Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்டடங்களுக்கான உடனடி வரி விதிப்பு சேவை

Print PDF

தினமணி 14.09.2010

கட்டடங்களுக்கான உடனடி வரி விதிப்பு சேவை

திருநெல்வேலி, செப். 13: திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் கட்டடங்களுக்கான உடனடி வரி விதிப்பு சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இது குறித்து திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அ.லெ. சுப்பிரமணியன் நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: திருநெல்வேலி மாநகராட்சி ஒளிவுமறைவற்ற வெளிப்படையான நிர்வாகத்தை செயல்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கட்டடங்களுக்கான உடனடி வரி விதிப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு கட்டடத்தின் உரிமையாளரே, தாம் கட்டியுள்ள கட்டடத்தின் வெளிப்புற அளவு, கட்டட பயன்பாடு, கூரையின் தன்மை, கட்டுமானம் முடிவுற்ற காலம், கட்டுமானம் அமைந்துள்ள வார்டு எண், இடம் ஆகிய விவரங்களை மாநகராட்சி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். அத்துடன் கட்டடம் உள்ள நிலத்தின் பத்திரம் நகல், கட்டட அனுமதி பெற்ற வரைபட ஆவணம் (தலா 2 பிரதிகள்) ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பத்தை பெறும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் ஆகியோர், அந்த கட்டடத்தை உடனே ஆய்வுசெய்து, அன்றைய தினமே வரி செலுத்துவதற்கான சிறப்பு அறிவிப்பு ஆணையை வெளியிடுவார்கள். அதே வேளையில் ஆவணங்களில் குறைபாடும், தகவல்கள் தவறாக இருந்தால் மாநகராட்சி கொடுத்த ஆணை ரத்து செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு, புதிய வரி விதிக்கப்படும்.

இதன் மூலம் மாநகராட்சி நிர்வாகத்தின் ஒளிவுமறைவற்ற, வெளிப்படையான தன்மை உறுதி செய்யப்படும். மாநகராட்சியின் வருமானம் அதிகரிக்கும், மக்கள் எளிதாக வரி செலுத்த முடியும், கால விரயம் தவிர்க்கப்படும் என்றார் மேயர். முன்னதாக ஏற்கெனவே விண்ணப்பித்த 3 பேருக்கு வரி செலுத்துவதற்கான சிறப்பு ஆணையை மேயர் அ.லெ. சுப்பிரமணியன் வழங்கி, திட்டத்தை தொடங்கிவைத்தார்.

இந் நிகழ்ச்சியில் துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் என். சுப்பையன், செயற்பொறியாளர் நாராயணன் நாயர், மண்டலத் தலைவர்கள் எஸ்.விஸ்வநாதன், பூ. சுப்பிரமணியன், எஸ்.எஸ். முகம்மது மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.