Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணி தீவிரம் பங்களிப்பு தொகை, மாத கட்டணம் நிர்ணயம்

Print PDF

தினகரன் 24.08.2010

நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணி தீவிரம் பங்களிப்பு தொகை, மாத கட்டணம் நிர்ணயம்

ஈரோடு, ஆக. 24: ஈரோடு மாநகராட்சி மற்றும் சூரம்பட்டி, காசிபாளையம், வீரப்பன்சத்திரம், பெரியசேமூர் நகராட்சி பகுதிகளை ஒருங்கிணைத்து ரூ.209 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி மற்றும் நகராட்சி நிதியுடன், ஜெர்மன் நிதி ஆதாரத்துடன் சேர்த்து பொதுமக்கள் பங்களிப்பு தொகையையும் வசூலித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டு அதன்படி பணி நடந்து வருகிறது.

ஈரோடு மாநகராட்சியுடன் மற்ற நகராட்சிகள் இணைந்த போதிலும் சூரம்பட்டி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை வெண்டிபாளையத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்ட அனுமதி அளித்தால் மட்டுமே பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் சேர முடியும் என சூரம்பட்டி நகராட்சி நிர்வாகம் கூறி விட்டது. இதனால் இதர பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் துவங்கிய போதிலும் சூரம்பட்டி நகராட்சியில் மட்டும் பணிகள் துவங்காமல் இருந்தது. இந்நிலையில் சூரம்பட்டி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டுவதற்கு அனுமதி அளித்ததால் தற்சமயம் சூரம்பட்டி நகராட்சியிலும் பொதுமக்களிடம் இருந்து பங்களிப்பு டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தற்சமயம் சூரம்பட்டி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. இளங்கோ வீதி, கம்பர் வீதி போன்ற வீதிகளில் வீடுகளில் வெளியேறும் கழிவுநீரை ஒருங்கிணைத்து குழாய் மூலமாக கொண்டு செல்லும் வகையில் ஏற்கனவே உள்ள சாக்கடையுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது.

இதேபோன்று, வீரப்பன்சத்திரம் நகராட்சியில் சி.என்.சி., கல்லூரி, பாப்பாத்திகாடு, சம்பத்நகர், மாணிக்கம்பாளையம் பகுதியிலும் பாதாள சாக்கடை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதே போன்று காசிபாளையம், பெரியசேமூர் நகராட்சி பகுதிகளிலும் பாதாள சாக்கடை கட்டும் பணிக்காக சாலைகளில் பள்ளம் தோண்டும் பணி நடக்கிறது. பாதாள சாக்கடை பணிகளை செய்வதற்கு ஏற்கனவே திட்டமிட்டபடி உள்ளாட்சி நிர்வாகங்கள் பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக டெபாசிட் தொகையை வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: பொதுமக்களிடம் இருந்து பங்களிப்பு தொகை வசூலிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு 500 சதுர அடி வரை டெபாசிட் தொகை ரூ.5 ஆயிரம், 500 முதல் 1200 சதுரஅடி வரை உள்ள வீடுகளுக்கு ரூ.7 ஆயிரம், 1200 முதல் 2400 சதுர அடி வரை ரூ.9 ஆயிரம், 2400 சதுர அடிக்கு மேல் ரூ.15 ஆயிரம் டெபாசிட் தொகையும் செலுத்த வேண்டும்.

பாதாள சாக்கடை கட்டி முடித்த பிறகு ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் மாதந்தோறும் வாடகை கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி மாதாந்திர வாடகையாக 500 சதுரஅடிக்குள் உள்ளவர்களுக்கு ரூ. 70ம், 500 முதல் 1200 சதுரஅடி வரை ரூ. 100ம், 1200 முதல் முதல் 2400 சதுர அடி வரை ரூ.150, 2400 சதுர அடிக்கு மேல் இருந்தால் ரூ.200 வீதம் மாத வாடகை வசூலிக்கப்படும்.

வணிக நிறுவனங்களுக்கு 500 சதுரஅடி வரை ரூ.10 ஆயிரம், 500 முதல் 1200 சதுரஅடி வரை ரூ.21 ஆயிரம், 1200 முதல் முதல் 2400 சதுர அடி வரை ரூ.27 ஆயிரம், 2400 சதுர அடிக்கு மேல் இருந்தால் ரூ.75 ஆயிரம் டெபாசிட் தொகையாக கட்ட வேண்டும்.

அதேபோல வணிக நிறுவனங்களுக்கு மாதந்தோறும் வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர வாடகையாக 500 சதுரஅடிக்குள் உள்ளவர்களுக்கு ரூ.140, 500 முதல் 1200 சதுரஅடி வரை ரூ.300ம், 1200 முதல் முதல் 2400 சதுரஅடி வரை ரூ.450, 2400 சதுர அடிக்கு மேல் ரூ.1000 வீதம் மாத வாடகை வசூலிக்கப்படும். இதுதவிர சிறப்பு இணைப்புக்கு ரூ.1250 செலுத்த வேண்டும். இவ்வாறு நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.