Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி குடிநீர்க் கட்டண உயர்வைக் கைவிட வலியுறுத்தல்

Print PDF

தினமணி 30.08.2010

மாநகராட்சி குடிநீர்க் கட்டண உயர்வைக் கைவிட வலியுறுத்தல்

ஈரோடு, ஆக. 29: குடிநீர்க் கட்டண உயர்வைக் கைவிட வேண்டும் என்று, ஈரோடு வரிசெலுத்துவோர் மக்கள் நல்வாழ்வுச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத் தலைவர் டி..வெங்கடாசலம், துணைத் தலைவர் கே.ஆர்.பாலசுப்பிரமணியம், பொருளாளர் ஆர்.நல்லசாமி, செயலர் ந.பாரதி மற்றும் நிர்வாகிகள், மாநகராட்சி மேயர், ஆணையரிடம் வழங்கிய மனு விவரம்:

காவிரிக் கரையோரம் ஈரோடு மாநகராட்சி அமைந்திருந்த போதிலும், மாநகர மக்களுக்கு நாள்தோறும் சீரான, தட்டுப்பாடற்ற குடிநீர் வழங்க இயலாத நிலையில் மாநகராட்சி உள்ளது. மழைக்காலத்தில் குடிநீர்க் குழாயில் மண் அடைத்துக் கொள்கிறது என்றும், கோடை காலத்தில் மின்வெட்டு, ஆற்றில் தண்ணீர் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சில பகுதிகளில் வாரத்திற்கு இருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சில பகுதிகளில் நடுநிசியில்தான் தண்ணீர் விடப்படுகிறது. போதுமான குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், குடிநீர் இணைப்புக்கான டெபாசிட் தொகையையும், கட்டணத்தையும் பலமடங்கு உயர்த்த மாநகராட்சி முயற்சித்து வருகிறது. குடிநீர் விநியோகம் சேவை மனப்பான்மையுடன் இருக்க வேண்டுமே தவிர, வணிக நோக்கில் இருக்கக் கூடாது. மேட்டூரில் இருந்து குழாய் மூலம் ஈரோட்டுக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் நிறைவேற்றப்படும் வரை கட்டணத்தை உயர்த்தக் கூடாது.