Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி சொத்து குத்தகை விடப்படாது நிலைக்குழு அதிரடி முடிவு

Print PDF

தினகரன் 08.09.2010

மாநகராட்சி சொத்து குத்தகை விடப்படாது நிலைக்குழு அதிரடி முடிவு

பெங்களூர், செப். 8: பெருநகர் மாநகராட்சிக்கு சொந்தமான சொத்துகளை இனி யாருக்கும் குத்தகை வழங்காமல் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக சொத்து பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினர் கீதா சீனிவாசரெட்டி தெரிவித்தார்.

பெங்களூர் மாநாகராட்சியின் 2010&11ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மீது விவாதம் கடந்த ஒருவாரமாக நடந்து வருகிறது. மாநகராட்சி கூட்டத்தில் நேற்று சொத்து பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினர் கீதா சீனிவாசரெட்டி பேசியதாவது:

மாநகராட்சிக்கு சொந்தமான 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துகள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கல்வி நிலையம், மருத்துவமனை, முதியோர் இல்லம், வர்த்தக கட்டிடம் கட்டி லட்சகணக்கில் லாபம் சம்பாதித்து வருகிறார்கள். மாநகரின் இருதய பகுதியில் கோடிக்கணக்கான மதிப்புள்ள மாநகராட்சி சொத்தை குத்தகை கொடுத்துள்ளதால், மாநகராட்சிக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

மாநகரில் பெரும்பாலான நிலம் மற்றும் கட்டிடங்களை சமூக சேவை என்ற அடிப்படையில் கல்வி நிலையம் தொடங்க குத்தகை எடுத்துள்ள அறககட்டளைகள் கல்வியை வியாபாரமாக்கி மாணவர்களிடம் ஆயிரம் கணக்கில் நன்கொடை வசூலித்து வருகிறார்கள். சிலர் நிலத்தை குத்தகை எடுத்து பெரிய வர்த்தக நிலையங்கள், அப்பார்ட்மெண்ட்கள் கட்டி கோடிக்கணக்கில் லாபம் பார்த்து வருகிறார்கள். இவர்கள் மூலம் மாநகராட்சிக்கு நூற்றுககணக்கில் மட்டுமே வாடகை கிடைக்கிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட சொத்துகளின் குத்தகை காலம் முடிந்திருந்தும், இன்னும் மாநகராட்சியிடம் ஒப்படைக்காமல் காலம் கடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

இதை தவிர்க்கும் நோக்கத்தில் இனி மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் அல்லது நிலம் ஆகிய சொத்துகளை குத்தகை விடாமல் தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது குத்தகை காலம் முடிந்துள்ள சொத்துகளை மீட்பதுடன், மீண்டும் புதுப்பித்து கொடுக்காமல் தவிர்க்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது குத்தகையில் இருக்கும் கட்டிடம், நிலத்திற்கு தற்போதைய மார்க்கெட் நிலவரத்திற்கு ஏற்ற வகையில் வாடகை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நிலைக்குழு உறுப்பினர் கீதா சீனிவாசரெட்டியின் அறிவிப்புக்கு கட்சி பேதம் இல்லாமல், அனைத்து கவுன்சிலர்களும் மேஜையை தட்டி ஆரவாரம் செய்து ஒப்புதல் வழங்கினர்.