Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி மாநகராட்சி வரி வசூல் வாகனம்ரூ.30 லட்சம் வசூலித்து புதிய சாதனை

Print PDF

தினமலர் 16.09.2010

திருச்சி மாநகராட்சி வரி வசூல் வாகனம்ரூ.30 லட்சம் வசூலித்து புதிய சாதனை

திருச்சி: திருச்சி மாநகராட்சி வரி வசூல் வாகனம் செயல்பாடு துவங்கி, ஒரு மாதம் நிறைவடையும் முன்பே 30 லட்சம் ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.திருச்சி மாநகராட்சியில் சொத்து, குடிநீர், காலி மனை உள்ளிட்ட இனங்களில் வரி வசூலிக்கப்படுகிறது. வரி அல்லாத இனங்களான கடை வாடகை, ஏலத் தொகை போன்றவையும் வசூலிக்கப்படுகிறது. மாநரகாட்சியிலிருந்து வரி மற்றும் வரி அல்லாத இனங்கள் மூலம் வசூலாகும் தொகை வங்கியில் செலுத்தி முறையாக செலவிடப்படுகிறது.மாநகராட்சி அலுவலகம், ஸ்ரீரங்கம், பொன்மலை, கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம் ஆகிய நான்கு கோட்ட அலுவலகங்களிலும் வரி செலுத்தலாம்.

 வரி முறையாக செலுத்தவர்கள் மீது, மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கிறது. இதனால், தற்போது வரி செலுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.வரி செலுத்த எண்ணும் சிலருக்கு இயற்கையாகவே பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். இதை உணர்ந்த திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பணத்தை வசூல் செய்யும் வகையில்,"நடமாடும் கம்ப்யூட்டர் வரி வசூல் மைய வாகனம்' திட்டத்தை செயல்படுத்த துவங்கியது.வரி வசூல் வாகனம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி துவங்கப்பட்டது. இதில், இரண்டு வரி செலுத்தும் கவுன்டர்கள் உள்ளன.

மாதத்தில் வாரம் ஒரு கோட்டம் வீதம் நான்கு கோட்டத்தில் இந்த வாகனம் நிறுத்தப்படும். இதற்கான இடம், நேரம் ஏற்கனவே முன்னதாக அறிவிக்கப்படுகிறது.இதனால், அந்தந்த பகுதி மக்கள் அலைச்சல், நேரம் மிச்சமாவதோடு மாநகராட்சிக்கு வரவேண்டிய வரியும் உடனடியாக கிடைக்கிறது. "ஆக்ஸிஸ்' வங்கி ஊழியர்கள் பணத்தை பெற்றுச் செல்கின்றனர். இந்த வாகனம் செயல்பாடு துவங்கி நேற்றுடன் ஒரு மாதம் முடிவடைகிறது. ஒரு மாதத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே 30 லட்சம் ரூபாய் வசூலாகி சாதனை படைத்துள்ளது.