல்லா சொத்துக்களும் சொத்து வரி விதிப்பின் கீழ் முழுமையாக கொண்டு வரப்பட்டு விடும். இவ்வாறு மெஹ்ரா கூறினார்.

2009&2010ம் நிதியாண்டில் சொத்து வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 9,80,589 ஆக இருந்தது. அந்த ஆண்டில் சொத்து வரி வசூல் இலக்கு ரூ.1,050 கோடியாக இருந்தது. ஆனால், ரூ.1,410 கோடி வசூலானது.