Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரி செலுத்துவதில் அலட்சியம்! தொடரும் நிதி இழப்பால் அதிகாரிகள் கலக்கம்

Print PDF

தினமலர் 14.09.2010

வரி செலுத்துவதில் அலட்சியம்! தொடரும் நிதி இழப்பால் அதிகாரிகள் கலக்கம்

சேலம்: சேலம் மாநகராட்சியில் பொதுமக்கள் எளிமையாக வரி செலுத்த பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலோனோர் வரி செலுத்தாமல் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், மாநகராட்சி கடை வாடகை, தொழில் வரி உள்ளிட்டவற்றின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. னால், மாநகரில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் முறையாக வரி செலுத்துவது கிடையாது.ஆண்டுக்கணக்கில் பெரும்பாலோனோர் வரியை செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சியில் பட்ஜெட் பற்றாக்குறை தாக்கல் செய்யப்படுகிறது. மாநகராட்சியில் வருவாயை பெருக்க மாநகராட்சி சார்பில் வரி வசூல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நான்கு மண்டல அலுவலகங்களிலும் வரியை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தவிர, செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் சிறப்பு வரி வசூல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வரி வசூல் வானம் மூலம் பொதுமக்கள் வசதிக்கும் பகுதிக்கே வந்து மாநகராட்சி அதிகாரிகள் வரி வசூல் பணியில் ஈடுபடுகின்றனர்.

மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வரியை எளிமையாக செலுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், பல வார்டுகளில் பொதுமக்கள் வரியை செலுத்துவதில் அலட்சியம் காட்டுகின்றனர். நடப்பு 2010 மார்ச் 31 வரை சொத்துவரி நிலுவை தொகை நான்கு கோடியே 81 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.நடப்பு 2010 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் வரை நான்கு கோடியே 89 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் நிலுவை தொகை வசூல் செய்யப்பட வேண்டும். மார்ச் வரை குடிநீர் கட்டணம் ஆறு கோடியே 76 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் நிலுவை தொகை உள்ளது. செப்டம்பர் வரை ஆறு கோடியே மூன்று லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் நிலுவை தொகை வசூல் செய்யப்பட வேண்டும்.வழித்தட கிராமப்புற பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புக்களுக்கான கட்டணம் மார்ச் வரை 24 லட்சம், ஏப்ரல்- செப்டம்பர் வரை 81 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் நிலுவை தொகை வசூல் செய்யப்பட வேண்டும். தொழில் வரி மூலம் மார்ச் வரை 91 லட்சத்து 42 ஆயிரம், ஏப்ரல்-செப்டம்பர் வரை ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் நிலுவை தொகை வசூல் செய்யப்பட வேண்டும்.

சில ஆண்டாக சேலம் மாநகராட்சியில் புதிதாக எந்த திட்டப்பணிகளை மேற்கொள்வதாக இருந்தாலும், அரசின் மானியம் மற்றும் உலக வங்கியின் கடன் ஆகியவற்றையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. இந்த சூழலில், கோடிக்கணக்கில் வரித்தொகை நிலுவையாக இருப்பது அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.வரி வசூல் பணிக்காக பல்வேறு சிறப்பு முகாம்கள் மற்றும் நடமாடும் வரி வசூல் வாகனம் மண்டல அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தாங்கள் வசிக்கும் அடிப்படை பிரச்னைகளுக்காக உரிமையோடு குரல் கொடுக்கும் பொதுமக்கள், அவர்களாகவே முன் வந்து வரி பணத்தை செலுத்த வேண்டியது அவசியமாகும்.